Published : 07 Dec 2018 03:19 PM
Last Updated : 07 Dec 2018 03:19 PM
டிசம்பர் 21-ம் தேதி வெளியீடு சர்ச்சை தொடர்பாக உள்குத்து அரசியல் தான் காரணம் என விஷ்ணு விஷால் கடுமையாக சாடியுள்ளார்.
முதலாவதாக டிசம்பர் 21-ம் தேதி வெளியீடாக ஜெயம் ரவி நடித்துள்ள 'அடங்க மறு', விஜய் சேதுபதி நடித்துள்ள 'சீதக்காதி', விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் உறுதிப்படுத்தியது தயாரிப்பாளர் சங்கம். அதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்து தயாரித்துள்ள 'மாரி 2' மற்றும் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 'கனா' ஆகியவை இப்போட்டியில் இணைந்தன.
இதனால், இதர படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தார்கள். மேலும், தொடர்ச்சியாகக் குழப்பம் நீடித்ததால் டிசம்பர் 21-ம் தேதி யார் வேண்டுமானாலும் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து விலகிக் கொண்டது.
டிசம்பர் 21-ம் தேதி வெளியீட்டு சர்ச்சையில் தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் உள்குத்து அரசியலே காரணம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார் விஷ்ணு விஷால். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
விதிமுறைகள்.. விதிகள் இன்மை.. விதிமுறைகளை சரியாக கடைப்பிடிப்பவர்களுக்கு இப்படித்தான் நீதி வழங்கப்படுமா? இது முதன்முறையல்ல. இரண்டாவது முறையாக இது எனக்கு நடக்கிறது.
அப்புறம் எதற்கு விதிகள்? சிஸ்டம் தோற்றுவிட்டது. உள்குத்து அரசியல். இருக்கட்டும்.. வெளிப்படையான அறிக்கை என்றால் என்னவென்று பிறருக்குத் தெரிவிக்கவே இதை சொல்கிறேன். அப்புறம்... டிசம்பர் 21-ல் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' வெளியாகிறது.
கடந்த ஒரு மாதத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் அனைத்துக் கூட்டங்களிலும் கலந்து கொண்ட வகையில் சொல்கிறேன். இத்தகை நிலைமைக்கெல்லாம் நிச்சயமாக விஷால் காரணமல்ல. நான் ஏற்கெனவே சொன்னதுபோல் எல்லாம் உள்குத்து அரசியல். விதிமுறைகள் எல்லாம் அதைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே.
இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT