Published : 05 Dec 2018 11:56 AM
Last Updated : 05 Dec 2018 11:56 AM
2019-ம் ஆண்டு மே மாதம் சீனாவில் சுமார் 47,000 3டி திரைகளில் வெளியாகிறது '2.0'
லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் '2.0'. ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
தமிழை விட தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நல்ல வசூல் செய்து வருவதால் படக்குழுவினர் சந்தோஷமடைந்துள்ளனர். மேலும் 3டி தொழில்நுட்பம், 4டி ஒலி நுட்பம் என உலக அளவில் சினிமா தொழில்நுட்பத்துக்கு சவால்விடும் வகையில் இப்படம் இருப்பதாக இந்தி திரையுலக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படம் 2019-ம் ஆண்டு மே மாதத்தில் சீனாவில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது லைகா நிறுவனம்.
இது தொடர்பாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சோனி, வார்னர் பிரதர்ஸ், யூனிவர்சல், டிஸ்னி உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களின் படங்களைத் தொடர்ந்து சீனாவில் வெளியிட்டு வரும் HY நிறுவனம், லைகாவுடன் இணைந்து '2.0' படத்தை சீனாவில் வெளியிடுகிறது..
2019-ம் ஆண்டு மே மாதம் இப்படம் 10,000 திரையரங்குகளில், 56,000 திரைகளில் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகும். இதில் சுமார் 47,000 திரைகள் 3டி திரைகள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டுப் படங்களில் சீனாவில் மிக அதிகமாக 3டி திரையில் வெளியாகும் படமாக '2.0' இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் பொருட்செலவுக்கு சீனாவில் வெளியிட்டால் மட்டுமே லாபமடைய முடியும் என்ற சூழல் நிலவியது. இதனால், உடனடியாக சீனா வெளியீட்டைத் துரிதப்படுத்தி 2019-ம் ஆண்டு மே மாதம் என்று முடிவு செய்துள்ளார்கள்.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த 'முத்து' சீனாவில் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை ரஜினிக்கு உருவாக்கியது. அதற்குப் பிறகு தமிழ்ப் படங்களிலேயே '2.0' படம் தான் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT