Published : 17 Dec 2018 01:09 PM
Last Updated : 17 Dec 2018 01:09 PM
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார்.
'விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மார்கழி மாதம் துவங்கிவிட்டதாக, அதற்கு முன்பே பூஜை போட்டுவிட வேண்டும் என்று டிசம்பர் 14-ம் தேதி பூஜை நடத்தினார்கள்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்கின்றனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித் நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘பில்லா’, ‘மங்காத்தா’ மற்றும் ‘ஆரம்பம்’ படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படபூஜை அன்றே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இதில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் நடிக்கவுள்ளார்.
'பிங்க்' படத்தில் 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் முக்கிய கதாபாத்திரமாக வருவார்கள். அதில் 3 ஆண்களில் ஒருவராக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளார். இவர் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' மற்றும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் பயங்கரமாக உடலைக் குறைத்து, இதர பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சமூகவலைத்தளத்தில் இவரது படங்கள் வைரலாக பரவியது. இதற்கு பின்னணி, அஜித் படத்தில் நடிக்கவுள்ளது தான் என்பது இப்போது தெளிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT