Last Updated : 19 Dec, 2018 04:54 PM

 

Published : 19 Dec 2018 04:54 PM
Last Updated : 19 Dec 2018 04:54 PM

விஷால் நிறைய கிரிமினல் வேலைகள் செய்துள்ளார்; தமிழ் ராக்கர்ஸில் அவருக்கு ஷேர்: ஏ.எல்.அழகப்பன் குற்றச்சாட்டு

விஷால் நிறைய கிரிமினல் வேலைகள் செய்துள்ளார்; தமிழ் ராக்கர்ஸில் அவருக்கு ஷேர் இருக்கிறது என்று தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் தலைமையிலான அணி நிர்வாகத்துக்கு வந்தது. அப்போது திருட்டு விசிடி ஒழிப்பு, படங்கள் வெளியீட்டுக் குழு என பல வாக்குறுதிகளை அளித்தது. அதன்படி இந்த நிர்வாகம் செயல்படவில்லை என்று எதிர் தரப்பினர் பலமுறை குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

ஜே.கே.ரித்தீஷ், சுரேஷ் காமாட்சி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட எதிர் தரப்பு, தற்போதுள்ள நிர்வாகத்திடம் 18 கேள்விகளை முன்வைத்துள்ளனர். இதற்கு, தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து எதிர்தரப்பு அணியினர் ஒன்றிணைந்து தி.நகர் மற்றும் ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டனர். இதனால் பெரும் பரபரப்பு உண்டானது.

ஜெமினி மேம்பாலத்துக்கு அருகே உள்ள தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டுவிட்டு, பத்திரிகையாளர்கள் மத்தியில் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் பேசியதாவது:

''நாங்கள் கேட்கும் விளக்கத்துக்கு எல்லாம் பதில் சொல்லிவிட்டு, சங்கத்துக்குள் வரட்டும். இல்லையென்றால் ராஜினாமா செய்துவிட்டு வெளியே செல்லட்டும். எங்களுடன் இப்போது 300 தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். பொதுக்குழு கூட்டினால் அனைவருமே வருவார்கள்.

இதற்கு முன்பாக நடந்த பொதுக்குழுவில் கேள்வி கேட்டதற்கு, ஜனகனமண பாட்டு பாடிவிட்டு ஓடிவிட்டனர். அதற்குப் பிறகு ஒருவருடமாகியும் பொதுக்குழுவை கூட்டவே இல்லை. சங்கத்தின் கணக்கில் இருந்த பணத்தை காணவில்லை.

விஷால் நிறைய கிரிமினல் வேலைகளைச் செய்துள்ளார். தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் அவருக்கு ஷேர் இருப்பதாகச் சொல்கிறார்கள். தமிழ் படத்தை கன்னடத்தில் போய் வெளியிடமுடியாது. அது மாதிரியான சட்டதிட்டங்கள் கன்னட தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் இருக்கிறது. நம்ம கவுன்சில் சட்டதிட்டத்தின்படியும், கன்னடப் படத்தை வெளியிட மாட்டோம். இப்போது, விஷாலே கன்னடப் படத்தின் தமிழ் டப்பிங்கை வாங்கி வெளியிடுகிறார்.

தொலைக்காட்சிகளிலிருந்து எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்பதே தெரியவில்லை. இது தொடர்பான விவரம், எந்தவொரு உறுப்பினருக்குமே தெரியவில்லை. இனிமேல், அவர்கள் செய்வதற்கும் வாய்ப்பில்லை. விஷால் உடனடியாக பதவி விலக வேண்டும்.

தற்போது சங்கத்தில் துணைத்தலைவர்களாக இருக்கும் கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ் இருவருமே தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வந்ததே கிடையாது. இந்தச் சங்கத்துக்கு தலைவர் விஷால் வந்து 7 மாதமாகிறது. அப்புறம் எப்படி சங்கம் செயல்படும்''.

இவ்வாறு ஏ.எல்.அழகப்பன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x