Published : 01 Dec 2018 12:24 PM
Last Updated : 01 Dec 2018 12:24 PM
டெல்டா மாவட்ட கிராமம் ஒன்றுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பேருந்தில் சென்ற வீடியோ வைரலாகிக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தை மிரட்டிவந்த கஜா புயல் கடந்த 16-ம் தேதி நாகை வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் 7 மாவட்டங்களும் பாதிப்புக்குள்ளாகின. கஜா புயல் தாக்கியதால் டெல்டா மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் வரலாறு காணாத பேரழிவு உண்டானது. முக்கிய தொழிலான தென்னை, பலா, முந்திரி நெற்பயிர் விவசாயம் அடியோடு அழிந்துப்போனது. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தன.
இரண்டாவது முறையாக நவம்பர் 30-ம் தேதி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல். அப்போது ஒவ்வொரு ஊருக்கும் தன்னுடைய காரில் சென்று மக்களைப் பார்த்து வந்தார். ஒருகட்டத்தில், சின்னஞ்சிறிய கிராமத்துக்கு காரில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. ‘இதுக்கு மேல காரு போகாதுங்க. வுடமாட்டாங்க’ என்று சொல்லப்பட்டது.
அப்போது தூரத்தில் கிராமம் நோக்கி பஸ் ஒன்று வந்துகொண்டிருந்தது. ‘அந்தக் கிராமத்துக்கு பஸ் போகும்தானே’ என்று கமல் ஊர்க்காரர்களிடம் கேட்டார். போகும் என்றார்கள். உடனே பஸ்சை கைகாட்டி நிறுத்திய கமல், அந்த பஸ்சில் சட்டென்று ஏறிக்கொண்டார். உடனே சுதாரித்துக்கொண்ட கமலுடன் வந்திருந்த மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களும் பஸ்சில் ஏறிக்கொண்டார்கள்.
மேலே கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு நின்று கொண்டே கண்டக்டரிடம் காசு கொடுத்து டிக்கெட் பெற்றுக் கொண்டார் கமல். பஸ்சில் இருந்த பயணிகளுக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ‘அடுத்த சி.எம்க்கு வண்டி ஓட்றீங்க” என்று யாரோ பஸ் டிரைவரிடம் சொல்ல, டிரைவர் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. ‘நீங்க பஸ்ல வந்ததுதான் பாதுகாப்பு’ என்று கமலிடம் சொன்னார் டிரைவர்.
டெல்டா மாவட்டத்தில் துயரத்தில் இருக்கிற மக்களை சந்திக்க, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், பஸ்சில் சென்ற வீடியோவானது, தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT