Published : 21 Dec 2018 09:32 AM
Last Updated : 21 Dec 2018 09:32 AM
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஜோடி’ ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ரியோ. ‘கனா’ படத்தில் நடித்துள்ள இவர், அடுத்து சிவகார்த்தி கேயன் தயாரித்துவரும் புதிய படத்தின் ஹீரோ, ‘காதல் ஒன்று கண்டேன்’ குறும்பட நடிப்பு என கோலிவுட் வட்டாரத்திலும் பிஸியாகியுள்ளார். அவருடன் ஒரு நேர்காணல்...
‘சரவணன் மீனாட்சி’ தொடர் நிறைவடைந் ததும் ரியாலிட்டி நிகழ்ச்சி, திரைப்படம், குறும் பட நடிப்பு என உங்கள் டிராக் மாறுகிறதே?
தொகுப்பாளராக ஓடிக்கிட்டிருந்த நேரத் துல, என்னால் நடிக்கவும் முடியும்னு நம்பிக்கை கொடுத்த தொடரா ‘சரவணன் மீனாட்சி’ அமைந்தது. இப்போ அதே சேனலில் ‘ஜோடி’ மாதிரி ஒரு பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சியோட தொகுப்பாளர் பொறுப்பு. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இப்படி உற்சாகமா வேலை செய்யும் நேரத்தில் சினிமா, குறும்படம் என்றும் ஓட ஆரம்பிச்சிட்டேன். தனித்துவமா ஏதாவது ஒண்ணைத் தொடணுங்கிற ஆர்வத்தில் இருந்த எனக்கு இன்னைக்கு கிடைச்சிருக்கும் இடம் ரொம்பவே பெருசு.
‘சரவணன் மீனாட்சி’ தொடரில் கடைசி சீசன் சரவணனாக வந்தீர்கள். பெரும்பாலும் சீரியல்களில் நாயகிக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். உங்கள் அனுபவம்?
உண்மைதான். அதுவும் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நான் நடிப்பதற்கு முன்பு செந்தில், கவின், வெற்றி, இர்பான்னு நண்பர்கள் நடிச்சிருக்காங்க. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் பொறுப்பானவங்களா இருந்தாங்க. எனக்கு ஜாலி, பொறுப்புன்னு எல்லாம் கலந்து இருந்தது. அதுவும் நாயகி பக்கம் கதையோட டிராக் நகர்ந்துவரும் சூழலில், இடையிடையே கிடைக்கும் காட்சிகளில் ஸ்கோர் வாங்கணும். அதைச் சரியா பயன்படுத்திக்கிட்டேன். அதனால்தான் எனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்க முடிந்தது.
‘கனா’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நீங்கள் நடிக்கும் படம் குறித்து...
யூ-டியூப்ல பிரபலமாக உள்ள ‘பிளாக் ஷீப்’ குழுவில் இருக்கும் கார்த்திக் வேணுகோபால்தான் படத்தின் இயக்குநர். வெளியூர்ல இருந்து சென்னைக்கு புறப்பட்டு வர்ற இரு இளைஞர்களின் கதை.
நீங்கள் உதவி இயக்குநராக இருந்தவராச்சே. திரைப்பட இயக்கத்திலும் ஆசை வந்திருக்குமே?
இப்போ நடிக்கிறதும், தொகுப்பாளராக இருப்பதுமே போதும். டிவியில நம்ம முகம் வந்தா போதும்னு இருந்தேன். ஆனா, இன்னைக்கு நல்ல விஷயங்களை அனுபவிக்கிறேன். அடுத்த இலக்கு எது என்று கேட்டால், கண்டிப்பாக நடிப்புதான். ஹீரோவாகத்தான் நடிக்கணும் என்பதுகூட கிடையாது. எது கிடைக்குதோ, அதைச் சரியா செய்யணும். அது போதும்.
உங்கள் குறும்படம் வெளிவரப் போகிறதே, அதுபற்றி...
‘காதல் ஒன்று கண்டேன்’ குறும்படத்தில், காதல்தான் களம். ‘ஏனோ வானிலை மாறுதே’ குறும்படத்தை இயக்கிய புனித் எடுத்திருக்கார். நானும், தொகுப்பாளினி நட்சத்திராவும் நடிச்சிருக்கோம். இது என் முதல் குறும்படம். ரொம்ப பிடிச்சு, ரசிச்சு நடிச்சிருக்கேன். கட்டாயம் நல்ல பேரு கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT