Published : 26 Dec 2018 12:10 PM
Last Updated : 26 Dec 2018 12:10 PM
என் அக்கா எனக்கு அப்பா மாதிரி. அக்கா எடுத்த முடிவால், கடனில்லாத நிலைக்கு வந்தோம் என்று நெகிழ்ச்சியுடன் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டார்.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கனா'. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தை பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி வருகிறார்கள்.
'கனா' படம் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சி ஒன்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில் சிவகார்த்திகேயன் தனது சகோதரி கெளரியுடன் கலந்து கொண்டார். அதில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:
''என் அக்கா கெளரி, என் மீது ரொம்பப் பிரியம் கொண்டவர். பிளஸ் 2-வில் அதிக மார்க வாங்கினார். அக்காவுக்கு டாக்டருக்குப் படிக்கவேண்டும் என்கிற ஆசை இருந்தது. சின்னக் குழந்தையாக இருக்கும் போதிருந்தே டாக்டர் டாக்டர் என்றுதான் சொல்லிக்கொண்டே இருந்தார்.
பிளஸ் 2-வில் நல்ல மார்க். ஆனா, நுழைவுத்தேர்வுல ஒரு மூணுமார்க் கம்மியாயிருச்சு அக்காவுக்கு. அப்போ அப்பா கூப்பிட்டு, ‘பரவாயில்லமா, கிட்டத்தட்ட 15 லட்சமாவும் போல இருக்கு. ப்ரீ சீட் இல்லாம, பணம் கட்டியே சீட் வாங்கிடலாம்னு சொன்னார். பணம் கடன் வாங்கியாச்சு. காலேஜுக்கும் போயாச்சு. இன்னும் ரெண்டு நிமிஷத்துல பணம் கட்டிடவேண்டியதுதான்.
அப்பதான் அக்கா, டக்குன்னு அப்பாகிட்ட, ‘வேணாம்பா. எனக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க. திரும்பவும் நுழைவுத்தேர்வு எழுதுறேன். ப்ரீ சீட் வாங்கியே படிக்கீறேம்பா’ன்னு சொல்லி, பணம் கட்டாமலே திரும்ப வைச்சாங்க அக்கா.
அதுக்கப்புறம் திரும்பவும் நுழைவுத்தேர்வு எழுதினாங்க. சீட் கிடைச்சிச்சு. அதுக்கப்புறம் நடந்ததுதான் அதிர்ச்சி. அப்புறம் கொஞ்ச நாள்ல அப்பா உடம்புமுடியாம இறந்துட்டாரு. அப்ப நானோ படிச்சிட்டிருக்கேன். அன்னிக்கி மட்டும் 15 லட்சம் ரூபாய் செலவு பண்ணி, சீட் வாங்கியிருந்தா, அப்பா கடனை வைச்சிட்டுப் போயிட்டாருன்னு கலங்கியிருப்போம். அக்காவும் படிச்சிட்டிருக்கற சூழல். நானும் படிச்சிட்டிருக்கேன். குடும்பம் என்னாகியிருக்கும்?
அக்கா சாமர்த்தியமா அப்ப எடுத்த முடிவு, எங்க குடும்பத்தையே காப்பாத்துச்சு. அக்காவாவது சீட் வாங்கி, அப்பாவை இருக்கும் போது பெருமைப்படுத்திட்டாங்க. அக்காவுக்கு அக்காவா, அக்காவே அப்பாவா இருந்து என்னை வளர்த்ததால, அதுக்குப் பிறகு என் அப்பாவுக்குக் கிடைக்கவேண்டிய மரியாதையையும் கவுரவத்தையும் என் அக்காவுக்குக் கிடைக்கச் செஞ்சேன். என் அக்கா, எனக்கு அப்பா மாதிரி!''.
இவ்வாறு சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT