Published : 03 Dec 2018 05:25 PM
Last Updated : 03 Dec 2018 05:25 PM
கஜா புயல் நிவாரண நிதியாக அஜித் 5 கோடி ரூபாய் கொடுத்தார் என்று வெளியான செய்திக்கு அஜித் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தை மிரட்டிவந்த கஜா புயல் கடந்த 16-ம் தேதி நாகை வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இம்மாவட்டங்களை மீட்டெடுக்க பல்வேறு தரப்பிலிருந்து நிவாரண நிதிகள் குவிந்து வருகின்றன. மேலும், தமிழக அரசும் இந்த மாவட்டங்களில் மின்சாரத்தை சீர் செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பல்வேறு திரையுலகினரும் தங்களுடைய ரசிகர் மன்றங்கள் மூலமாகவும், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியளித்தும் வருகிறார்கள். இதில் நடிகர் அஜித் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு 15 லட்சம் வழங்கினார்.
சேலத்தில் அஜித் படங்கள் அனைத்தையுமே மிகப் பிரம்மாண்டமாக வெளியிடுபவர் 7ஜி சிவா. இவர் அஜித்தின் தீவிர ரசிகர். நேற்று (டிசம்பர் 2) சேலத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் போது, “அனைவருமே அஜித் சார் ரூ.15 லட்சம் கொடுத்தார் என்று சொல்வார்கள். ரூ.15 லட்சம் கிடையாது. 5 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். தான் செய்த உதவிகளை வெளியே சொல்லாதது அவருடைய கேரக்டர். அவருடன் பெர்சனலாகப் பேசியிருக்கிறேன், பழகியிருக்கிறேன் என்பதால் எனக்குத் தெரியும். அஜித் சார் எதையுமே விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டார்” என்று பேசியுள்ளார் 7ஜி சிவா.
இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் வைரலாப் பரவியது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அஜித் 5 கோடி ரூபாய் கொடுத்தார் என்று பலரும் ட்வீட் செய்யவே, இந்த விவகாரம் சமூக வலைதளத்தை ஆட்கொண்டது.
இது தொடர்பாக அஜித் தரப்பில் விசாரித்த போது, “அஜித் சார் செய்யும் நன்கொடைகள் குறித்த தகவல்கள் அனைத்துமே செய்தித் தொடர்பாளர் வாயிலாகவே தெரிவிக்கப்படும். அல்லது சம்பந்தப்பட்டவர்கள் வாயிலாக அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்குச் சொல்லப்படும். ஆனால், இத்தகைய போலியான தகவல்களை அதுவும் மிகவும் உணர்வுபூர்வமான விஷயத்தில் இணையம் வாயிலாக பரப்பப்படுவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது” என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT