Published : 18 Dec 2018 08:59 AM
Last Updated : 18 Dec 2018 08:59 AM
‘‘இரண்டரை மணிநேர படம்னா முதலில் ஒரு ஓபனிங், நடுவில் ஒரு எதிர்பார்ப்பு, கடைசியா ஒரு நல்ல முடிவு என்று யோசிச்சா போதும். ஆனா, இந்த படத்தில் அப்படி யோசிக்க முடியல. ஒவ்வொரு 25 நிமிஷத்துக்கும் ஆர்வத்தை தூண்டுற சீன்கள் தேவைப்பட்டது. அது ரொம்ப கஷ்டமான வேலையா இருந்தது. ஆனாலும், மெனெக்கெட்டோம். இப்போ கிடைக்கும் விமர்சனங்கள் எங்களது உழைப்புக்கு ரொம்பவும் எனெர்ஜியா இருக்கு...’’ என்கிறார் ‘வெள்ள ராஜா’ சீரீஸ் இயக்குநர் குகன் சென்னியப்பன்.
பாபி சிம்ஹா, பார்வதி நாயர் நடிப்பில் அமேஸானின் முதல் தமிழ் பிரைம் வீடியோ தொடராக வெளிவந்திருக்கும் ‘வெள்ள ராஜா’ படத்துக்கு கிடைத்துவரும் அங்கீகாரம், வரவேற்பு, விமர்சனங்கள் பற்றி குகன் சென்னியப்பன் நம்மிடம் தொடர்ந்து பேசினார்.
ஒவ்வொரு அத்தியாயமாகவே வெளியிட்டிருக்கலாமே? எதுக்காக 10 சீரீஸையும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்தீங்க?
அதுக்கு அமேஸான்தான் காரணம். சமீபத்திய சீரீஸ் எல்லாமே அப்படித்தான் ரிலீஸ் செய்றாங்க. நேரம் கிடைக்கும்போது ரசிகர்கள் பார்த்துடுவாங்க என்ற எண்ணம் காரணமா இருக்கலாம். பரபரப்பு கூட்டுற சில அத்தியாயங்களை முதலில் ரிலீஸ் செய்து, அடுத்தடுத்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திட்டு, மற்ற சீரீஸை பிறகு வெளியிட்டால் இன்னும் கூடுதலா கவனம் பெறக்கூடும் என்பது என் கருத்து.
‘வெள்ள ராஜா’ கதைக்கு பாராட்டு குவிந்தாலும், கலவையான விமர்சனங்களும் வருதே?
சர்வதேச அளவில் வெளியாகுற சீரீஸ் என்பதால், கலவையான விமர்சனங்களைத் தவிர்க்க முடியாது. குறிப்பாக, இங்கு வெளிவரும் பல சீரீஸ்போல வன்முறை விஷயங்கள் இதில் பெரிதாக இல்லை. அதனால், பாசிடிவ் விமர்சனங்களே இருக்கு. தமிழில் இதுபோன்ற சீரீஸ் பக்கம் பார்வையாளர்களை இழுக்கணும், ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தணும் என்பதுதான் எங்கள் முக்கிய நோக்கம். அந்த வரிசையில், புதிய ஆடியன்ஸ் இதை ரொம்பவே கொண்டாடி ஏற்றுக்கொண்டனர். எங்கள் நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளோம்.
தொலைக்காட்சி தொடர்கள் - சீரீஸ் என்ன வித்தியாசம்?
இரண்டு மணி நேர படத்தை, 4 மணி நேரத்துக்கு கொடுப்பதுதான் சீரீஸ். ஆனால், சீரியல்கள் வேறு. அதற்கான ஆடியன்ஸ் ஃபேமிலி ஆடியன்ஸ். இதுபோன்ற சீரீஸ்கள், எல்லா தரப்புலயும் கவனம் ஈர்க்கும். அதோடு இதில் கொடுக்குற தரம், தயாரிப்பு, கலர்ஸ் எல்லாமே புதுமாதிரியான அனுபவத்தை ஏற்படுத்தும். ரொம்பவும் நுணுக்கமான வேலை அது.
‘‘ரயிலில் போய்க்கிட்டிருந்தேன். என்னதான் இருக் குன்னு 2 எபிஸோட்ஸ் ஓபன் பண்ணினேன். செல்போனை வைக்கவே முடியல. பத்தும் பார்த்து முடிச்சிட்டேன்’’ என்று ஒரு ரசிகர் மெசேஜ் அனுப்பினார். இதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் சீரீஸ் வேலை.
‘சவாரி’ என ஒரு படம், ‘வெள்ள ராஜா’ என ஒரு சீரீஸ் கொடுத்திருக்கீங்க. அடுத்து?
அது கிடைக்கும் வாய்ப்புகளை பொறுத்தது. எனக்கு த்ரில்லர் டிராமாவைவிட ஃபேன்டஸி ஆக்சன் த்ரில்லர்ல கதை கொடுக்கணும்னு ரொம்ப ஆர்வம் இருக்கு. அதுக் கான வேலைகளில்தான் இப்போ இறங்கியிருக்கிறேன். அது சீரீஸா அல்லது படமா என்பது, அமைகிற குழுவைப் பொறுத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT