Published : 31 Dec 2018 05:40 PM
Last Updated : 31 Dec 2018 05:40 PM
‘முனி’, ‘சிங்கம்’ போன்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால், கோலிவுட்டில் இரண்டாம் பாகங்களுக்கு என தனி மவுசு உருவானது. அதுவும், ‘முனி’ படத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்களும் ஹிட்டாகி, பார்ட்-2 ட்ரெண்டைக் கோலிவுட்டில் உருவாக்கிய பெருமை ராகவா லாரன்ஸையே சாரும்.
‘கோ 2’, ‘டார்லிங் 2’ என பார்ட்-2 படங்கள் மண்ணைக் கவ்விய கடந்த கால வரலாறுகள் கோலிவுட்டில் இருந்தாலும், அந்த வரலாற்றை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் களம் இறங்கி, இந்த வருடம் (2018) எடுக்கப்பட்ட பெரும்பாலான பார்ட்-2 படங்கள் தோல்வியைத்தான் தழுவின. வசூல் ரீதியாக வெற்றிபெற்ற சில படங்கள் கூட, விமர்சன ரீதியாகக் கொண்டாடப்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
இந்த வருடம் வெளியான பார்ட்-2 படங்களைப் பற்றிய பருந்துப் பார்வை இது...
சண்டக்கோழி 2
லிங்குசாமி இயக்கத்தில் 2005-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘சண்டக்கோழி’. விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லால், சுமன் ஷெட்டி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்தனர். ஜீவா மற்றும் நிரவ் ஷா என இருவர் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார்.
சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், 12 வருடங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்டது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அமைந்த இந்தப் படத்தில், விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்தார். ஆனால், முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் ரசிகர்களைக் கவரவில்லை என்பது ஒருபுறமிருக்க, வசூலும் பெரிதாக இல்லை.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்திய லிங்குசாமி, இந்தக் காலகட்டத்துக்கு ஏற்றதாகக் கதை இருக்க வேண்டும் என்பதை அடியோடு மறந்துவிட்டார். யுவனின் இசையில் பாடல்களும் பெரிதாக ஈர்க்கவில்லை.
சாமி ஸ்கொயர்
‘சிங்கம்’ படத்தை இரண்டாம் பாகம் எடுத்து ஹிட் கொடுத்த ஹரி, மூன்றாம் பாகத்தில் கோட்டை விட்டார். எனவே, தன்னுடைய இன்னொரு ஹிட் படமான ‘சாமி’யைக் கையில் எடுத்தார். எல்லோரும் இரண்டாம் பாகத்துக்கு, படத் தலைப்பின் பின்னால் 2 என்று போடுவார்கள். ஆனால், இவர் வித்தியாசமாக ‘சாமி ஸ்கொயர்’ என்று தலைப்பு வைத்தார்.
2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில், விக்ரம், த்ரிஷா, விஜயகுமார், மனோரமா, விவேக், கோட்டா சீனிவாசராவ் ஆகியோர் நடித்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், பாடல்களும் ஹிட்டானது. 15 வருடங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இரண்டாம் பாகம், முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அமைந்தது.
முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா தவிர, இன்னொரு ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், திடீரென த்ரிஷா விலகிக்கொள்ள, அவருக்குப் பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார். தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும் வசீகரிக்காத நிலையில், சாமி ஸ்கொயர் ரசிகர்களுக்குப் பிடிக்காமலே போனது.
கோலிசோடா 2
ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘கோலிசோடா’. ஹீரோ, ஹீரோயின் என வழக்கமான சினிமாவுக்குரிய எந்த அடையாளங்களும் இல்லாமல், ‘பசங்க’ படத்தில் நடித்த 4 சிறுவர்களை வைத்து கோலிவுட்டை ஆச்சரியப்படுத்திய படம் இது.
அதே கான்செப்ட்டை மையமாக வைத்து, ஆனால் சிறுவர்களுக்குப் பதிலாக 3 இளைஞர்களை வைத்துக் கதை பின்னியிருந்தார் விஜய் மில்டன். ஆனால், முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு இதில் இல்லாததால், ரசிகர்களை ஈர்க்கவில்லை.
மாரி 2
பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் 2015-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘மாரி’. காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், பின்னணிப் பாடகரான விஜய் யேசுதாஸ் போலீஸாக நடித்தார். ரோபோ சங்கர், ‘கல்லூரி’ வினோத் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். அனிருத் இசையில், பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தன. இந்தப் படத்தின் மூலம் ரோபோ சங்கருக்கு மிகப்பெரிய பிரேக் கிடைத்தது.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவான இரண்டாம் பாகத்தில், காஜல் அகர்வால் எங்கே போனார் என்ற முதல் பாகத்தின் முக்கியக் கேள்விக்கு விடை இல்லை. முதல் பாகமே பரவாயில்லை என ரசிகர்கள் படத்தைக் கண்டுகொள்ளாமல் விட, ‘இந்தப் பாகத்தில் தான் கதையென ஒன்று இருக்கிறது’ என விமர்சகர்கள் மத்தியில் பேச்சு எழுந்தது.
தமிழ்ப்படம் 2
இதுவரை தமிழில் வெளியான படங்களையே கலாய்த்து, தமிழில் தைரியமாக வெளியான படம் ‘தமிழ்ப்படம்’. ஆனால், இந்தப் படத்தைப் பார்த்து சம்பந்தப்பட்டவர்கள் பாராட்டினார்களே தவிர, கோபப்படவில்லை என்பதுதான் இதன் ஆகப்பெரும் பலம். ‘மிர்ச்சி’ சிவா, பரவை முனியம்மா, திஷா பாண்டே ஆகியோர் நடித்தனர்.
8 வருடங்களுக்குப் பிறகு முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. இந்த முறை தமிழ்ப் படங்களைத் தாண்டி ஹாலிவுட் வரை கலாய்த்ததில், சிரித்து சிரித்து வயிற்று வலியுடன் தான் தியேட்டரை விட்டு வெளியே வர முடிந்தது.
கலாய்த்து எடுக்கப்பட்டப் படங்களில் லாஜிக் மிஸ்டேக் பார்க்கக் கூடாது என்பதால், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ‘தமிழ்ப்படம் 2’வைக் கொண்டாடினர் ரசிகர்கள்.
2.0
ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘எந்திரன்’. டாக்டர் வசீகரன், சிட்டி ரோபோ என இரண்டு விதமான கதாபாத்திரங்களில் ரஜினி அசத்த, அழகால் கவர்ந்தார் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா ராய். இந்தியாவைத் தாண்டி, உலக அளவிலும் இந்தப் படம் கொண்டாடப்பட்டது.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட இரண்டாம் பாகத்தில், டாக்டர் வசீகரன், சிட்டி ரோபோ மட்டுமின்றி மூன்றாவதாகக் குட்டி ரோபோவாகவும் நடித்து அசத்தினார் ரஜினி. இரண்டாம் பாகத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்ததால், முதல் பாகத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘எந்திரன்’ தலைப்பைத் தர மறுத்துவிட, ‘2.0’ என்று பெயர் வைத்தனர்.
அறத்துக்கு எதிராக இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது என்று ‘2.0’ படத்துக்குப் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், 3டி என்ற ஒற்றை விஷயம் இந்தப் படத்தின் வசூலைக் காப்பாற்ற உதவியது.
கலகலப்பு 2
சுந்தர்.சி இயக்கத்தில் 2012-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘கலகலப்பு’. விமல், அஞ்சலி, ‘மிர்ச்சி’ சிவா, ஓவியா, சந்தானம், ஜான் விஜய், இளவரசு, மனோபாலா, காளி வெங்கட், யோகி பாபு, ஜார்ஜ் மரியான் என ஏராளமானோர் இந்தப் படத்தில் நடித்தனர். தங்களுடைய பாரம்பரியமான மெஸ்ஸை மீட்டெடுக்க விமலும் சிவாவும் போராடுவதுதான் படத்தின் கதை.
அதேபோன்ற ஒரு கான்செப்ட்டை மையப்படுத்தி, மெஸ்ஸுக்குப் பதிலாக வீட்டைக் கையில் எடுத்து கதகளி ஆடினார் சுந்தர்.சி. கதைக்களத்தையும் வாரணாசிக்கு மாற்றி, கேத்ரின் தெரேசா மற்றும் நிக்கி கல்ராணி என கலர்ஃபுல்லாகக் களத்தில் படத்தை இறக்கிவிட்டார்.
படம் ரசிகர்களுக்குப் பிடித்துப்போக, இந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே தயாரிப்பாளர்கள் சங்கம் புதுப்படங்களை ரிலீஸ் செய்யாமல் ஸ்டிரைக் அறிவிக்க, இந்தப் பிரச்சினை முடியும்வரை தியேட்டர்களில் ஓடி கல்லா கட்டியது ‘கலகலப்பு 2’.
விஸ்வரூபம் 2
கமல்ஹாசன் இயக்கி, நடித்த படம் ‘விஸ்வரூபம்’. 2013-ம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ஈசன் - லாய் ஆகியோருடன் இணைந்து பின்னணிப் பாடகரான சங்கர் மகாதேவன் இந்தப் படத்துக்கு இசையமைத்தார்.
சுவாரஸ்யமாக இருந்தது முதல் பாகம். அப்போதே இரண்டாம் பாகத்துக்கான 40 சதவீத காட்சிகளை எடுத்துவிட்டதாகத் தெரிவித்தார் கமல்ஹாசன். ஆனால், தயாரிப்பாளரின் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக இரண்டாம் பாகம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதுவே, இரண்டாம் பாகத்துக்கான பலவீனமாகவும் அமைந்தது.
கமலே படத்தை வாங்கி, மீதியுள்ள காட்சிகளை எடுத்து ரிலீஸ் செய்தார். பல்வேறு காலகட்டங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாலும், முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அமைந்ததால், முதல் பாகத்தின் கதையைப் பலர் மறந்துவிட்டதாலும், இரண்டாம் பாகத்துடன் ரசிகர்களால் ஒன்றிப்போக முடியவில்லை. சரியான நேரத்தில் எடுக்கப்பட்டு, வெளியிடப்பட்டிருந்தால் வசூலிலும் விமர்சனத்திலும் விஸ்வரூபம் எடுத்திருக்க வேண்டிய படம், சுணக்கத்துடன் படுத்துவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT