Published : 20 Dec 2018 07:25 PM
Last Updated : 20 Dec 2018 07:25 PM
தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினை தொடர்பாக விஷால் பதிவிட்ட ட்வீட்டுக்கு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் எதிரணியைச் சேர்ந்தவர்கள், இந்த நிர்வாகம் சரியாகச் செயல்படவில்லை என்று கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக, நேற்று (புதன்கிழமை) ஏ.எல்.அழகப்பன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, சுரேஷ் காமாட்சி முதலான தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி, சென்னை தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்டனர்.மேலும் ஏழு கோடி ரூபாய் வரை, விஷால் கையாடல் செய்துவிட்டார் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளையும் அடுக்கினர்.
இன்று (டிசம்பர் 20) காலை தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போடப்பட்ட பூட்டை உடைத்து, உள்ளே செல்ல முற்பட்டார் விஷால். அப்போது அவருக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விஷால் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டார்.
விஷால் கைது செய்யப்பட்ட போது தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு உரிமையில்லாத நபர்கள் வந்து பூட்டியபோது வாய் திறக்காமல் இருந்த காவல்துறை, இன்று என்னையும், என் நண்பர்களையும் கைது செய்திருக்கிறது. இதில் எங்கள் மீது எந்தத் தவறும் இல்லாமல் கைது செய்யப்பட்டிருப்பதை உண்மையிலேயே நம்ப முடியவில்லை.
இதற்கு எதிராக நாங்கள் மீண்டும் போராடுவோம். இளையராஜாவின் நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அனைத்து வேலைகளையும் மேற்கொள்வோம். சிரமத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு உதவ நிதி திரட்டுவோம்'' என்று தெரிவித்திருந்தார்.
விஷாலின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, தயாரிப்பாளர் சங்கத்தில் எதிரணியைச் சேர்ந்த சுரேஷ் காமாட்சி, விஷாலின் ட்வீட்டை மேற்கோளிட்டு கூறியிருப்பதாவது:
''தயாரிப்பாளர் கவுன்சில் உறுப்பினர்களை எப்படி அங்கீகாரம் இல்லாதவர்கள் என்று சொல்லலாம்? இவ்வளவு நாட்கள் எங்கிருந்தீர்கள்? உறுப்பினர்களைக் கூட உங்களுக்குத் தெரியவில்லை, தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத்தலைவர்கள் எங்கே? 15 மாதங்களாகக் காணவில்லை?
கவுன்சிலை விதிப்படி நடத்தவே இல்லை, இதற்கெல்லாம் முதலில் பதில் சொல்லுங்கள். இளையராஜாவைப் பற்றிப் பேசி பேச்சை மாற்றாதீர்கள். உங்களால் தயாரிப்பாளர்களுக்கு நிறைய உதவ முடியும். நீங்கள் விதிக்கு உட்பட்டவர். உங்களுக்கு பொறுப்புண்டு. உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். நீங்கள் எவ்வளவு தூரம் உறுப்பினர்களிடம் வெளிப்படையாக இருக்கிறீர்கள்?
தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவர்கள் கடந்த 15 மாதங்களாக தங்கள் கடமையைச் செய்யவில்லையே. பொதுக்குழுவைக் கூட்டினீர்களா? தன்னிச்சையாக, அகந்தையுடன் நீங்கள் விதிகளை மதிக்காமல் செயல்படுகிறீர்கள். உங்கள் பார்வையில், விதிகள் எல்லாம் மதிக்க மாட்டீர்கள். நடப்பவற்றை முறையாக உறுப்பினர்களிடம் தெரிவிக்கிறீர்களா?
பொதுக்குழுவைக் கூட்டி, கவுன்சில் நிதியைப் பயன்படுத்த முறையான அனுமதியைப் பெற்றீர்களா? உறுப்பினர்களிடம் ஒழுங்காக கணக்கு வழக்கு காட்டினீர்களா? நாங்கள் கேள்வி கேட்டால் எங்களை அங்கீகாரம் இல்லாதவர்கள் என்று கூறுகிறீர்கள்''.
இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT