Published : 26 Nov 2018 01:05 PM
Last Updated : 26 Nov 2018 01:05 PM
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான ’96’ படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி புகழ்ந்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘96’. நந்தகோபால் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதும் தமிழகத்தில் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பலரும் இப்படத்தைக் கொண்டாடினார்கள். மேலும், தமிழக இளைஞர்கள் மத்தியில் ‘காதலே... காதலே’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதன் தெலுங்கு ரீமேக் உரிமையின் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘96’ படம் பார்த்துவிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
சமீபகாலமாகவே நான் விஜய் சேதுபதியின் ரசிகனாக இருக்கிறேன். ’96’ என்னை அப்படியே அடித்துச் சென்றுவிட்டது. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் ’காதலே... காதலே...’ பாடல் தனிச்சிறப்பு. அதை மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்ன சொல்வது. படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் ரசனை. இசையும்கூடத்தான்.
வாஷிங்டன் சுந்தர், அபிநவ் முகுந்த், பாசு உள்ளிட்டோரும் இப்படத்துக்கு பெரிய ரசிகர்கள் தான். என்ன சொல்கிறாய் அஸ்வின்? (கிரிக்கெட் வீரர் அஸ்வினின் ட்விட்டர் கணக்கை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறு தினேஷ் கார்த்திக் தெரிவித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரின் பாராட்டால், ‘96’ படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
மேலும், 2018 தீபாவளிக்கு சன் தொலைக்காட்சியில் இப்படம் திரையிடப்பட்டது. அதனையும் கடந்து இப்போதும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT