Last Updated : 05 Nov, 2018 01:03 PM

 

Published : 05 Nov 2018 01:03 PM
Last Updated : 05 Nov 2018 01:03 PM

அதிக விலைக்கு விற்கப்படும் ‘சர்கார்’ டிக்கெட்டுகள்: நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

தொடர்ச்சியாக அதிக விலைக்கு ‘சர்கார்’ டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருவதால், தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது அனைவரின் கேள்வியாக இருக்கிறது.

எப்போதுமே விஜய் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். முதல் நாள் டிக்கெட்டுகளுக்கு பலத்த போட்டி நிலவும். ஆனால், ‘சர்கார்’ படத்துக்கு விஜய்யின் முந்தைய படங்களை விட எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.  காரணம், விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி 3-வது முறையாக இணைந்திருப்பது, சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதே.

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு அமைந்தது. பல்வேறு அரசியல் தலைவர்கள் விஜய்யின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து கதை சர்ச்சையிலும் ‘சர்கார்’ சிக்கியது. அனைத்து பிரச்சினைகளையும் கடந்து நாளை (நவம்பர் 6) வெளியாகவுள்ளது.

தற்போது ‘சர்கார்’ அதிக டிக்கெட் விலை விற்பனை சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு KDM எனப்படும் பாஸ்வேர்டு சன் பிக்சர்ஸ் சார்பில் திரையரங்குகளுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால், 7.30 மணிக்கே முதல் காட்சி என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் முதல் காட்சிக்கான டிக்கெட்டின் தொடக்கவிலையே 1000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சட்டப்படி மல்டி பிளக்ஸ் திரையரங்கில் ரூ.50 முதல் ரூ.150 வரையும், மற்ற திரையரங்குகளில் ரூ.40 முதல் நூறு ரூபாய் வரையும், ஏசி திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.80 வரையும் கட்டணம் வசூலிக்கலாம். இந்த அரசாணையைப் பின்பற்றாமல் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

கூடுதல் கட்டணம் விற்பது தெரிந்தால், திரையரங்க உரிமத்தை ரத்து செய்யலாம் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு அனைத்தையும் மீறி, ‘சர்கார்’ படத்துக்கு அதிக விலை கொண்டே டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.

பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, அதிக விலை கொடுத்து விநியோக உரிமையைக் கைப்பற்றியிருக்கிறோம். அதனால் இப்படி விற்றால் மட்டுமே, போட்ட பணத்தைக் கைப்பற்ற முடியும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கொரு முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர்கதையாகிக் கொண்டே இருக்கிறது.

‘சர்கார்’ படத்திலாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது தான் பலருடைய கேள்வியாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x