Last Updated : 05 Nov, 2018 09:53 AM

 

Published : 05 Nov 2018 09:53 AM
Last Updated : 05 Nov 2018 09:53 AM

‘தில்லானா மோகனாம்பாள்’ பட பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்

தமிழ் திரைப்பட வரலாற்றில் காவியத் தன்மையுடன் எடுக்கப்பட்ட திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படிப்பட்ட படங்களில் தலைமுறைகளைத் தாண்டி ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் படங்களில் முக்கியமானது ‘தில்லானா மோகனாம்பாள்’. 1968-ல் வெளிவந்த இப்படத்தின் பொன்விழா கொண்டாட்டம் சென்னை வாணி மஹாலில் கடந்த 3-ம் தேதி நடந்தது.

கான ஒலியும் காணொலியும்

கொத்தமங்கலம் சுப்புவின் ‘தில்லானா மோகனாம்பாள்’ கதை தான் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் திரைப்படம் ஆனது. இப்படத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில், படத்தின் பாடல்களை மேடையில் இசைக் கலைஞர்களைக் கொண்டே உயிர்ப்புடன் வழங்கியதோடு, படத்தில் அந்த குறிப்பிட்ட பாடல் ஒலிக்கும் சூழ்நிலையையும் காணொலியாகத் திரையிட்டது ரசிகர் களை 1968-களிலேயே சஞ்சரிக்க வைத்தது.

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் நாதஸ்வர இசையை எம்பிஎன்.சேதுராமன் - பொன்னுசாமி சகோதரர்கள் வழங்கியிருந்தனர். அதில், பொன்னுசாமி நிகழ்ச்சியை வாழ்த்திப் பேசியதை காணொலியாக ஒளிபரப்பினர். நிகழ்ச்சியில், நாதஸ்வர இசையை மாம்பலம் சிவக்குமார் குழுவினரும், மெல் லிசையை முரளியின் ‘மெளனராகம்’ குழுவினரும் வழங்கினர்.

கல்பனா ராகவேந்தர் மிக இனிமை யாகப் பாடினார். இப்படி மிகவும் வித்தியாசமான முறையில் இக் கொண்டாட்டத்தை வடிவமைத்து, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஒய்.ஜி.மகேந்திராவுக்கு சிவாஜியின் ஆசியும், ரசிகர்களின் அன்பும் கரவொலிகள் மூலமாக வெளிப் பட்டன.

கலை வாரிசுகளுக்கு கவுரவம்

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த தசரதன் உள்ளிட்ட சில கலைஞர்களுக்கும், கொத்த மங்கலம் சுப்புவின் மகள், ஏவிஎம்.ராஜனின் மகள், மனோரமாவின் பேத்தி, தங்கவேலு, பாலையா, நாகேஷ் உள்ளிட்ட சில கலைஞர் களின் வாரிசுகளை மேடைக்கு அழைத்து நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர். இது அந்த கலைஞர்களின் வாரிசுக்கு மட்டுமல்லாது, அந்த கலைஞர் களுக்கும் பெருமை சேர்ப்பதாகும் என்றார் ஒய்.ஜி.மகேந்திரா.

உடல்மொழியின் உன்னதம்

படத்தில் மறக்கமுடியாத சில காட்சிகளைக் குறிப்பிட்டு, அதுபற்றி விளக்கியும் பேசினார். அதன்பிறகு, அந்த காட்சியை திரையில் பார்க் கும்போதுதான், சிவாஜி என்னும் கலைஞனின் அபார நடிப்புத் திறமையும், இன்றைக்கு பெரிதாகப் பேசப்படும் உடல்மொழியை அவர் எத்தகைய தருணத்தில் எப்படியெல்லாம் வெளிப்படுத்தி இருக்கிறார் என்னும் நேர்த்தியை யும் இந்த தலைமுறை இளைஞர் கள் புரிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. ‘வைத்தி’ யாக நாகேஷும், தவில் கலைஞர் ‘முத்துராக்கு’வாக பாலையாவும், ‘ஜில்ஜில் ரமாமணி’யாக மனோரமா வும் அந்த படத்தில் வாழ்ந்திருந்ததை யும் உணர முடிந்தது.

‘தில்லானா மோகனாம்பாள்’ வெளிவந்த அதே 1968-ம் ஆண்டில், சிவாஜி நடித்து ‘திருமால் பெருமை’, ‘ஹரிச்சந்திரா’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘என் தம்பி’, ‘எங்க ஊர் ராஜா’, ‘லட்சுமி கல்யாணம்’, ‘உயர்ந்த மனிதன்’ ஆகிய படங்களும் வெளிவந்தன. அப்படிப் பார்த்தால், சிவாஜி நடித்த இந்த 8 படங்களுக்கும் இது பொன்விழா ஆண்டுதான் என்றார் ஒய்.ஜி.மகேந்திரா.

ஹரிச்சந்திரனாக, பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வாராக.. இன்னும் எத்தனை விதமான வேடங்களில் நடிப்பின் பரிமாணங்களை சிவாஜி எப்படியெல்லாம் வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை விளக்க அந்த 8 படங்களில் இருந்தும் சில காட்சிகளை எடிட் செய்து திரையிட்ட அந்த ‘காம்போ’ காட்சித் தொகுப்பு, நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x