Published : 30 Nov 2018 11:27 AM
Last Updated : 30 Nov 2018 11:27 AM
நடிகர் ராதாரவி தனது பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் 'டத்தோ' பட்டமே பொய் என்று சொல்கிறார் பாடகி சின்மயி.
பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது மீ டூ வாயிலாக புகார் தெரிவித்ததிலிருந்து சின்மயியைப் பற்றி ராதாரவி விமர்சிப்பதும் அதற்கு சின்மயி பதிலடி கொடுப்பதும் வழக்கமானதாக இருந்தது. ஒருகட்டத்தில், மீ டூ போச்சு டப்பிங் யூனியன் வந்துச்சு என்கிற கதையாக மாறிப்போனது. வைரமுத்து - சின்மயி விவகாரம் என்பது போய், ராதாரவி - சின்மயி மோதல் என்றானது.
இந்த நிலையில்தான், ராதாரவி தனது பெயருக்கு முன்னால் வைத்துக்கொள்கிற 'டத்தோ' பட்டம் பொய் என்று காட்டமாக ட்வீட்டியிருக்கிறார் சின்மயி.
மலேசியாவில் வழங்கப்படும் 'டத்தோ' பட்டம் கவுரவமிக்கதாக கருதப்படுகிறது. இந்திய அளவில் நடிகர்களில் ஷாருக் கானுக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டதாகச் சொல்லுவார்கள். இந்த நிலையில், சின்மயி மலேசிய நாட்டின் மெலேகா மாநில அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு வந்த பதிலை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில் இருப்பதாவது:
மதிப்பிற்குரிய சின்மயி ஸ்ரீபதா.
நான் ஏற்கெனவே, மெலாகா அரசின் நிர்வாகத் துறையிடம் விளக்கம் கேட்டுவிட்டேன். அதன்படி ராதாரவி என்ற நடிகருக்கு அந்த மாநில அரசு எந்த விருதினையும் வழங்கவில்லை. அவரது பெயர் எங்களது அரசு ஆவணங்களில் இல்லை. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள நடிகர் ஷாருக் கானுக்கு மட்டுமே அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதைப் பற்றி எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு மிகுந்த நன்றி.
பிரசாந்த் குமார் பிரகாசம்
மெலாகா முதல்வரின் பொது விவகாரத்துறைக்கான சிறப்புச் செயலர்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதை அம்பலப்படுத்தி ராதாரவியை மீண்டும் வம்புக்கிழுத்திருக்கிறார் சின்மயி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT