Last Updated : 26 Nov, 2018 07:30 PM

 

Published : 26 Nov 2018 07:30 PM
Last Updated : 26 Nov 2018 07:30 PM

’மெர்சல்’ vs சர்கார் - ஒரு வியாபார முறை ஒப்பீடு

விஜய் நடிப்பில் வெளியான 'மெர்சல்' மற்றும் 'சர்கார்' ஆகிய இரண்டு படங்களுமே எப்படி வியாபாரம் செய்திருக்கிறார்கள் என்று பேசிய போது கிடைத்த தகவல்கள்

சமீபகாலமாக விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் விஜய் படங்கள் என்றாலே, உரிமையைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. ஏனென்றால் குடும்பம் சகிதமாக வந்து படம் பார்ப்பது விஜய் படங்களுக்கு அதிகம். அதற்குப் பிறகு இந்த இடத்துக்கு சிவகார்த்திகேயன் வந்திருப்பதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.

2017-ம் ஆண்டு வெளியான 'மெர்சல்' மற்றும் தற்போது வெளியாகியுள்ள 'சர்கார்' இரண்டு படங்களுக்கு உலகளவில் சுமார் 250 கோடிக்கும் அதிகமான வசூல் என்ற இமலாய சாதனையை நிகழ்த்தியுள்ளார் விஜய். தமிழ் திரையுலக நடிகர்களில் ரஜினி மட்டுமே உலகளவில் 250 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த படங்கள் பட்டியலில் இருக்கிறார். அவரது 'எந்திரன்' மற்றும் 'கபாலி' இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது. விஜய்யின் சமீபத்திய 2 படங்களுமே இச்சாதனையை செய்திருப்பதால், இனி வரக்கூடிய படங்களும் இதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கலாம்.

'மெர்சல்' மற்றும் 'சர்கார்' இரண்டுமே தமிழக விநியோக வியாபாரத்தில் என்ன மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது என்று விசாரித்த போது கிடைத்த தகவல்கள் ஆச்சர்யத்துக்குரியவை.

'மெர்சல்' வியாபாரம்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்டது. முதலீட்டு ஏற்ற வகையிலேயே, விநியோக வியாபாரம் செய்யப்பட்டது. முதல் நாளில் நல்ல வசூல் செய்தது. அடுத்த நாட்களில் பாஜக கட்சியினர், டிஜிட்டல் இந்தியாவை கிண்டல் செய்திருக்கிறார்கள் என்று போராட்டத்தில் இறங்கினார்கள். இதனால் சர்ச்சை உருவானது. இதை முன்வைத்து வசூலும் அதிகரித்தது.

விநியோகஸ்தர்கள் அனைவருக்குமே போட்ட பணத்தை விட நல்ல லாபம் கிடைத்தது. ஆனால், தயாரிப்பாளருக்கு எந்த பணமும் வரவில்லை. இதற்கு முன்பாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த படங்கள் மற்றும் வெளியிட்ட படங்களின் தோல்வியால், அதில் வரவேண்டிய பணத்தை 'மெர்சல்' லாபத்தில் சரிசெய்து கொண்டார்கள். தமிழகத்தில் விஜய் படங்களுக்கு ஒரு பெரிய மாஸ் ஓப்பனிங் கிடைத்த படம் 'மெர்சல்' என்று சொல்லலாம். சுமார் 125 கோடி ரூபாய் அளவுக்கு மொத்த வசூல் செய்தது. இதிலிருந்து ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசு வரி எல்லாம் கழித்தது போக 70 கோடிக்கும் அதிகமாக வந்ததாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

'மெர்சல்' பொறுத்தவரை விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம், தயாரிப்பாளருக்கு லாபமுமில்லை, நஷ்டமுமில்லை

'சர்கார்' வியாபாரம்

மூன்றாவது முறையாக விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி, சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு. முந்தைய படம் பெரிய வெற்றி, சன் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துவார்கள் என்று விநியோகஸ்தர்கள் அதிகமான பணத்தைக் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.

'பாகுபலி 2' திரைப்படம் தமிழகத்தில் என்ன வசூல் செய்ததோ, அதற்கு நிகராக பணம் கொடுத்து வாங்கியது விநியோகஸ்தர்கள் மிகப்பெரிய தவறு என்கிறார்கள். ஏனென்றால், 'பாகுபலி 2' படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பு வேறு, அதனுடன் 'சர்கார்' எதிர்பார்ப்பை ஒப்பிட்டு இருக்கக்கூடாது என்று முன்னணி விநியோகஸ்தர் தெரிவித்தார்.

'சர்கார்' வெளியான சில நாட்களிலேயே தமிழக அமைச்சர்கள் இலவசங்களை கிண்டல் செய்யும் காட்சிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்கள். அதிமுகவினர் 'சர்கார்' திரையிடப்பட்ட திரையரங்குகளின் வாசலில் போராட்டம் நடத்தினார்கள். இதனால், சில காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டு படக்குழு நீக்கியது. கதை சர்ச்சை, இலவச காட்சிகள் சர்ச்சை என சிக்கியதைத் தாண்டி, படம் வெளியான 2 வாரங்களுக்கு நல்ல வசூல் விநியோகஸ்தர்களுக்கு கிடைத்தது.

ஆனால், பெரிய பண முதலீடு செய்திருக்கிறோமே என்ற தயங்கியவர்களுக்கு 'சர்கார்' கைவிடவில்லை. அவர்கள் போட்ட பணத்தை கிட்டதட்ட எடுத்துக் கொடுத்திருக்கிறது. இதுவே, பெரிய ஆச்சர்யம் என்கிறார்கள். ஆனால், சில விநியோகஸ்தர்களுக்கு மட்டும் சுமார் 5% முதல் 10% வரை நஷ்டம் ஏற்படும். திரையுலகில் 10% நஷ்டம் என்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் வெளியாகும் போது சரி செய்து கொள்வார்கள்.

தமிழகத்தில் 'மெர்சல்' போலவே இப்படமும் சுமார் 125 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருக்கிறது. வரிகள் கழித்து போக விநியோகஸ்தர்களுக்கு  வரும். எவ்வளவு என்பது விரைவில் தெரியும் என்கிறார்கள்.

'சர்கார்' பொறுத்தவரை விநியோகஸ்தர்கள் சிலருக்கு நஷ்டம்; தயாரிப்பாளருக்கு நல்ல லாபம்

விநியோகஸ்தர்கள் கூறுவது என்ன?

இவ்விரண்டையும் ஒப்பிட்டு விநியோகஸ்தர்களிடம் கேட்ட போது, “'சர்கார்' படத்தைப் பொறுத்தவரை முன்பணமாக அதிகமாக கொடுத்தது தவறு தான். விஜய் சாரைப் பொறுத்தவரை, தமிழக விநியோக வியாபாரத்தில் மொத்த வசூலில் இரண்டு 125 கோடி ரூபாய் படங்களைத் தொடர்ச்சியாக கொடுத்திருக்கிறார். இனி வரும் காலத்திலும் அவருடைய படத்துக்கு முன்னுரிமை கொடுப்போம். ஆனால், அடுத்த படத்துக்கு எவ்வளவு பட்ஜெட் என்பதைப் பொறுத்தே, முன்பணம் கொடுத்து கைப்பற்ற வேண்டும். சிலர் போட்டிகளில் அதிக முன்பணம் கொடுத்துவிடுகிறார்கள். இது கண்டிப்பாக தவறு தான்.

ரஜினிக்குப் பிறகு விஜய் தான் விநியோகஸ்தர்களின் நாயகன் என்றால் ஆச்சர்யமில்லை. இதர நடிகர்கள் அனைவருமே, ரஜினி - விஜய் இருவரின் படங்களின் ஓப்பிட்டால் மிகவும் பின்தங்கியே இருக்கிறார்கள். அஜித் உள்ளிட்ட சில நடிகர்கள் இந்த வரிசையில் விரைவில் வந்தால், எங்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கே பொற்காலம்” என்று தெரிவித்தார்கள்.

குறிப்பு: இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்துமே விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்பட்டது. தொடர்ச்சியாக படங்களை வாங்கி வியாபாரம் செய்துவருவதால், தங்களுடைய பெயர்களைக் குறிப்பிட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆகையால், இக்கட்டுரையில் அவர்களது பெயர் குறிப்பிடவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x