Published : 26 Nov 2018 11:11 AM
Last Updated : 26 Nov 2018 11:11 AM
தனது பிறந்தநாளுக்கு ஒரு இசைக்கச்சேரியை ஒருங்கிணைத்து வாழ்த்து சொன்ன ரசிகருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
ரசிகர் ஒருவருக்கு ட்விட்டரில் கமல்ஹாசன் பதிலளித்திருப்பது இது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 7-ம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்நிலையில், அவரது பிறந்தநாளை ஒட்டி வாழ்த்து ட்வீட் பதிவு செய்திருந்த பத்ரி என்ற இளைஞர், "கமல்தான் எனக்கு உந்துசக்தி. அவரைப் பார்த்துதான் நான் இந்த தொழிலையே தேர்வு செய்தேன். அவர் கற்றலில் காட்டும் ஈடுபாட்டை நான் நேர்மையாக காதலித்தேன். ஒரு வித்தையில் வல்லவராக இருந்துகொண்டே இன்னொரு வித்தையை கத்துகுட்டியாக கற்றுக்கொள்ள முற்படுவார்.
அவருடைய ஒவ்வோரு பிறந்தநாளிலும் நான் அவருக்கு வெறும் வாழ்த்து மட்டும் செல்வதில்லை, அப்படிச் செல்லி வெறும் ரசிகராக ம்ட்டும் இருக்க விரும்பவில்லை. அவரால்தான் நான் எனது தொழிலில் முன்னேறுகிறேன் என்பதை அவருக்குக் காட்டவே விரும்புவேன். அதுதான் அவருக்கு நான் தரும் சிறந்த பரிசாக இருக்கும் என்றும் நம்புகிறேன் " எனப் பதிவிட்டிருந்தார்.
மொட்டைமாடி என்ற இசைக்குழுவை இவர் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ரசிகரின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த கமல்ஹாசன், "கலாச்சாரம் என்பது இன்னமும் வெல்லப்படாத போர். இப்போது நம்மிடையே இருப்பது இயற்கை பேரிடர் என்ற போர். அதனால்தான் பதிலளிப்பதில் தாமதம். ஒரு கலைஞராகவும், அரசியல் கலாச்சாரகர் ஆகவும் என்னிடம் நீங்கள் உரிமை எடுத்துக்கொள்ளலாம்.
நான் எப்போதும் உங்களுக்காகவே இருக்கிறேன். முன்னேறிச் செல்லுங்கள். உங்களது தீவிர ரசிகத்தன்மை அர்த்தமுள்ளதாக அமையட்டும். மொட்டைமாடி, பறவைகளைக் கொல்லும் செல் ஃபோன் டவர்களின் களமாக மட்டுமில்லாமல், தேசத்துக்காக இசைக்கும் இசை மேடையாகவும் இருக்கட்டும். நான் மட்டுமல்ல நீங்களும் இந்த தேசமே" எனப் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT