Published : 05 Nov 2018 03:17 PM
Last Updated : 05 Nov 2018 03:17 PM
’சர்கார்’ டிக்கெட் விற்பனை விவகாரத்தில் முன்னணி நடிகர்களை கடுமையாகச் சாடியிருக்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘சர்கார்’ திரைப்படம் நாளை (நவம்பர் 5) வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தும், சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1000க்கும் மேல் விற்பனை செய்து வருகிறார்கள். இது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
இப்பிரச்சினை தொடர்பாக முன்னணி விநியோகஸ்தரும், திரையரங்க உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
''நான் சரியான விலையில் தான் டிக்கெட் விற்கிறேன். மற்ற திரையரங்குகளில் விற்கிறார்கள் என்றால் விற்கும் திரையரங்கு உரிமையாளரைத் தான் கேட்க வேண்டும். அரசாங்கமும், நாங்களும் அதிக விலைக்கு டிக்கெட் விற்காதீர்கள் என்று சொல்கிறோம்.
ஆனால், சம்பந்தப்பட்ட நடிகர்களோ படக்குழுவினரோ சொன்னால் மட்டும் தான் சரியாக வரும். அவர்கள் இது தொடர்பாக வாயைத் திறப்பதில்லை. அதிக விலை விற்றால் மட்டுமே சம்பளம் அதிகமாகக் கிடைக்கும். டிக்கெட் அதிக விலைக்கு விற்க விற்க சம்பளம் 30 கோடி ரூபாய், 40 கோடி ரூபாய், 50 கோடி ரூபாய் என போய்க்கொண்டே இருக்கும்.
எங்களைப் பொறுத்தவரை நாட்டில் இருக்கும் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியாது. நாங்கள் எல்லாம் சாதாரணமானவர்கள். என் திரையரங்குகளில் ரூ.150-க்கு மேல் ஒரு டிக்கெட் கூட விற்கவில்லை. அனைத்துமே ஆன்லைனில் தான் விற்கிறோம். இது தொடர்பாக பேசிப்பேசி டயர்டாகிவிட்டேன்.
பெரிய விலை கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்குகிறார்கள். அவர்களைக் குறை சொல்ல முடியாது. இதில் திருந்த வேண்டியவர்கள் நடிகர்கள் தான். அவர்கள் தான் எங்களுக்கு கணிசமான சம்பளம் போதும். நியாயமான விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யுங்கள் என்று அறிக்கை கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே டிக்கெட் பிரச்சினை முடிவுக்கு வரும்.
திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் 10 பேரும் இப்படிச் செய்ய வேண்டும். அவர்களோ இந்த விஷயத்தில் வாயைத் திறப்பதே இல்லை''.
இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT