Last Updated : 27 Nov, 2018 12:30 PM

 

Published : 27 Nov 2018 12:30 PM
Last Updated : 27 Nov 2018 12:30 PM

டெல்டா மக்களுக்கு உதவி செய்யுங்கள்: கேரள முதல்வருக்கு கமல் கடிதம்

கஜா புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தைத் தொலைத்து நிற்கும் டெல்டா மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டது. இது தொடர்பாக பலரும் நிவாரண உதவிகள் செய்து வருகிறார்கள். தற்போது, கஜா புயல் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் கமல் கூறியிருப்பதாவது:

''அண்மையில் வீசிய கஜா புயல், தமிழக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி, அரசினையும் மக்களையும் தங்களால் இயன்ற உதவிகளை தமிழ்நாட்டிற்கு இப்பொழுது அளித்திட, முன்வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறது. இப்பேரிடர் காலங்களில் மனிதாபிமான உணர்வுகள் மக்களிடம் அதிகமாக மேலோங்கிட வேண்டும்.

கஜா புயலின் தாக்கத்தினால் எங்கள் மக்கள் இழந்திருக்கும் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து, மீண்டு வருவதற்கு இன்னும் பல வருடங்களாகும். இருப்பினும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது சகோதரர்களின் இயல்பு வாழ்க்கையை புனரமைக்கும் இப்பணியினை இன்றே தொடங்கிடவேண்டும்.

பயிர்கள் சேதாரமடைந்து மரங்கள் வேருடன் சாய்ந்து, படகுகளை இழந்து, மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்தையே இழந்து மிகக்கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர்.

நாம் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு உன்னதமான மானுடக்கருணையை உணர்த்திட வேண்டிய அத்தியாவசியமான தருணம் இது. மனிதாபிமானமே மனிதத்தின் அடிப்படை உணர்வு. அதுவே நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் உணர்வுப்பாலம். அதுதான் இன்று, இப்பொழுது இங்கே எங்கள் தமிழ்நாட்டிற்கு மிகவும் தேவையான ஒன்று''.

இவ்வாறு கமல் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x