Published : 06 Nov 2018 01:28 PM
Last Updated : 06 Nov 2018 01:28 PM
தன் ஓட்டு கள்ள ஓட்டாகப் போடப்பட்ட கோபத்தில் வாக்களிக்கும் உரிமைக்காகப் போராடும் இளைஞன், ஆட்சியில் அமர உள்ள கட்சியையே அசைத்துப் பார்த்தால் அதுவே 'சர்கார்'.
கார்ப்பரேட் உலகின் நம்பர் ஒன்னாக வலம் வருபவர் ஜி.எல். சிஇஓ சுந்தர் ராமசாமி (விஜய்). இவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து சென்னை வருகிறார். விஜய்யின் வாக்கு இன்னொருவரால் கள்ள ஓட்டாகப் போடப்பட்டது தெரிந்ததும் அந்தத் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கச் சொல்லி நீதிமன்றம் செல்கிறார். 49 (பி) பிரிவின் படி விஜய் வாக்களிக்கலாம் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் வாக்குச்சாவடி அமைக்கவும் உத்தரவிடுகிறது. இதனிடையே விஜய்க்கு வழக்கு விவகாரத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டி தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் தங்கள் ஓட்டும் கள்ள ஓட்டாகப் போடப்பட்டதால், எங்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்க வேண்டும் என்று 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்கின்றனர். இதனை ஏற்ற நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையுடன் மறுதேர்தல் நடத்த உத்தரவிடுகிறது.
இதனால் அகில இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் மாசிலாமணி (பழ.கருப்பையா) காலை 8 மணிக்கே பதவி ஏற்க அவசரமாக ஆயத்தமாகிறார். ஆனால், பதவியேற்பு விழா பாதியிலேயே முடிய, மறு தேர்தல் அறிவிக்கப்படுகிறது. பழ.கருப்பையாவை எதிர்த்து விஜய் அதே தொகுதியில் களமிறங்குவதாக சபதமிடுகிறார். அந்த சபதம் என்ன ஆனது, பழ.கருப்பையா வென்றாரா, ஆட்சியமைத்தது யார், ஜி.எல். சிஇஓ விஜய் ஏன் வாக்களிப்பதில் அவ்வளவு தீவிரம் காட்டுகிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
தன் வாக்குக்காகப் போராடும் இளைஞன் ஒருவன் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காகவும் போராடினால் என்ன ஆகும் என்ற சுவாரஸ்ய ஒன்லைனைப் பிடித்து அதகளம் செய்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
படம் முழுக்க விஜய்யின் ராஜ்ஜியம்தான். ஸ்டைல், மாஸ், வசன வெளிப்பாடு, சண்டைக்காட்சிகள், நடனம் என்று எல்லாவற்றிலும் ஒரு படி மேலே போய் அசத்தி இருக்கிறார். விஜய்யின் கோபமும், ஆவேசமும் இதில் கொஞ்சம் தூக்கல்தான். ஆனால், அந்த உணர்வுகள்தான் விஜய்யை இன்னும் நெருக்கமாகக் காட்டுகிறது. தனி ஒருவனாக விஜய் 'சர்கார்' படத்தின் ஒட்டுமொத்த பலத்தையும் தன் தோள்களில் சுமந்திருக்கிறார். அலுப்பூட்டாமல் படம் பார்க்க விஜய்யின் ஸ்க்ரீன் பிரசன்ஸே முழுமுதல் காரணம்.
ஓ.எம்.ஜி பொண்ணு பாடலில் மட்டும் டூயட் ஆடும் கீர்த்தி சுரேஷ் ரொம்பவே பாவம். விஜய்யுடன் ஒரு செட் பிராபர்ட்டி போல வந்து போகிறார். யோகி பாபுவுக்கும் படத்தில் பெரிதாக எந்த வேலையும் இல்லை. பாட்டுக்கான லீட் கொடுக்கவே பயன்பட்டிருக்கிறார்.
ராதாரவி தனக்கே உரிய தேர்ந்த நடிப்பில் அசால்ட்டாய் ஸ்கோர் செய்கிறார். விஜய்யை மிஞ்சும் அளவுக்கு அநாயசமாகப் பேசிக் கவர்கிறார். பழ.கருப்பையா பக்குவமான நடிப்பில் மிளிர்கிறார்.
வரலட்சுமிக்கு அழுத்தமான கதாபாத்திரம். தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
துளசி, கல்யாணி, பிரேம், லிவிங்ஸ்டன், டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் எனப் பலரும் ஓரிரு காட்சிகளில் வருகிறார்கள்.
க்ரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரிய பலம். அமெரிக்கா, சென்னையின் அழகையும், ஆயிரக்கணக்கான மக்களையும் கேமராவில் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறார் . ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். அறிமுகப் பாடலான ஏவுகணை தேவையே இல்லாத ஆணி. சிம்டாங்காரன் பாடலில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். ஒட்டுமொத்தமாகப் பாடல்கள் கதையோட்டத்துக்கு வேகத்தடையாகவே இருந்தன.
''அவன் கார்ப்பரேட் கிரிமினல்...நான் கருவுலயே கிரிமினல்'', ''அஸ்தியைக் கரைக்குற கடல்ல அப்பாவைக் கரைச்சோம்'' உள்ளிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்- ஜெயமோகனின் வசனங்கள் மனதில் பதிகின்றன.
ஒரு விரல் புரட்சியாக தனக்காகப் போராடும் விஜய், தேர்தல் முடிவுகள் தள்ளி வைக்கச் சொல்வது, மறு தேர்தலுக்குக் காரணியாய் அமைவது, தானே வேட்பாளராகக் களத்தில் குதிப்பது எல்லாம் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் அம்சங்களாக உள்ளன. 234 தொகுதிகளிலும் போட்டி என்பதும் திரைக்கதை நகர்வுக்கு சரியான உத்திதான். அதில் பியூஷ்மனுஷ், சபரிமாலா, பேராசிரியை சரஸ்வதி என்று நிகழ்கால ஆளுமைகளை, சமூக ஆர்வலர்களை அடையாளப்படுத்தும் நோக்கில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும் சரியான உத்தி.
நெல்லை தீக்குளிப்பு சம்பவம், கண்டெய்னர் பணம் ஆகியவையும் திரைக்கதையின் பொருத்தமான இடத்தில் கோக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜல்லிக்கட்டு, வெள்ள மீட்பு என்று நடப்பு சம்பவங்கள் கைத்தட்டலுக்காகவே காட்சிகளாகவும், வசனங்களாகவும் அமைத்திருப்பது ஒரு கட்டத்தில் சோர்வை வரவழைக்கிறது. அதுவும் கழகம் இணையும் விழாவில் நடக்கும் அசம்பாவிதங்கள், அடுத்தடுத்து மாறும் அரசியல் காட்சிகள், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்பை நம்பியே மாற்றம் விதைக்க நினைப்பது ஆகியவற்றில் நம்பகத்தன்மை காணாமல் போய் செயற்கை மட்டுமே மிஞ்சுவதால் இரண்டாம் பாதியில் படத்துடன் ஒட்ட முடியவில்லை.
இவற்றை தவிர்த்துப் பார்த்தால் குறியீடுகள் மூலம் சமகால அரசியலை நினைவுகூர்ந்த விதத்தில் விஜய்யின் ‘சர்கார்’ ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் படமாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT