Published : 08 Nov 2018 06:28 PM
Last Updated : 08 Nov 2018 06:28 PM
காரணம் என்னவென்று சொல்லாமல் படத்துக்குத் தடை விதிப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ‘மெரினா புரட்சி’ படத்தின் இயக்குநர் எம்.எஸ்.ராஜ்.
எம்.எஸ்.ராஜ் இயக்கியுள்ள படம் ‘மெரினா புரட்சி’. நாச்சியாள் ஃபிலிம்ஸ் சார்பில் அவரே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படம், ஜல்லிக்கட்டுக்காக மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை வாரிய உறுப்பினர்கள், படத்துக்கு தணிக்கைச் சான்று அளிக்க மறுத்துவிட்டனர். எனவே, ரிவைஸிங் கமிட்டியை நாடினார் எம்.எஸ்.ராஜ். நடிகை கவுதமி தலைமையிலான ரிவைஸிங் கமிட்டியும் ‘மெரினா புரட்சி’ படத்துக்குச் சான்றிதழ் அளிக்க மறுத்து, இரண்டாவது ரிவைஸிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பச் சொல்லிவிட்டது.
இப்படி படம் நிராகரிக்கப்படுவதற்கு என்ன காரணம்? என ‘இந்து தமிழ் திசை’க்காக எம்.எஸ்.ராஜிடம் பேசினேன். “இரண்டு முறையும் என்ன காரணம் எனச் சொல்லாமலேயே படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் அளிக்க மறுத்துள்ளனர். காரணமே சொல்லாமல் படத்துக்குத் தடை விதிப்பது ஏன்?
இந்தியன் சினிமாட்டோகிராப் சட்டம் 1983 விதியின்படி, ரிவைஸிங் கமிட்டி மறுப்பு தெரிவித்தால், FCAT எனப்படும் டெல்லியிலுள்ள டிரிப்யூனலுக்குச் சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், அவர்கள் எனக்கு அனுப்பி மின்னஞ்சலில் இதுபற்றி எதுவும் குறிப்பிடாமல், இரண்டாவது ரிவைஸிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள்.
தணிக்கைச் சான்றிதழ் தராததற்கு என்ன காரணம் எனக் கூறினால், அதைத் தீர்க்க முயற்சிக்கலாம். அதை விட்டுவிட்டு, ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பச் சொல்வதால், ஒவ்வொரு முறையும் எனக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவாகிறது” என வருத்தப்பட்டார்.
தணிக்கைச் சான்றிதழ் தர மறுப்பதற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு, “எனக்குத் தெரிந்து விலங்குகள் நல அமைப்பொன்று, என் படத்தை வெளிவர விடக்கூடாது என மும்பை மற்றும் சென்னையிலுள்ள தணிக்கை வாரியங்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. அதனால் தான், அவர்கள் காரணத்தைக் கூட சொல்ல மறுக்கிறார்கள்” என்றார் எம்.எஸ்.ராஜ்.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுத்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த எம்.எஸ்.ராஜ், “இன்றுதான் (நவம்பர் 8) இதுகுறித்து என் வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்ய இருக்கிறேன். விரைவில் நீதிமன்ற வழக்கு குறித்து முடிவெடுப்பேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT