Published : 09 Nov 2018 04:07 PM
Last Updated : 09 Nov 2018 04:07 PM
தாராபுரத்தில் சர்கார் படம் திரையிடப்பட்ட திரையரங்கின் மேலாளரை அதிமுகவினர் தாக்கியதால் இன்றைய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
அத்திரைப்படத்தில், அரசு மக்களுக்கு தரும் இலவச பொருட்களை கொச்சைப்படுத்தியிருப்பதாகவும், வில்லிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படும் ‘கோமளவல்லி’ என பெயரிட்டுள்ளதாகவும், புகார் எழுப்பி அதிமுக தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவினரின் எதிர்ப்பை அடுத்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் மற்றும் படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ள தேனாண்டாள் நிறுவனம் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மூவரும் கலந்தாலோசித்து படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று அறிவித்தன.இன்று பிற்பகல் முதலான காட்சிகள் இந்த காட்சிகள் நீக்கப்பட்டு திரையிடப்படும் என்று அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதலே பல்வேறு திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் அமைந்துள்ள எஸ்.வி.ஆர் திரையரங்கம் முன்பாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
மீண்டும் பிற்பகல் காட்சி திரையிடப்படவிருந்த நிலையில் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என அதிமுகவினர் திரையரங்கின் முன்பாக இருந்த பேனர்களை கிழித்தெறிந்தனர்.
மேலும் திரையரங்கினுள் நுழைந்து மேலாளரை தாக்கினர். இதன் காரணமாக இன்று திரையிடப்படவிருந்த காட்சிகள் எஸ்.வி.ஆர் திரையரங்கில் ரத்து செய்யப்பட்டது. ஆத்திரமடைந்த ரசிகர்கள் அந்த திரையரங்கின் முன்னதாக குழுமினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
உடனடியாக போலீஸார் அங்கு குவிக்கப்பட்டு வருவதால் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. திரையரங்கின் மேலாளர் தாக்கப்பட்ட விவகாரத்தின் காரணமாக அதே பகுதியில் அமைந்துள்ள சந்தியா என்ற மற்றொரு திரையரங்கு காட்சிகள் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT