Published : 28 Nov 2018 06:23 PM
Last Updated : 28 Nov 2018 06:23 PM
ஷங்கர் - ரஜினிகாந்த் இணையின் '2.0' திரைப்படம் உலகளவில் கிட்டத்தட்ட 10,500 திரைகளில் திரையிடப்படவுள்ளது. இதற்கு முன் 'பாகுபலி 2' 9000க்கும் அதிகமான திரைகளில் திரையிடப்பட்டதே சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை '2.0' தற்போது முந்தியுள்ளது.
வட இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 5000 திரைகளில் '2.0' திரையிடப்படும். ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் 1100, தமிழகத்தில் 900, கேரளாவில் 450, கர்நாடகாவில் 400 என இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 7800 திரைகள். அமெரிக்காவில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று பதிப்புகளையும் சேர்த்து 800 திரைகளில் வெளியாகிறது. படத்தின் வரவேற்புக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை கூடும்/குறையும். கனடாவில் மூன்று மொழி பதிப்புகளுக்கும் சேர்த்து 50 திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வசூல் செய்த படங்களில், ரஜினி படங்களே நான்கு உள்ளன. இதில் ரஜினிக்கு போட்டியே இல்லை. 'எந்திரன்', 'லிங்கா', 'கபாலி', 'காலா' படங்களைத் தொடர்ந்து '2.0'வும் மில்லியன் டாலர்களை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவில் 140 திரைகளில் '2.0' வெளியாகிறது. இங்கு 'கபாலி'யின் வசூலை இதுவரை எந்தப் படமும் முந்தவில்லை. அதே போல, பிரிட்டைனில் எந்திரனின் வசூலை இதுவரை எந்தப் படமும் முந்தவில்லை. அங்கு '2.0' 297 திரைகளில் வெளியாகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 300-லிருந்து 350 திரைகளில் '2.0' வெளியாகிறது. இங்கு மட்டும், முதல் நாளில், 700-க்கும் அதிகமான காட்சிகள் திரையிடப்படவுள்ளதாகத் தெரிகிறது. இது சமீபத்தில் வெளியான அமீர்கானின் 'தக்ஸ் ஆஃப் ஹிந்துதோஸ்தானின் முதல் நாள் காட்சிகளை விட அதிகமாகும்.
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளீட்ட பகுதிகளில் '2.0' 155 திரைகளில் வெளியாகிறது. ஆஸ்திரேலியாவைப் பொருத்தவரை அங்கு அதிகம் வசூலித்த படமாக 'பாகுபலி 2' இருக்கிறது. அடுத்த இடத்தில் 'கபாலி' இருக்கிறது.
க்யூப் நிறுவனம் கிட்டத்தட்ட 65,000 கேடிஎம்களை தரவுள்ளது. இது 13,000 திரைகளுக்காக. அப்படியென்றால் படத்தின் வரவேற்புக்கு ஏற்றவாரு 13,000 திரைகள் வரை திரையிடப்படலாம். உதாரணத்துக்கு, 10 அரங்குகள் கொண்ட ஒரு மல்டிப்ளெக்ஸில் 10 அரங்குகளுக்குமே கேடிஎம் கொடுக்கப்படும். ஆனால் அதில் 8 திரைகளில் மட்டுமே திரையிட அரங்க உரிமையாளர்கள் முடிவுசெய்யலாம். கூட்டம் அதிகமானால் திரைகளும் அதிகரிக்கும்.
உலகளவில், 65-70 தேசங்களில் 2,200 திரையரங்குகள் உள்ளன. '2.0', இந்தியாவில், மூன்று மொழிகளில் வெளியாகிறது. சப்டைட்டில்களோடும் 2 தனி பதிப்புகள் தயாராகவுள்ளன
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT