Last Updated : 28 Nov, 2018 02:25 PM

 

Published : 28 Nov 2018 02:25 PM
Last Updated : 28 Nov 2018 02:25 PM

இது பயோபிக் காலம்!- படமாகிறது  நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை

பாலிவுட்டில் 'சஞ்சு', தெலுங்கிலும் தமிழிலும் சாவித்திரியின் 'மஹாநடி' போன்ற பயோபிக் படங்கள் அபார வெற்றி பெற்ற சூழலில் தற்போது தமிழ்த் திரையுலகின் காமெடி குணச்சித்திர ஜாம்பவான்களில் ஒருவரான சந்திரபாபுவின் கதை திரைப்படமாகவுள்ளது.

'ஜேபி: தி லெஜண்ட் ஆஃப் சந்திரபாபு' (JP: The Legend of Chandrababu) என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை 'சீவலப்பேரி பாண்டி, 'அமரன்', 'கோவில்பட்டி வீரலட்சுமி' போன்ற படங்களை இயக்கிய கே.ராஜேஸ்வர் இயக்குகிறார்.

இது குறித்து ராஜேஸ்வர் 'தி இந்து'விடம் பேசும்போது, சந்திரபாபு பாத்திரத்தில் நடிப்பது யார் என்று தேர்வு செய்யப்பட்டவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்றார். இந்தப் படத்தில் சந்திரபாபு நடித்த பல்வேறு படத்திலிருந்தும் பாடல்கள் தொகுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தப் படத்தை இந்தோ -ரஷ்ய நிறுவனமான ருரோ தயாரிக்கிறது. ரஷ்ய மொழியிலும் படம் டப் செய்யப்படவுள்ளது.  படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான ப.தங்கப்பன் கூறும்போது,"ரஷ்யாவில் எப்போதுமே இந்தியப் படங்களுக்கு மவுசு அதிகம். ஆனால், சோவியத் யூனியன் சிதைந்த பின்னர் அங்கு நிறைய இந்தியப் படங்கள் திரையிடப்படுவதில்லை" என்றார்.

ஜோசப் பனிமய மாதா பிச்சை

சந்திரபாபுவின் இயற்பெயர் ஜோசப் பனிமய மாதா பிச்சை. தூத்துக்குடி பனிமய மாதா திருக்கோயில் நினைவாக அவருக்கு அவரது பெற்றோர் அந்தப் பெயரைச் சூட்டியுள்ளனர். சுதந்திர போராட்டத்தின் போது சந்திரபாபுவின் தந்தை ரோட்ரிக்ஸ் 7 முறை கைது செய்யப்பட்டார்.

ஹீரோவைவிட ஒருபடி மேல்

தூத்துக்குடியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ரோட்ரிக்ஸின் மகன் சந்திரபாபு. திரையுலகில், ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் கேட்பதாலேயே அவர் மிகவும் பிரபலம். 'சபாஷ் மீனா' படத்தில் சிவாஜி கணேசனைவிட ஒரு ரூபாய் அதிக சம்பளம் வாங்கினார். சென்னை சாந்தோமில் 20 கிரவுண்டில் பிரம்மாண்டமாக வீடு கட்டினார். கார், வீட்டின் இரண்டாவது தளம் வரைக்கும் செல்லும் வகையில் கட்டுமானம் இருந்தது.

'பாவ மன்னிப்பு' கதை சந்திரபாபு எழுதியது. அந்தப் படத்தில் அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 3000 அடி ஷூட் முடிந்த நிலையில் படம் கைமாறியது.

அவரது திறமைகள் ஏராளம். ஆனால் வாழ்க்கை அவருக்கு தாராளம் காட்டவில்லை. கடைசி காலத்தில் வாடகை வீட்டில், மின்சாரக் கட்டணம் செலுத்த கூட பணமில்லாமல் உணவுக்கு வழியில்லாம் இருந்தார். எல்லா பிரச்சினையும் எம்.ஜி.ஆரை வைத்து 'மாடி வீட்டு ஏழை' படத்தை எடுக்க முயன்றபோது ஆரம்பித்தது. எம்ஜிஆர் படப்பிடிப்புக்கு சரிவர வராததால் இருவருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. ஒருநாள் எம்ஜிஆர் வீட்டுக்குச் சென்ற சந்திரபாபு எம்.ஜி.சக்கரபாணியுடன் தகராறில் ஈடுபட்டார். நாற்காலியால் சக்கரபாணியைத் தாக்கவும் முயன்றார்.

சிக்கல் விளைந்தது

இதனால், அந்தப் படத்துக்கு மூடுவிழா நடந்தது. படத்துக்காக சந்திரபாபு வாங்கியிருந்த கடன்கள் அவருக்குச் சிக்கலை விளைவித்தன. கனவு இல்லத்தை அடமானம் வைத்தார். ஆனால், அதன்பின்னர் எம்ஜிஆர் சந்திரபாபு மீது எவ்வித காழ்ப்புணர்ச்சியும் கொள்ளவில்லை என்பதற்கு சாட்சியாக 'பறக்கும் பாவை', 'அடிமைப்பெண்'ணில் சந்திரபாபு நகைச்சுவை நாயகனாக நடித்தார்.

சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஒரு காட்சியில் எம்ஜிஆரும் - சந்திரபாபுவும் மனம் திறந்து பேசுவதுபோல் ஒரு காட்சியை யோசித்துள்ளதாக இயக்குநர் ராஜேஸ்வர் கூறியுள்ளார்.

அந்தக் காட்சிக்குப் பின் 'குமாரராஜா' படத்தில் வரும் ஒண்ணுமே புரியல உலகத்துல பாடலைப் பொருத்தவும் இயக்குநர் திட்டமிட்டுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x