Published : 24 Oct 2018 12:11 PM
Last Updated : 24 Oct 2018 12:11 PM
மலையாளத்தில் அறிமுகமான முதல் படத்திலேயே நிவின் பாலியுடன் இணைந்து நடித்து, வரவேற்பை பெற்றவர் ரெபா மோனிகா ஜான். அவர் தற்போது ‘ஜருகண்டி’ திரைப்படம் மூலம் தமிழில் கால் பதிக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்...
தமிழில் நடித்த அனுபவம் குறித்து...
மலையாளத்தில் 2 படங்களில் நடித்திருந்தாலும், முதன்முதலாக தமிழ் படத்தில் நடிக்கும்போது டென்ஷன் இருக்கத்தான் செய்தது. ‘ஜருகண்டி’ படத்தின் கதையையும், அதில் என் கேரக்டரையும் பற்றிக் கேட்டபோது, ரொம்ப ஈர்க்கப்பட்டு ஒப்புக்கொண்ட படம் அது.
அந்த கேரக்டர் பற்றி...
அப்பா, அம்மா, உறவினர்கள் எனயாருமே இல்லாத கீர்த்தி என்ற பெண்தான் நான். எனக்கு ஒரு பெஸ்ட் ஃபிரெண்ட். ஒரு பிரச்சினையில் சிக்கும்நான் எப்படி மீண்டு வருகிறேன் என்பது கதை. நான் பிரச்சினையில் சிக்கியதும், படத்தில் உள்ள மற்ற கேரக்டர்களும் என்னைச் சுற்றியே வலம்வரும். எனக்கு உதவி செய்வதைவிரும்பாத ஹீரோ, மறைமுகமாக உதவுவார். அது நல்ல வலுவான கதாபாத்திரம்.
ஜெய்யுடன் நடித்த அனுபவம்?
நல்ல நடிகராக ஜெய்யை ஏற்கெனவே எனக்கு பிடிக்கும். அவரது ‘ராஜா ராணி’, என் ஃபேவரிட் படம்.அனுபவம் உள்ள நடிகர், 2 படங்கள் மட்டுமே நடித்த என்னிடம் எப்படி நடந்துகொள்வார்? மொழி வேறு தெரியாது. இதனால் ரொம்ப பயந்தேன். அவரோ, நட்புடன் பழகினார். தவிர, வெங்கட் பிரபு கூட்டாளி ஆச்சே, படப்பிடிப்பு தளம் கலகலவென இருக்கும். அந்த சூழலைப் பார்த்ததுமே பயம் போய்விட்டது.
எதன் அடிப்படையில் படம் ஒப்புக்கொள்கிறீர்கள்?
உடல் அழகைக் காட்டி நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது எனக்கு சரிப்பட்டு வராது என முன்கூட்டியே சொல்லிவிடுவேன். மற்றபடி, பெரிய ஹீரோவுடன் நடிக்கிறோம் என்பதை தாண்டி, கதை மற்றும் என் கதாபாத்திரத்துக்கான முக்கியத்துவத்தை பார்த்து ஓ.கே சொல்வேன். ‘ஜருகண்டி’ படத்தில் ஹீரோ, கதை, என் கேரக்டர் என மூன்றுமே சரியாக அமைந்தது. நான் சினிமாவில் அறிமுகமான ‘ஜேக்கபிண்டே ஸ்வர்கராஜ்யம்’ திரைப்படம், எனக்கு எல்லா வகையிலும் பிளஸ்ஸாக அமைந்ததுபோல, முதல் தமிழ் படமும் நன்றாக அமைந்திருக்கிறது.
‘நானும் ரவுடிதான்’ கன்னட ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நீங்கள் நடிப்பது குறித்து...
கொஞ்சம் ரிஸ்க்தான். நயன்தாராவோடு எல்லோரும் ஒப்பிட்டு பேசுவார்கள். விமர்சிப்பார்கள். அதுவும் ஒரு வகையில் நல்லதே. அதுதான் சவாலாகவும் இருக்கும். அதில் நயன்தாராவின் காதம்பரி பாத்திரம்எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது ஏதாவது ஒரு கேரக்டரில் நடித்தாலே போதும் என்று நினைத்த எனக்கு, எனது ஃபேவரிட்டான காதம்பரி கேரக்டரே கிடைத்திருக்கிறது. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.என்னைப் போல பல நடிகைகளுக்கு அவர்தான் முன்மாதிரி.
குறிப்பாக, கேரளாவில் இருந்து வரும் நடிகைகளுக்கு தன்னம்பிக்கைஅவரிடம் இருந்துதான் கிடைக்கிறது.எந்த பின்புலமும் இல்லாமல், இத்தனை ஆண்டுகளாக ஹீரோயினாக நடிப்பது சாதாரண விஷயம் அல்ல.நடிகையாக மட்டுமின்றி, நல்ல மனுஷியாகவும் அவரைப் பிடிக்கும்.‘நயன்தாராவின் ரசிகை’ என்பதில் பெருமைப்படுகிறேன்.
நீங்கள் எப்படிப்பட்டவர்?
ரொம்ப ஜாலி பெண். எப்போதும் பேசிட்டே இருப்பேன். நட்பாக பழகுவேன். சில நேரங்களில் தனிமை விரும்பி. பெரும்பாலும் கோபம் வராது. வந்தா, அதகளம்தான்!
நடிப்பு தவிர, வேறு எதில் ஆர்வம்?
சிறுவயதில் டான்ஸ், பாட்டு கற்றுக்கொண்டேன். பள்ளி, கல்லூரி கலை நிகழ்ச்சிகளில் நான்தான் ஆல் ரவுண்டர். சிறந்த மாணவிக்கான விருதும் வாங்கியிருக்கேன். ஆனால், நடிப்பு என்பதை நினைத்துக்கூட பார்த்தது இல்லை. பள்ளி நாடகத்தில்கூட நடித்தது இல்லை. மாடலிங், மலையாள சேனலில் ரியாலிட்டி ஷோ என்று முகம்காட்ட ஆரம்பித்த பிறகு, நடிக்க வாய்ப்புகள் வந்தன. விருப்பம் இல்லாததால், நடிக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால், நடிக்கத் தொடங்கிய பிறகு முழுமூச்சாக இறங்கிவிட்டேன். சினிமா என்பதும் ஒரு கலை வடிவம்தான் என்று இப்போது புரிந்திருக்கிறது. தொழில்நுட்பக் கலைஞர்களின் பணியை கூர்ந்து கவனிக்கிறேன். நடிகையாக மட்டுமின்றி, தொழில் நுட்ப ரீதியாகவும் சினிமாவை பிடித்திருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்புக்காக வெயிட்டிங்: ‘சூப்பர் சிங்கர்’ செந்தில் கணேஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT