Published : 12 Aug 2018 04:03 PM
Last Updated : 12 Aug 2018 04:03 PM
படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் சவால்கள், நெருக்கடிகள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று பா.விஜய் கோரிக்கை வைத்திருக்கிறார்.
பாடலாசிரியர் பா.விஜய் நாயகனாக, நடித்து, தயாரித்து, இயக்கியுள்ளர் படம் ‘ஆரூத்ரா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடவுள்ளது. இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 11-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் பா.விஜய் பேசுகையில், "இரண்டு வருட உழைப்பில் உருவாகியிருக்கிறது 'ஆருத்ரா'. 1996 ஆம் ஆண்டில் என்னுடைய குருநாதர் கே பாக்யராஜின் ஆசியுடன் ஞானப்பழம் என்ற படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமானேன். இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், கடந்த வாரம் வெளியான 'மோகினி' என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன்.
கவியரசு கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பிரம்மாண்டமான பாடலாசிரியர்கள் வாழும் இந்தத் திரையுலகில் 22 ஆண்டு பயணமென்பது எளிதானதல்ல. இதற்குக் காரணமான என்னுடைய குருவிற்கும், ஆதரவளித்து அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய தமிழ் திரையுலகில் பழைய படத்தில் யார் நடித்திருந்தாலும், அந்தப் படத்தை ரீமேக் செய்துவிடலாம். ஆனால் என்னுடைய குருநாதர் கே பாக்யராஜ் நடித்த எந்தப் படத்தையும் தற்போது எந்த ஹீரோவை வைத்தும் ரீமேக் செய்ய முடியாது. சில்மிஷம், குறும்புத்தனம், ஹீரோயிஸம் இல்லாத ஹீரோயிஸம், புத்திசாலித்தனம் எனப் பல நுணுக்கமான விஷயங்களைத் தன்னுடைய திரைக்கதையில் வைத்திருப்பார். அவரை இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறேன்.
இன்றைய சூழலில் ஒரு படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் சந்திக்கும் அவலங்கள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. பணம் இங்கு ஒரு பிரச்சினையல்ல. அதனை யாரிடமாவது கடன் வாங்கிவிடலாம். ஆனால் ஒரு படத்தைத் தயாரிப்பதற்குத் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் சவால்கள்,நெருக்கடிகள் அதிகம். இது குறித்து விரிவான விவாதம் நடத்தப்படவேண்டும்.
இந்தப் படத்தின் கதையைப் பற்றி ஒரிரு வரிகளில் சொல்லவேண்டும் என்றால், ‘கருவறைக்குள் இருக்கும் பெண் குழந்தைக்குக் கூடப் பாதுகாப்பில்லாத வெறியர்கள் இருக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அரசு, சட்டம், காவல் துறை எதுவும் துணைக்கு வராது. இம்மூன்றுமாகப் பெற்றோர்களாகிய நாம் மாறினால் தான் நம்முடைய பெண் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்.’ என்ற விஷயத்தைத் தான் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறேன்.
இன்றைய சமூகத்தில் இளஞ்சிறுமிகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறை என்பது உலகளவில் இந்தியா பற்றிய ஒரு தவறான பார்வையைப் பதிவு செய்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் கொல்லிமலை என்ற பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு தான் இக்கதையை எழுதினோம். நிர்பயா, ஆசிஃபா, ஹாசினி, அயனாவரம் சிறுமி என களையப்படவேண்டிய குற்றங்கள் தொடரும் இச்சமயத்தில் இந்தப் படம் வெளியாவது பொருத்தமானது என்று நினைக்கிறேன்.
இதுபோன்ற சம்பவத்தின் பின்னணியில் பெற்றோர்களின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை நான் நேரடியாக உணர்ந்தேன். ஏனெனில் நகரம் சார்ந்த பகுதிகளில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைக் கண்காணிப்பதை விடக் கையில் இருக்கும் செல்போனில் வாட்ஸ் அப்பைப் பார்வையிடுவதற்காகத் தலைகுனிந்து இருக்கும் நேரத்தை அதிகமாகச் செலவிடுகிறார்கள்.
இப்படத்தினை தணிக்கை செய்வதற்காக தணிக்கை குழு அதிகாரிகள் பார்த்தனர். பார்த்து முடிந்தவுடன் பொதுவாக பத்து அல்லது பதினைந்து நிமிடத்தில் இயக்குநரை அழைத்து என்ன சான்றிதழ் என்று சொல்வார்கள். ஆனால் நாங்கள் வெளியே காத்திருக்கிறோம். அரை மணி நேரம் ஆகிவிட்டது. அதற்கு பிறகும் அழைப்பு வரவில்லை. பிறகு அழைப்பு வந்தது. சென்றோம். ஆனால் அவர்கள் எதையும் பேசவில்லை. அவர்களிடம் யு, யு/ஏ, ஏ என எந்த சான்றிதழ் தரப்போகிறீர்கள் என்ற கேட்டேன். எதுவும் பதிலளிக்காமல் மறுதணிக்கைக்கு பரிந்துரைத்தார்கள். பிறகு அவர்கள் பார்த்து, ஒரு சில காட்சிகளில் உள்ள வன்முறையை மட்டும் குறைத்துக் கொண்டு யு/ஏ என்ற சான்றிதழ் அளித்தார்கள். ஆனால் மிகச்சிறந்த பதிவு என்று வாழ்த்தினார்கள்” என்று பேசினார் பா.விஜய்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT