Published : 18 Aug 2018 09:31 AM
Last Updated : 18 Aug 2018 09:31 AM
சின்னத்திரையில் ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ தொடர்களை அடுத்து, தான் நடித்துவரும் ‘வாணி ராணி’ சீரியலும் கிளைமாக்ஸை நெருங்கிவரும் நிலையில், விஜய் தொலைக்காட்சிக்காக ‘அன்னக்கிளி’ என்ற புதிய சீரியலை கையில் எடுத்திருக்கிறார் நீலிமா இசை. (நீலிமா ராணிதான்.. கணவர் பெயரான ‘இசை’யை சேர்த்துக் கொண்டிருக்கிறார்.) விரைவில் தொடங்க உள்ள புதிய சீரியல் ஷூட்டிங், தனது தயாரிப்பில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியல் என பிஸியாக இருந்தவருடன் ஒரு சந்திப்பு..
நடிகை நீலிமா பற்றி எல்லோருக் கும் தெரியும். தயாரிப்பாளர் நீலிமா வின் அனுபவம் எப்படி?
தயாரிப்பாளர் என்கிற இந்த உயரமான இடம் உடனே ஒரே நாளில் கிடைக்கவில்லை. நடிகை யாக பரிச்சயம் இருந்தாலும் தயாரிப்பாளர் என்ற இடத் துக்கு நகர நினைத்ததும், ‘அதை சரியா நீலிமா செய்வாங்களா?’ என முதலில் ஜீ தமிழ் சேனல் யோசிக்கவே செய்தது. அதன்பிறகு வந்த நம்பிக்கைதான் இப்போது 200-க்கும் மேலான அத்தியாயங்களை வழங்க வைத்திருக்கிறது. இதை வெற்றிகரமாக சாத்தியப்படுத்துவதில் என் கணவர் இசை முக்கிய பொறுப்பு ஏற்றுள்ளார். திரைக்கதை, வசனம் எல்லாம் அவரது மேற்பார்வையிலேயே நடக்கிறது. சேனலின் ஒத்துழைப்பும் மறக்க முடியாத ஒன்று.
நடிகர், நடிகைகள் பலரும் தாங்கள் தயாரிக்கும் தொடரில் ஒரு கதாபாத்திரம் ஏற்று நடிப்பது வழக்கம். இதில் நீங்கள் நடிக்கவில்லையே ஏன்?
இந்த தொடர் கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டு, அக்டோபர் முதல் ஒளிபரப் பாகத் தொடங்கியது. அந்த நேரத்தில் 3 சீரியல், 3 படங்கள் என பிஸியாக இருந்தேன். அதற்கெல்லாம் மேலே, என் சினிமா குருமார்கள், ‘நீ தயாரிக்கிற சீரியல்ல நடிக்க வேண்டாம்’ என்று சொன்னாங்க. அதுவும் சரிதான் என தோன்றியது. இது தயாரிப்பாளர் ஆவதற்கு கற்றுக்கொள்ளும் நேரம் என கருதி, நடிப்பதை தவிர்த்துவிட்டேன்.
ராதிகா, குட்டிபத்மினி போன்ற சீரியல் தயாரிப்பாளர்களிடம் பணிபுரிந்திருக்கிறீர்கள். அவர்களிடம் என்ன கற்றீர்கள்?
உந்துசக்தி, ரோல்மாடல் இல்லாமல் இங்கு எதுவுமே இல்லை. வாழ்க்கையை நகர்த்துற பல விஷயங்களுக்கு அது முக்கியம் என நம்புகிறேன். நான் பெரும்பாலும் பெண் தயாரிப்பாளர்களின் கம்பெனி சீரியல் களில்தான் நடிச்சிருக்கேன். அதுவும் ராதிகா, குட்டி பத்மினி, ‘சரிகமப’ விஜயலட்சுமி எல்லோருமே திறமைசாலிங்க. எனக்கு 7 வயசு இருக்கும்போதிருந்தே ராதிகாவை பார்த்துட்டு இருக்கேன். அவ்வளவு எனர்ஜியோட ஓடிட்டிருக்காங்க. என் பிள்ளைக்கு 7 வயசு ஆகும்போதும் இதே வேகத் தோடு ஓடுவாங்கன்னு நினைக்கிறேன். இப்படி எனக்கு பல பெண்கள் ரோல்மாடல்.
‘அன்னக்கிளி’ தொடரில் என்ன அவதாரம்?
வில்லியாக வரப்போறேன். அதில் என் பெயர் துர்கா. ஆடி மாதம் முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்க முடிவெடுத்திருந்தோம். அதான், ஆவணி வந்துடுச்சே, இனிமே ஷூட்டிங்தான். ஒளிபரப்பும் விரைவில் தொடங்கும். ஒட்டுமொத்த கதையை அடுத்தடுத்த இடத்துக்கு நகர்த்துற வேலையை துர்கா தன் கையில எடுக்குற ரோல். ரொம்பவே வித்தியாசமா இருக்கும்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நீலிமாவை அதிகம் பார்க்க முடிவதில்லையே?
விஜய் தொலைக்காட்சியில் வந்த ‘அணு அளவும் பயமில்லை’ நிகழ்ச்சி தவிர பெருசா வேறு எந்த ரியாலிட்டி நிகழ்ச்சியையும் நான் எடுத்துக்கலை. ஆரம்பத்தில் இருந்தே அதுல எனக்கு அவ்வளவா ஈர்ப்பு இல்லை.
ஆன்மிகத்தில் அளவுகடந்த ஈடுபாடு செலுத்துகிறீர்களே?
ஆன்மிகம் என்பது நம் கையில் இல்லை. அது இறைவன் தரும் வரம். என் பெரும்பாலான ஆன்மிகப் பயணங்கள் எந்தவித திட்டமிடலும் இல்லாமல், அடுத்தடுத்த நிமிஷங்களில் திடீர்னு முடிவாகி அமைஞ்சதுதான். சிவன், ஷீர்டி சாய்பாபா என்றால் எனக்கு அவ்வளவு இஷ்டம். சிவனின் அம்சமாகத்தான் சாய்பாபாவை பார்க்கிறேன். இறைவனைப் பார்க்குற, தேடுற, அவரிடம் போய் சேர்கிறதுக்கான கொடுப்பினைகூட அவர் தர்றதுதான். அவர் தருகிற பிடிமானத்துலதான் நாம் செல்கிறோம் என்று ஆழமாக நம்புகிறவள் நான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT