Published : 16 Aug 2018 08:47 AM
Last Updated : 16 Aug 2018 08:47 AM
‘‘சிவாஜிகணேசனுக்கு ‘தங்கப்பதக்கம்’, ரஜினிக்கு ‘மூன்றுமுகம்’ கமல்ஹாசனுக்கு ‘காக்கிச்சட்டை’ விஜயகாந்த்துக்கு ‘கேப்டன் பிரபாகரன்’ தொடங்கி பலப் படங்கள், விஜய்க்கு ‘போக்கிரி’, சூர்யாவோட ‘சிங்கம்’ இப்படி இங்கே உள்ள முக்கிய நடிகர்கள் பலரோட சினிமா வாழ்க்கையில் போலீஸ் கதைகள் அவங்களுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கு. அந்த வரிசையில பிரபுதேவாவுக்கு இந்தப் படம் அமையணும்கிற எண்ணத்தோடத்தான் எல்லோருமே கடின உழைப்பை வழங்கி வருகிறோம்’’ என்கிறார், இயக்குநர் எ.சி.முகில் செல்லப்பன்.
பிரபுதேவா இயக்கிய தமிழ், இந்திப் படங்களில் இணை இயக்குநர், கதை ஆசிரியராக பணியாற்றியவர் இயக்குநர் எ.சி.முகில் செல்லப்பன். தற்போது அவரை வைத்து ‘பொன் மாணிக்கவேல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அவருடன் தொடர்ந்து உரையாடியதில் இருந்து…
இது பிரபுதேவாவுக்காகவே உருவாக் கப்பட்ட கதையா?
என்னோட அப்பா சினிமாவை ரொம்ப நேசிக்கக் கூடிய ஒரு மனிதர். அவர்கிட்ட அப்பப்போ மனசுல தோணும் கதைகளை சொல்வது வழக்கம். ‘போக்கிரி’ படத்துல நான் இணை இயக்குநர். அந்தப் படம் ரிலீஸானப்போ அப்பாவோட போய் படம் பார்த்தேன். படம் முடிஞ்சு வெளியே வந் தப்போ, ‘இந்த மாதிரி ஒரு படம் பண் ணுடா?’ன்னு சொன்னார். அதுக்கு பிறகு அப்படியே ஓடிக்கிட்டே இருந்தேன். இடை யில் நிறையப் போராட்டங்களையும் சந்தித்தேன்.
ஒருநாள் ‘பொன்மனச் செல்வன்’ படத் தோட லைன் மனசுல வந்து விழுந்துச்சு. அதை அப்படியே வந்து பிரபுதேவா சார்கிட்ட சொன்னேன். ’ரொம்ப நல்லா இருக்கு முகில்’னு சொன்னார். நீங்கதான் ‘பொன் மாணிக்கவேல்’னு சொன்னேன். ஒரு சின்ன சிரிப்போட, ‘ஆரம்பிச்சிடலாம்’னு சொன்னார். இப்போ படப்பிடிப்பில் அப் படியே பொன் மாணிக்கவேலாகவே உருமாறிவிட்டார் சார். படம் எதிர்பார்த்த மாதிரியே நல்லா வளர்ந்துக்கிட்டிருக்கு. சமீபத்தில் வெளியான போஸ்டர் அப்படி ஒரு ரீச். அதைப் பார்த்த என் அப்பாவுக்கும் அவ்வளவு சந்தோஷம். சரியா சொல்லணும்னா இது என் தந்தையோட கனவுப் படம்.
‘கண்டேன்’ படத்துக்குப் பிறகு நீங்கள் இயக்கும் 2-வது படம் இது. உங்களை எந்த மாதிரி இப்படம் அடையாளப்படுத்தும்?
வெற்றி கொடுக்கணும்னுதான் போராடுறோம். இயக்குநரா மட்டுமே வெற்றி அடையணும்னு நான் ஓடலை. கதை, திரைக்கதை, வசனம்னு முழுமையா பேர் வாங்கணும்னுதான் ஆசை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படி ஒரு படம் பண்ற வாய்ப்பு அமைந்திருக்கு. இந்தியில் சல்மான் கான், அக்ஷய்குமார் தொடங்கி, தெலுங்குல சிரஞ்சீவி, இங்கே விஜய் வரைக்கும் சூப்பரான ஸ்டார்களை இயக்கியவர் பிரபு சார். அவரை வைத்து நான் படம் பண்ணுவது 15 பெரிய நடிகர்களை இயக்கியது போல மனநிலை தோணுது. பிரபு சார் எனக்கு இதன் மூலமா வாழ்க்கை கொடுத்திருக்கார்னுதான் சொல்லணும். எங்களுக்குள் இருப்பது தொழில் சார்ந்த ஒரு உறவு அல்ல. உள்ளம் சார்ந்த உறவு. அதை மனசுல வைத்து நான் உழைச்சிக்கிட்டிருக்கேன்.
‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் கதை என்ன?
சேலம்தான் எங்க ஊர். சில வருஷங்களுக்கு முன்னே அங்கே காவல்துறை உயர் அதிகாரி பொன் மாணிக்கவேல் பொறுப்பில் இருந்தார். அவரோட நேர்மை, உழைப்பு, தனித்துவம் எல்லாமும் எங்க பகுதியில் ரொம்பவும் பேசப்பட்டுச்சு. அந்தப் பாதிப்புதான் இந்த கதைக்கான விதை. இப்போது கூட சிலை கடத்தல் விஷயத்தில் அவர் மேல் சின்னச் சின்னதா விமர்சனம் வந்துக்கிட்டிருக்கு. எப்பவுமே உண்மையா உழைக்கிறவங்க நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவருக்கும் இதை எதிர்கொள்கிற மனப்பக்குவம் உண்டு. அதை நான் அந்த காலகட்டத்துலயே பார்த்திருக்கேன்.
நிவேதா பெத்துராஜ் எப்படி இந்தப் படத்தில் இணைந்தாங்க?
கதைக்கு வெளியே அவங்களோட கதாபாத்திரம் இருக்காது. நிவேதா படத்துல உதவி ஆணையர் பொன் மனச் செல்வனோட மனைவியா வர்றாங்க. அன்பரசி அவங்களோட கதாபாத்திரம். பொன் மாணிக்கவேல் வெளியில மட்டும்தான் உண்மை, உழைப்பு, நேர்மைன்னு இருக்குற அதிகாரி இல்லை. வீட்டுல மனைவியோட கனவு, லட்சியம், சுதந்திரம் இப்படி எதுலயும் குறுக்கே நிற்காமல் அவங்களோட வெற் றிக்கு ஆதரவா நிற்கிற ஒரு குடும்பத் தலைவன்.
பிரபுதேவாவுடன் நெருக்கமாக இருந்து வருபவர், நீங்கள். அவரது நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பு இப்படத்தில் இருக்குமா?
இங்கே எல்லாருமே பிரபு சாரோட அவுட்லுக் பார்த்திருப்பாங்க. வீரம், தைரியம், ஆளுமை, நேரம் தவறாமை, சினிமா பத்தின கடுமையான உழைப்புன்னு அவரோட முழு ஒரிஜினாலிடி கூடவே இருக்குறதுனால எனக்கு நல்லாத் தெரியும். இப்போ வரைக்கும் அவர்கிட்ட என்ன மாதிரியான கதைகள் சொல்லப்பட்டிருக்கு? என்ன மாதிரி களம் அவர் தொடணும்னு விரும்புறார்? இந்தக் கதைக்கு அவர் என்ன மாதிரியான யோசனைகள் சொல்றார்? இதெல்லாம் வைத்துதான் இந்தத் திரைக்கதையை எழுதினேன்.
எல்லாத்தும் மேல ஷூட்டிங்ல நானும், அவரும் ஒரு இயக்குநர், ஹீரோ மாதிரியே இருக்குறதில்லை. இப்பவும் நான் அவரோட அசிஸ்டெண்ட் மனநிலையிலதான் இருக்கேன். பொதுவா படப்பிடிப்புல ஸ்டார்ட், கேரமா, ஆக்ஷன் எல்லாம் இருக்கும். இங்கே நான் ஆக்ஷன்னு சொல்றதுக்கு முன்னாடியே நடிக்க ஆரம்பித்துவிடுவார். அதுதான் எங்க இருவருக்குமான உறவு. இயக்குநர், நடிகருக்கான பார்முலா இங்கே இல்லை. அது எல்லாமே உணர்வுபூர்வம்கிற ஒரு விஷயமாக எங்களுக்குள்ள படர்ந்துக் கிடக்கு.
படம் எப்போது ரிலீஸ்?
விறுவிறுப்பா சென்னையில் பட மாக்கி வர்றோம். அடுத்து முக்கிய காட்சி களை மும்பையில படமாக்குற எண்ணம் இருக்கு. நேமிசந்த் சபக் நிறுவனத்தோட தயாரிப்பாளர் ஹித்தேஷ் சபக் படத்தோட கதையை கேட்ட தோடு சரி. அதுக்கு பிறகு முழு சுதந்திரம் கொடுத்துட்டார். அது படக்குழுவுக்கு இன்னும் கூடுதல் பொறுப்பை கொடுத்திருக்கு. சீக்கிரமே முழு வேலைகளும் முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT