Last Updated : 11 Jul, 2018 08:27 AM

 

Published : 11 Jul 2018 08:27 AM
Last Updated : 11 Jul 2018 08:27 AM

மனசுக்கு பிடிச்ச வேலை சவாலானது அல்ல:‘ஜருகண்டி’ இயக்குநர் பிச்சுமணி நேர்காணல்

ஒரு வின்டேஜ் கார், ரெண்டே ரெண்டு கதாபாத்திரங்கள், வட இந்திய பயணம்.. இப்படி ஒரு பின்னணியில கதை எழுதியிருந்தேன். அந்தக் கதைக்கு வைக்கலாம்னு திட்டமிட்ட தலைப்பு இது.

அதை இந்தப் படத்துக்கு வச்சிட்டேன். ஆனா, இதுவும் ஒரு பயணக் கதைதான். சென்னை, பாண்டிச்சேரின்னு பயணிக்கிற களம். இதுவும் பயங்கர வேகம். படத்துல வர்ற ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு பிரச்சினை. ‘ஜருகண்டி’ன்னு உச்சரிக்கும்போது, அதுல ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு இருக்கு. இந்தப் பயணத்துக்கும் பொருந்தும்னு தோணுச்சு.. வச்சிட்டேன்.. -  ‘‘சினிமாவுக்கு ஏன் ‘ஜருகண்டி’ன்னு பேரு?’’ என்ற கேள்விக்கு, அந்தப் படத்தின் இயக்குநர் பிச்சுமணி அளித்த சுவாரசிய பதில் இது. தொடர்ந்து அவருடன் பேசியதில் இருந்து..

ஜெய், புதுமுக நாயகி ரெபா மோனிகா ஜான், ரோபோ சங்கர், டேனி என இந்த கூட்டணி எப்படி அமைந்தது?

முதல்ல படத்தின் தயாரிப்பாளர் நிதின் சத்யாவுக்கு நன்றி சொல்லணும். நிறைய கதை கேட்டுட்டு ஒரு கட்டத்துல, ‘‘மணி! உன் கதையையே ஆரம்பிச்சுடுவோம். அதுதான் சரியா வரும்னு தோணுது. கதைக்கு யார் யாரெல்லாம் பொருத்தமா இருப்பாங்களோ, அதை சரியா தேர்வு செய். சொன்ன நேரத்துக்குள்ள படத்தை முடிச்சுக் கொடுத்துடு, அது போதும்’’ என்று கூறி, எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அந்த அன்பில் உருவான கூட்டணிதான் இது. நாயகியை பயங்கர ஆடிஷனுக்கு பிறகு தேர்வு செய்தோம். இப்படி இந்தப் படத்தில் ஒவ்வொரு விஷயமும் ஒரு அனுபவம்.

பயணம் சார்ந்த களம் என்பதால் படப்பிடிப்பில் நிறைய சவால்களை சந்தித்திருப்பீர்களே?

பிடித்து செய்கிற வேலை எப்பவுமே சவாலானது அல்ல. கதையா யோசிக்கும்போதே, வெவ்வேறு லொக்கேஷன்களை மனசுல வச்சுக்கிட்டுத்தான் எழுதினேன். படத்தில் ஹீரோவின் வீடு வரும். அதை 2 ஷாட்டில் மட்டும்தான் காட்டுவோம். மத்தபடி ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு லொக்கேஷன் என மாறிக்கிட்டே இருக்கும். சென்னை, பாண்டி வழியில நாம் பார்த்த இடங்கள்தான் படத்தில் வரும் என்றாலும், அது புதுசா இருக்கும். அதோட, இந்தக் களத்துக்குப் பொருத்தமா ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் இணைந்ததும் சந்தோஷமா இருந்துச்சு. நாங்க நினைத்ததைவிட படம் சிறப்பா வந்திருக்கு.

டிரெய்லரை பார்த்தால் வங்கிக் கொள்ளை சம்பந்தப்பட்ட படம் மாதிரி தெரிகிறதே?

அதுக்குள்ள நாங்க போகலை. ஹீரோ கஷ்டப்படுற குடும்பத்துப் பையன். வாழ்க்கையில செட்டில் ஆகணும்னு பேங்க் லோன் வாங்குவான். அதற்குப் பிறகு வர்ற பிரச்சினைகள் என்ன என்பதுதான் படம். சிலர் டிரெய்லர்ல வர்ற வங்கிக் காட்சியைப் பார்த்துட்டு ‘இரும்புத்திரை’ சாயல்ல இருக்கேன்னும் கேட்குறாங்க. நிச்சயமா இல்லை.

படத்துல ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு விதத்துல பிரச்சினையை எதிர்கொள்வாங்க. அவங்களோட தேவைகளை நியாயப்படுத்துவாங்க.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் மாணவர் நீங்கள். அவரிடம் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

ஜனரஞ்சகம்தான். பொழுதுபோக்கு அம்சத்தோடு படம் எடுக்கணும்னு நினைப்பார். தவிர, அவரோட படத்துல நடிகர், நடிகைங்க ரொம்ப கூலா இருப்பாங்க. ஸ்பாட்ல கலைஞர்களை அவர் அணுகி, வேலை வாங்குற விதமும் வித்தியாசமா, சிறப்பா இருக்கும். நடிகர்களுக்கு காட்சிகளை புரியவச்சாலே, நமக்கு தேவையானதை கொடுத்துடுவாங்க. அதுவும் அவர்கிட்ட கத்துக்கிட்டதுதான்.

ஹீரோ ஜெய்யை சமாளிப்பது சிரமம் என்று ஒரு பேச்சு இருக்கிறதே?

வேறு சிலரும் இதுமாதிரி சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. ஜெய் எனக்கு நல்ல நண்பர். நீண்ட நாள் பழக்கம். ‘சென்னை 28’ காலகட்டத்துலயே அவர் எனக்கு அறிமுகம். நிஜத்துல ஜெய் ரொம்ப அற்புதமான மனிதர். நாங்க ரெண்டு பேரும் ஏற்கெனவே சேருகிற மாதிரி இருந்தது. இப்போதான் நாங்கள் சேர சரியான வாய்ப்பு, சரியான களம் கிடைச்சிருக்கு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x