Last Updated : 20 Jul, 2018 10:01 AM

 

Published : 20 Jul 2018 10:01 AM
Last Updated : 20 Jul 2018 10:01 AM

ஒரு தலைவன் எங்கே உருவாகிறான்?- ‘அண்ணனுக்கு ஜே’ இயக்குநர் ராஜ்குமார்

‘‘கட்சி போஸ்டர் ஒட்டுறதுக்கு சுவர் புடிக்கிற போட்டியில தொடங்கி, அந்தப் போஸ்டர்ல யாரோட பேர் முன்னாடி வரணும்கிறது வரைக்கும் ஒரு தீவிரமான வெட்டுக்குத்து அரசியல் எல்லா ஊர்லயும் நடந்துக்கிட்டிருக்கு. நாம் தலைவர்களோட கதைகளைத் திரைப்படங்கள்ல பார்த்துருக்கோம். ஒரு வட்டச் செயலாளருக்கு கீழே இருக்குற கட்சி உறுப்பினர்களோட அரசியலை அதிகமா பார்த்தது இல்லை. ஒரு தலைவனை அவங்கதான் உருவாக்குறாங்க. ஜெயிக்க வைக்கிறாங்க, அரசியல் களத்தையும் அவங்கதான் தீர்மானிக்கிறாங்க. அந்த வாழ்க்கைய நிறைய நகைச்சுவை, கொஞ்சம் எமோஷன் கலந்து இந்தப் படம் வழியே கொடுத்திருக்கேன்’’ என்கிறார் ‘அண்ணனுக்கு ஜே’ பட இயக்குநர் ராஜ்குமார்.

வெற்றிமாறனும், ஃபாக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் ரிலீஸுக்கான வேலைகள் தொடங்கியுள்ளன. தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமாருடன் பேசியதில் இருந்து….

தினேஷ் நம்ம பக்கத்து வீட்டு பையன் மாதிரி தெரியுற ஒரு ஹீரோ. ’அண்ணனுக்கு ஜே’ ஒரு மாஸ் ஹீரோ சப்ஜெக்ட் படம் இல்லை. ஒரு சராசரி இளைஞன் வாழ்க்கையில எதிர்கொள்கிற சவால்கள்தான் கதையோட மையப் புள்ளி. தீவிரமான காதல், அப்பாவோட தொழில்னு சாதாரணமா இருக்குற ஒரு இளைஞனுக்கு, ஒருநாள் அவன் கண் முன்னாலேயே அவன் அப்பா அவமானப்படுறதைப் பார்க்குற சூழல் வருகிறது. அவருக்கு சமூகத்தில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தணும்னு எடுக்குற முயற்சிதான் கதை. அப்பாவை நல்லா பார்த்துக்கணும்னு நினைக்கிற எல்லா மகன்களுக்கும் இந்த படம் கனெக்ட் பண்ணும்.

இது முதல்வர், மந்திரி அளவுக்கு டீல் செய்கிற களம் அல்ல. நம்ம ஊரிலேயே அரசியல் கட்சிகள்ல வேலை செய்யும் இளைஞர்களுக்கான களம்.

’கட்சிக் கூட்டத்துக்கு குட்டி யானையில் எத்தனைப் பேரை கூட்டிட்டு வந்தே?’, ’தலைவர் வரும்போது எத்தனை பேனர் அடிச்சே?’, ‘எத்தன பேர் வீட்டு வாசல்ல கட்சி சின்னத்தை கோலமா போட வெச்சே?’ இப்படி அடிமட்ட அரசியல்ல இருக்குற சுவாரஸ்யத்த சொல்ற படம் இது. இந்தல் கதைக்கு தினேஷ் மட்டுமதான் பொருத்தமா இருப்பார். இதில் ராதாரவி சார், வையாபுரி சார், மயில்சாமி சார் மாதிரி சீனியர்களும் நடிச்சிருக்காங்க.

தமிழ்நாட்டுல பல கட்சிகள் இருந்தாலும், ஒவ்வொரு ஊர்லயும் ஏதாவது ரெண்டு கட்சிங்கதான் எதிரும், புதிருமா பெரிய பலத்தோட இருக்கும். மத்த கட்சிங்க எல்லாம் அந்த ரெண்டு கட்சியில ஏதாவது ஒரு கட்சிக்கு பின்புலமா இருக்கும். மோதல்னு வரும்போது ‘ஒன் டு ஒன்’ சண்டைன்னுதான் இறங்குவாங்க. இந்தக் கதையில இப்போ ஆட்சியில உள்ளவங்களச் சார்ந்த விஷயங்கள் இருக்கான்னு கேட்குறாங்க. யாரோ ஒரு தனி மனுஷனை, சம்பவத்தை கிண்டல் பண்ணி எடுக்குற படம் காலம் தாண்டி நிக்காதுன்னு நம்புறேன். படம் பார்க்குற எல்லார் வாழ்க்கையிலும், இந்த கதையப் பொருத்திப் பார்க்க முடியும். இந்த மாதிரி ஒரு கதை உருவாக எனக்கு உறுதுணையா இருந்த என் நண்பர்களுக்குதான் நன்றி சொல்லணும்.

இதில் நாயகி மஹிமா நம்பியார், அடாவடித்தனமான ஊர்ப் பொண்ணா நடிச்சிருக்காங்க. நம்ம வீட்டு பொண்ணுங்க மாதிரி ஒரு ‘சைல்டு ஈகோ' கேரக்டராவும் இருக்கும். காதல், மோதல், ஊடல், பிரிவு, சோகம், முடிவில் மகிழ்ச்சின்னு அவங்களுக்கு ஏகப்பட்ட எமோஷன் இருக்கு. ஊர் பொண்ணு மாதிரி நடிக்கிறதுக்காக, படப்பிடிப்பு நடந்த ஊர்ல இருந்த பொண்ணுங்களோட பழகி அவங்க உடல்மொழி, கேரக்டர்லாம் கத்துக்கிட்டாங்க. அவங்களே டப்பிங் பேசியிருக்காங்க.

நான் குறும்படங்கள் இயக்கிய நேரத்தில் என்போலவே குறும்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், நலன் குமாரசாமி உள்ளிட்ட இயக்குநர்கள் பலர் நேரடியாக சினிமா எடுக்கத் தொடங்கினாங்க. எனக்கு சினிமாவில் வேலை பார்த்துட்டு படம் பண்ணலாம்னு தோணுச்சு. வெற்றிமாறன் சார்கிட்ட கேட்டேன். என் குறும்படங்களைப் பார்த்தவர் உடனே என்னை உதவி இயக்குநரா சேர்த்துக்கிட்டார்.

அதன் பிறகு ஒரு சின்ன இடைவெளி எடுத்துக்கிட்டு ஊர் ஊரா டிராவல்ல இறங்கினேன். அப்போ பல ஊர்கள்ல பார்த்த உண்மை சம்பவங்களோட தொகுப்புதான் இந்த ‘அண்ணனுக்கு ஜே’ கதை. சில மாதங்களுக்குப் பிறகு வெற்றி சார், ‘என்னடா கதை இருக்கு?’ன்னு கேட்டார்.

படத்தோட லைனை சொன்னேன். அவருக்கும் பிடித்தது. அவர் ஃபாக்ஸ் கம்பனிக்கிட்ட இந்த கதைய கொண்டு போய் சேர்த்தார். இன்னைக்கு இந்த படம் முழுமையா உருவாகியிருக்குன்னா, என் குருவா இருந்து சினிமா கத்து கொடுத்த வெற்றி மாறன் சார்தான் காரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x