Last Updated : 31 Jul, 2018 02:06 PM

 

Published : 31 Jul 2018 02:06 PM
Last Updated : 31 Jul 2018 02:06 PM

திரையுலகில் 25 ஆண்டுகள்: உதவி இயக்குநர்களின் அன்பால் நெகிழ்ந்த ஷங்கர்

திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி அவரோடு பணிபுரிந்த உதவி இயக்குநர்கள் அனைவரும் ஷங்கரை நெகிழச் செய்திருக்கிறார்கள்.

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மதுபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் 1993-ம் ஆண்டு  வெளியான படம் ‘ஜென்டில்மேன்’. ஜூலை 30-ம் தேதி வெளியான இப்படம் நேற்றுடன் 25 ஆண்டுகளைத் தொட்டது மட்டுமன்றி, இயக்குநர் ஷங்கர் திரையுலகிற்கு அறிமுகமாகியும் 25 ஆண்டுகளானது.

இதுவரை அவரது இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் ஷங்கர்.

இந்நிலையில், ஷங்கரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்த அனைவருமே ஒன்றிணைந்து நேற்று சென்னையில் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் ஷங்கரிடம் ஆரம்பகால கட்டத்தில் பணிபுரிந்த உதவி இயக்குநர்களிலிருந்து, இப்போது பணிபுரியும் உதவி இயக்குநர்கள் வரை கலந்து கொண்டார்கள். பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், அறிவழகன், அட்லீ உள்ளிட்ட அனைவருமே இதில் பங்கேற்றார்கள்.

இதில் உதவி இயக்குநர்கள் அனைவருமே ஷங்கரைப் பற்றி தனித்தனியாக எழுதி, அதனை ஒரு புத்தகமாக தொகுத்து அதனை பரிசாக வழங்கியிருக்கிறார்கள். இதைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார் ஷங்கர். “இன்றைய தினம் தன் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். கண்டிப்பாக அனைவருமே இன்னும் பெரிய நிலைக்கு வரவேண்டும்” என்றும் பேசியிருக்கிறார்.

அந்நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். உதவி இயக்குநர்களுடனான சந்திப்பு குறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் “உதவி இயக்குநர்களின் அன்பால் நெகிழ்ந்துவிட்டேன். அவர்கள் அனைவரும் இல்லாமல் எனது பயணம் சாத்தியமில்லை” என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x