Published : 27 Mar 2025 04:40 PM
Last Updated : 27 Mar 2025 04:40 PM

ஜூன் 2-ல் அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அரசு சார்பில் ஜூன் 2-ம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் விசிக குழுத் தலைவர் சிந்தனைச் செல்வன் பேசும்போது, “தமிழகத்தில் வந்து பணிபுரியும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் தொடர்பான கொள்கை முடிவுகளை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும். மேலும், லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றி இசையமைப்பாளர் இளையராஜா சாதனை படைத்தார். அவரது சிம்பொனி இசையை தமிழக மக்களும் கேட்டு மகிழ தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், “சிம்பொனி அரங்கேற்றம் முடிந்து தமிழகம் திரும்பிய இளையராஜாவுக்கு நல்வரவேற்பு அளிக்கப்பட்டது. என்னை அவர் சந்தித்தபோது சிம்பொனி இசை நிகழ்ச்சியை தமிழகத்தில் நடத்துவது தொடர்பாக அவரிடம் கேட்டேன். சுமார் 400 இசைக் கலைஞர்கள் கொண்ட குழுவை உடனடியாக வரவழைத்து நிகழ்ச்சியை நடத்துவது சிரமம் என்று கூறினார். எனினும், மாபெரும் சாதனைகளை படைத்துள்ள இளையராஜாவின் திரையிசைப் பயணத்தின் 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு அவரது பிறந்தநாளான ஜூன் 2-ம் தேதி அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x