Published : 16 Mar 2025 08:56 AM
Last Updated : 16 Mar 2025 08:56 AM
வடசென்னையின் ராயபுரம் பகுதியில் அய்யாவு (ராதா ரவி), ஜான் (சரண்ராஜ்) இருவரும் தண்ணீர் கேன் வியாபாரிகள். தொழில்போட்டி இருந்தாலும் சுமுகமாக இருக்கிறார்கள். ஆனால், ஜானின் மனைவி ராணியும் ( மகேஸ்வரி) மைத்துனர் டப்பாவும் (ஷங்கர் நாக்) அய்யாவுவின் தொழிலைச் சரிக்க நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக அய்யாவுவிடம் கேன் டெலிவரி பையன்களாக வேலை செய்யும் தில்லை (துஷ்யந்த்), மருது (பிரியதர்ஷன்) இருவரது வாழ்க்கையில் பல வகையிலும் உரசுகிறார்கள். அது மோதலாக உருவெடுத்து ரத்தம் தண்ணீரைப் போல் ஓட, இறுதியில் யார் கை ஓங்கியது என்பதைச் சொல்லும் கதை.
தண்ணீர் ஒரு லாபம் கொழிக்கும் வியாபாரப் பொருளாக மாறிய பின்னர், அதில் பணம் பண்ணும் சிறு முதலாளிகள், அவர்களிடம் வேலை செய்யும் சாமானியர்கள் ஆகியோரின் உலகில் மலிந்திருக்கும் தொழில் போட்டியையும் அதனால் விளையும் வன்மத்தையும் வடசென்னையின் வாழ்க்கைப் பின்னணியில் சித்தரிக்கிறது திரைக்கதை.
வடசென்னை என்பதே மண்ணின் மைந்தர்களும் அங்கே பிழைக்க வந்து குடியேறியவர்களும் இணைந்து புழங்கும் சமூகங்களின் தொட்டிலாக இருப்பதை, யதார்த்தக் குற்ற நாடகமாகக் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர் ஜெயவேல் முருகன். ஆனால், அதற்குள் சினிமாத்தனமான ‘சட்டகக் காதல்’, வடசென்னை என்றாலே அங்கு வாழும் விளிம்பு நிலை மனிதர்களை குற்ற மனப்பான்மை கொண்டவர்களாகச் சித்தரிப்பது என்ற குறுகிய பார்வைக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறார்.
அதேநேரம், இந்த இரண்டு தரப்புடனும் பழக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காவலர்கள் (சிலர்), அவர்களோடு தொழில் கூட்டாளி ஆவது எந்த தமிழ்ப் படத்திலும் எடுத்தாளப்படாத கறுப்புப் பக்கம். அதை, மிகையோ, சோடனையோ இல்லாமல் சித்தரித்திருப்பது கவனிக்க வைக்கிறது. வேலி தாண்டும் காவல் ஆய்வாளர் மதுரை வீரனாக வரும் ஜீவா ரவியும், பேச்சுக் குறைபாடு கொண்ட ஜான் ஆக நடிப்பில் அடக்கி வாசித்திருக்கும் சரண் ராஜும் கூர்ந்து கவனிக்க வைக்கிறார்கள்.
‘ஆரண்ய காண்டம்’ படத்தின் காட்சிமொழி உருவாக்கிய தாக்கம், இந்தப் படம் வரை தொடர்ந்தபடி இருக்கிறது. இருப்பினும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ். ஸ்ரீராம சந்தோஷ், ராயபுரம் பனைமரத் தொட்டி பகுதியின் மிகக் குறுகலான தெருக்கள், சந்துகள், பாரம்பரிய வடிவை மிச்சம் வைத்திருக்கும் வீடுகள், குடிசைப் பகுதியின் கட்டுமானங்கள் என அனைத்துக்குள்ளும் தன் ஒளி விளையாட்டால் அதகளம் செய்திருக்கிறார். கதைக் களத்துக்கும் ஒளிப்பதிவுக்கும் வலிமை சேர்க்கும்விதமாக போபோ சசியின் பாடல்களும் பின்னணி இசையும் நம்மைப் படத்துடன் ஒன்ற வைப்பதில் வெற்றிபெறுகிறது.
அதிக வசனம் பேசாமல் அய்யாவு கதாபாத்திரத்தை அளந்து வைத்த மாதிரி நறுக்கென்று வெளிப்படுத்தி இருக்கிறார் ராதா ரவி. தில்லையாக வரும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், இயக்குநர் கேட்டதைக் கொடுத்திருக்கிறார். கதாநாயகிகளில் கேப்ரில்லா, ஹரிப்பிரியா, மகேஸ்வரி ஆகிய மூன்று பேரும் வெவ்வேறு வண்ணங்களில் உலவும் கதாபாத்திரங்களுக்கு உரிய நடிப்பைத் தந்திருக்கிறார்கள். வருணன் தண்ணீருக்கான யுத்தமல்ல; அது தரும் லாபத்துக்காகத் தெறிக்கும் ரத்தம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment