‘விஜய்-யுடன் நட்பாக இருப்பதே போதும்!’ - நடிகர், இயக்குநர் ஸ்ரீநாத் நெகிழ்ச்சி
நடிகரும் இயக்குநருமான ஸ்ரீநாத், ‘முத்திரை’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள படம், ‘லெக் பீஸ்’. யோகி பாபு, மணிகண்டன், கருணாகரன், ரமேஷ் திலக், விடிவி கணேஷ், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன் என பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஹீரோ சினிமாஸ் சார்பில் சி.மணிகண்டன் தயாரித்திருக்கிறார். மார்ச் 7-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி இயக்குநர் ஸ்ரீநாத்திடம் பேசினோம்.
இது என்ன மாதிரியான கதை?
இது டார்க் காமெடி படம். வெவ்வேறு தொழில் செய்யும் நான்கு பேர், ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்னா சந்திக்கிறாங்க. அவங்க மூலம் ஒரு பரபரப்பான விஷயம் வெளியே வருது. அதுக்குப் பிறகு அவங்களுக்கு என்ன நடக்குது, அதுல இருந்து அவங்க எப்படி வெளியே வர்றாங்க? அப்படிங்கறது கதை. இதே வகையில சில படங்கள் வந்திருந்தாலும் இது எல்லோரையும் ரசிக்க வைக்கும். திரைக்கதையில புதுசா முயற்சி பண்ணியிருக்கோம்.
நான்கு ஹீரோ கதைன்னு சொல்லலாமா?
ஹீரோயிசம் அப்படிங்கறதை தாண்டி, கதையா இது ரசிக்கும்படியா இருக்கும். முதன்மை கதாபாத்திரங்கள்ல நடிச்சிருக்கிற மணிகண்டன், சவுரி முடி விற்கிறவர். கருணாகரன், கிளி ஜோசியம் பார்க்கிறவர். நான் பேய் விரட்டுகிறவன். மிமிக்ரி பண்ணுகிறவர் ரமேஷ் திலக். இவங்களைச் சுற்றிதான் கதை நடக்கும். இது என் ஸ்கிரிப்ட் இல்லை. இதன் கதையை பத்மநாபன் என்பவர் எழுதியிருக்கார். திரைக்கதை, வசனத்தை ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணியிருக்கோம்.
எதுக்கு ‘லெக் பீஸ்’ங்கற டைட்டில்?
கதைப்படி கருணாகரனுக்கு, தான் நினைக்கிறது எல்லாம் நடக்கும்ங்கற எண்ணம் உண்டு. அதன்படி சில விஷயங்கள் அவர் வாழ்க்கையில நடக்குது. இப்ப அவர், ‘லெக் பீஸ்’ சாப்பிட்டா, குழப்பம் வரும்னு நினைக்கிறார். அதனால அதை அவர் தொடர்ந்து தவிர்க்கிறார். அதுக்குப் பிறகு என்ன நடக்கும்னு கதை போகும். கதைக்கு அது ‘கனெட்க்’ ஆகறதால அதையே தலைப்பா வச்சோம்.
நீங்க இயக்கிய ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ வெளியாகி 10 வருஷமாச்சு. அடுத்த படத்துக்கு ஏன் இவ்வளவு தாமதம்?
தாமதம்னு இல்லை. அடுத்து சில படங்களை, நான் இயக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஒரு ஹீரோவோட படத்தையும் இயக்க இருந்தேன். கடைசி நேரத்துல அந்த படங்கள் ‘டேக் ஆஃப்’ ஆகலை. சினிமா அப்படித்தானே, நாளைக்கே நடக்கும்னு நினைப்போம். ஆனா, தள்ளிப் போயிட்டே இருக்கும். அதுமட்டுமில்லாம, நமக்கு பிடிச்ச மாதிரி ஒரு விஷயம் பண்ணணும், இல்லைன்னா காத்திருக்கணும்னு முடிவு பண்ணினேன். காத்திருந்தேன். அப்பதான் இந்த வாய்ப்பு கிடைச்சது. இதுக்கிடையில சில படங்கள்ல நடிச்சுட்டும் இருந்தேன். இப்பவும் சில படங்கள்ல நடிக்கிறேன்.
நடிகர் விஜய்-க்கும் உங்களுக்கும் 30 வருட நட்பு இருக்கு. அவர் கட்சியில உங்களுக்கு என்ன பொறுப்பு?
நான் எதையும் எதிர்பார்க்கலை. நான் ஒரு மேடையில பேசும்போது கூட சொன்னேன். ‘அரிது அரிது விஜய்-க்கு நண்பனாக பிறப்பது அரிதுன்னு நினைக்கிறேன்’ன்னு. அது போதும் எனக்கு. ‘அவர் நம்மளை கவனிப்பாரா?, நம்மக்கிட்ட பேசுவாரா?’ன்னு பல பேரு யோசிச்சுட்டு இருக்கும்போது, என் கூட ஜாலியா பேசிக்கிட்டு, நட்பா இருக்கார்னா, அதை விட வேறென்ன வேணும் எனக்கு?
