Published : 09 Jul 2018 11:37 AM
Last Updated : 09 Jul 2018 11:37 AM
தொடர்ந்து 8-வது படத்துக்கும் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளார் இயக்குநர் பாண்டிராஜ்.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சயிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, சக்திவேல் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது. வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 13) இந்தப் படம் ரிலீஸாகிறது.
‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தைப் பார்த்த மத்திய தணிக்கை வாரியக்குழு உறுப்பினர்கள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். ‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘பசங்க 2’, ‘கதகளி’, ‘இது நம்ம ஆளு’ என இதுவரை பாண்டிராஜ் இயக்கிய 7 படங்களைத் தொடர்ந்து, 8-வது படத்துக்கும் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
‘இது எப்படி சாத்தியமானது?’ என இயக்குநர் பாண்டிராஜிடம் கேட்டேன். “என்னுடைய படங்கள் எல்லாமே குழந்தைகள் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸுக்காகத்தான் இருக்கும். படத்தின் கதையை எழுதுவதற்கு முன்பே, ‘யு’ சான்றிதழ் தான் வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். அதனால், கதை எழுதும்போதே, ‘இந்த விஷயம் தேவை, இந்த விஷயம் தேவையில்லை’ என்று முடிவுசெய்து, தேவையில்லாத விஷயங்களை அப்போதே தூக்கி விடுவேன்.
என் படங்களில் இதுவரை புகை பிடிக்கிற காட்சிகளே வைத்தது இல்லை. மது குடிக்கும் காட்சி வைத்தால், அதற்குப் பின்னால் ஒரு பிரச்சினை வரப்போகிறது என்பதைக் குறிப்பால் உணர்த்துவதாக அந்தக் காட்சி இருக்கும். அதேபோல் கிளாமர், செக்ஸி என்பதெல்லாம் என் படத்தில் இருந்ததே கிடையாது.
என்னுடைய பலம் என்பது ஃபேமிலி ஆடியன்ஸ் தான். எனவே, முகம் சுளிக்காமல் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படங்களாகத்தான் எடுக்கிறேன். ‘பாண்டிராஜ் படமா, வீட்ல உள்ள எல்லாரும் ஒண்ணா போகலாம்’ என்று சொல்லும் அளவுக்கு உருவாக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. எட்டாவது படத்துக்கும் ‘யு’ சான்றிதழ் கிடைத்திருப்பதில் சந்தோஷம்” என்கிறார் பாண்டிராஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT