Published : 10 Feb 2025 08:21 PM
Last Updated : 10 Feb 2025 08:21 PM
தமிழ் சினிமாவில் சீரியஸான மன்னர் கதைகளும் குடும்பக் கதைகளும் உருவாகி வந்த ஆரம்ப காலத்திலிருந்தே நகைச்சுவைப் படங்களும் உருவாகி வந்தன. அது போன்ற படங்களுக்குப் பார்வையாளர்கள் எப்போதும் ஆதரவளித்தே வந்திருக்கின்றனர். அப்படி சூப்பர் ஹிட்டான ரொமான்டிக் காமெடி படங்களில் ஒன்று, ‘அடுத்த வீட்டுப் பெண்’.
தனது அடுத்த வீட்டுப் பெண்ணான லீலாவை (அஞ்சலி தேவி) காதலிக்கிறார், மன்னாரு (டி.ஆர். ராமச்சந்திரன்). இசை மற்றும் பாடல் மீது அதிகப் பித்துக் கொண்ட லீலாவை, தானும் பாடல் பாடி கவர நினைக்கிறார். ஆனால் அவருக்கும் பாட்டுக்கும் அதிக தூரம் என்பதால் நண்பரான பாடகரின் (தங்கவேலு) உதவியை நாடுகிறார். பின்னணியில் தங்கவேலு பாட, மன்னாரு வாயசைக்க, அதை உண்மை என்று எண்ணி காதல் கொள்கிறாள் லீலா. ஒரு கட்டத்தில் உண்மைத் தெரிய வர, என்ன நடக்கிறது என்பது கதை.
கொல்கத்தாவைச் சேர்ந்த எழுத்தாளர் அருண் சவுத்ரியின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு 1952-ம் ஆண்டு வங்க மொழியில் உருவான படம், ‘பாஷெர் பாரி’. இந்தப் படம் அங்கு வரவேற்பைப் பெற்றதும் கொல்கத்தாவில் இருந்து படங்கள் தயாரித்து வந்த, ஈஸ்ட் இண்டியா பிலிம் கம்பெனி இந்தப் படத்தைத் தெலுங்கில் ‘பக்க இன்டி அம்மாயி’ என்ற பெயரில் 1953-ம் ஆண்டு தயாரித்தது.
சி.புல்லையா இயக்கிய இதில் அஞ்சலி தேவி நாயகியாக நடித்தார். காமெடி நடிகர் ரெலங்கி வெங்கடராமையா என்ற ரெலங்கி நாயகனாக நடிக்க, பாடகரும் இசை அமைப்பாளருமான ஏ.எம்.ராஜா, இசை அறிந்த அவர் நண்பராக நடித்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து படத்தின் உரிமையைப் பெற்ற நடிகை அஞ்சலி தேவியும் அவர் கணவரும் இசையமைப்பாளருமான ஆதி நாராயண ராவும் தமிழில் தயாரித்தனர்.
தெலுங்கில் நடித்த அஞ்சலி தேவியே தமிழிலும் நாயகியாக நடித்தார். டி.ஆர்.ராமச்சந்திரன் நாயகனாகவும் இசை அறிந்த நண்பராக தங்கவேலும் நடித்தனர். தங்கவேலு இன்னொரு கதாநாயகன் போலதான். படத்தில் அவருக்கும் ஜோடி உண்டு. சாரங்கபாணி, எம்.ஆர்.சந்தானம், ஏ.கருணாநிதி, ‘ஃபிரண்ட்’ ராமசாமி, எஸ்.வெங்கட்ராமன், சி.டி.ராஜகாந்தம், எம்.சரோஜா, டி.பி.முத்துலட்சுமி என பலர் நடித்தனர். வசனம், பாடல்களைத் தஞ்சை ராமையா தாஸ் எழுதினார். சி.நாகேஷ்வர ராவ் ஒளிப்பதிவு செய்தார். ஆதி நாராயண ராவ் இசை அமைக்க, நடன மாஸ்டரும் இயக்குநருமான வேதாந்தம் ராகவய்யா இயக்கினார்.
படத்தின் டைட்டில் கார்டை நகைச்சுவையுடன் கூடிய கார்ட்டூன் டைப்பில் மும்பையை சேர்ந்த தயாபாய் படேல் என்பவர் உருவாக்கி இருந்தார். இந்தப் படத்தின் நகைச்சுவையும் பாடல்களும் ரசிகர்களை மொத்தமாகக் கட்டிப்போட்டன.
‘கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே’, ‘கண்களும் கவிபாடுதே’, ‘கன்னித்தமிழ் மணம் வீசுதடி’, ‘மலர்க்கொடி நானே மகிழ்ந்திடுவேனே’, ‘வாடாத புஷ்பமே வற்றாத செல்வமே’, ‘கையும் ஓடல காலும் ஒடல’, ‘மாலையில் மலர் சோலையில்’ உள்பட அனைத்துப் பாடல்களும் ஒன்ஸ்மோர் ரகம். இப்போது கேட்டாலும் பாடல்கள் சிலிர்க்க வைக்கின்றன.
இந்தப் படத்தில் தங்கவேலு கோஷ்டியின், ‘காரியம் கை கூடும் சங்கம்’ அந்த கால இளைஞர்களிடம் அதிகம் பேசப்பட்ட ஒன்று. இதுதான் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் முன்னோடி’யாக இருந்திருக்கும்!
தமிழிலும் பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்தப் படத்தை 1968-ல் ‘படோசன்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தனர். சுனில் தத், சாய்ரா பானு, கிஷோர் குமார், மெஹ்மூத் நடித்திருந்தனர், காமெடி நடிகரான மெஹ்மூத், நாயகிக்கு இசை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராகத் தமிழில் பேசி நடித்திருப்பார். இந்தப் படம் இந்தியிலும் வரவேற்பைப் பெற்றது.
இதே கதை, 1981-ம் ஆண்டு சந்திரமோகன், ஜெயசுதா மற்றும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நடிப்பில் தெலுங்கில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிப் பெற்றது. ராகவேந்திர ராஜ்குமார், அனந்த் நாக் ஆகியோர் நடிப்பில் கன்னடத்தில் ‘பக்கத் மனே ஹுடுகி’ என்ற பெயரில் 2004-ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், வெற்றி பெறவில்லை.
1960-ம் ஆண்டு பிப்.11-ம் தேதி வெளியானது ‘அடுத்த வீட்டுப் பெண்’. 65 வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்றைக்கும் ரசித்து சிரிக்க வைக்கிறது இந்தப் படம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment