Published : 15 Jan 2025 04:29 PM
Last Updated : 15 Jan 2025 04:29 PM
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தமிழகத்தில் பொங்கல் ரிலீஸ் படங்களில் ‘வின்னர்’ ஆக முன்னிலை வகிக்கிறது சுந்தர்.சி, விஷால், சந்தானம் காம்போவில் வெளியான ‘மதகஜராஜா’ திரைப்படம்.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் ‘மதகஜராஜா’. 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2013-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று விளம்பரப்படுத்தப்பட்ட படம்தான் ‘மதகஜராஜா’. இப்படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் பல பிரச்சினைகளில் சிக்கியதால் ரிலீஸில் முடக்கம் நீடித்தது. பல தடைகளைக் கடந்து, 12 ஆண்டுகள் கழித்து இப்படம் ஜனவரி 10-ல் வெளியானது.
ஆனால், இப்படத்துக்கு யாருமே எதிர்பாராத விதமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. விமர்சன ரீதியிலும், மக்கள் கொண்டாடத்தக்க பொழுதுபோக்கு சினிமாவாக பாராட்டப்பட்டது. தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் பொங்கல் பண்டிகை தினங்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளானது. இதனால், இப்படம் தான் 2025ம் ஆண்டு முதல் வெற்றியாக இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் கணித்துள்ளனர்.
‘கேம் சேஞ்சர்’, ‘வணங்கான்’ மற்றும் ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய படங்களை விட ‘மதகஜராஜா’ படத்துக்குதான் விநியோகஸ்தர்கள் முன்னுரிமைக் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள். மேலும் ‘காதலிக்க நேரமில்லை’ மற்றும் ‘நேசிப்பாயா’ ஆகிய படங்களுக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மிகக் குறிப்பாக, பி மற்றும் சி சென்டர்களில் ‘மதகஜராஜா’ படத்துக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
வசூல் நிலவரம்: ப்ரோமோஷன்களுக்கான செலவினம் உள்பட ரூ.15 கோடி அளவிலான பட்ஜெட்டில் உருவான ‘மதகஜராஜா’ திரைப்படம், இந்திய அளவில் முதல் நாளிலும், இரண்டாவது நாளில் தலா ரூ.3 கோடி வசூலை ஈட்டியது. அதுவே, மூன்றாவது நாளில் இரு மடங்காகி, மூன்றாவது நாள் மட்டும் ரூ.6.2 கோடி ஈட்டியது. ஒட்டுமொத்தமாக முதல் மூன்று நாட்களில் மட்டும் இந்திய அளவில் ரூ.12.2 கோடியை வசூல் செய்துள்ளது ‘மதகஜராஜா’.
பொங்கல் விடுமுறை தினங்களுடன், வார விடுமுறைகளிலும் முன்பதிவுகள் நிறைவைதால், அடுத்தடுத்த நாட்களில் ‘மதகஜராஜா’ வசூலை அள்ளி, இந்தப் பொங்கலின் ‘வின்னர்’ ஆவது உறுதியாகிறது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘வணங்கான்’ படத்தைப் பொறுத்தவரையில், படம் வெளியான முதல் நான்கு நாட்களில் ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் ரூ.3.6 கோடி ஈட்டியுள்ளது. ‘கேம் சேஞ்சர்’, ‘மெட்ராஸ்காரன்’ உள்ளிட்ட இதர படங்களும் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வசூலை ஈட்டவில்லை என கூறப்படுவதும் இங்கே கவனிக்கத்தக்கது. வாசிக்க > மதகஜராஜா விமர்சனம்: சுந்தர்.சி + விஷால் கூட்டணியின் காமெடி சரவெடி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment