Published : 09 Jan 2025 09:14 AM
Last Updated : 09 Jan 2025 09:14 AM
வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியில் பெரும் பின்னடவைச் சந்தித்த சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம், ஆஸ்கர் விருது ரேஸில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரேஸில் ‘கங்குவா’ நுழைந்தது குறித்து பார்ப்போம்.
ஆஸ்கர் விருது விழா மார்ச் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விருதுக்கான பரிந்துரைப் பட்டியலின் தெரிவுக்காக போட்டியிட தகுதியானதாக 323 திரைப்படங்களின் பட்டியலை ஆஸ்கர் அகாடமி அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த படத்துக்காகப் போட்டியிடும் 207 படங்களில் ‘கங்குவா’ உள்ளிட்ட 7 இந்திய படங்களும் இடம்பிடித்துள்ளன.
‘கங்குவா’ (தமிழ்), ‘ஆடுஜீவிதம்’ (மலையாளம்), ‘சந்தோஷ்’ (இந்தி), ‘ஸ்வதந்ரிய வீர் சாவர்கர்’ (இந்தி), ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ (மலையாளம் - இந்தி), ‘கேர்ஸ் வில் பி கேர்ள்ஸ்’ (இந்தி - ஆங்கிலம்), புதுல் (வங்காளம்) ஆகிய இந்திய படங்கள் இடம்பிடித்துள்ளன.
நடப்பு ஆஸ்கர் விருதுக்காக, சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட விருது பிரிவுக்காக, இந்தியாவில் இருந்து அதிகாரபூர்வமாக அனுப்பப்பட்ட ஒரே படம் ‘லாபத்தா லேடீஸ்’ மட்டும்தான். இந்தப் பிரிவில், இதுவரை அதிகாரபூர்வமாக அனுப்பப்பட்ட தமிழ்ப் படங்கள் என்றால் கூழாஙகல் (2021), விசாரணை (2015), அஞ்சலி (1990), நாயகன் (1987) முதலான படங்களைப் பட்டியலிடலாம்.
இந்த நடைமுறைகளின்படி அல்லாமல், சில பல ஆயிரம் டாலர்களை கட்டணமான செலுத்தி, விண்ணப்பிப்பதன் மூலம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் திரைப்படங்கள் பங்கேற்க முடியும். அந்த வழிமுறையில் ஆஸ்கர் ரேஸுக்கு விண்ணப்பிக்கப்பட்ட படம்தான் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கங்குவா’.
ஆஸ்கர் விருது தெரிவுக்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. இப்போது போட்டிக்குத் தகுதி என்ற நீண்ட பட்டியலில் உள்ள படங்களை இறுதிச் சுற்றுக்காக சுருக்கக் கூடிய ‘ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்’ தெரிவுக்கான வாக்கெடுப்பு உள்ளிட்ட நடைமுறைகள் ஜனவரி 8-ல் தொடங்கி ஜனவரி 12 வரை நடைபெறும். இறுதியாக, ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல் ஜனவரி 17-ல் வெளியிடப்படும்.
சூர்யா நடித்து கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான ‘கங்குவா’, கடுமையான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. ரூ.350 கோடியில் உருவான இந்தப் படம், ரூ.100 கோடி மட்டுமே வசூலித்ததாகக் கூறப்படுகிறது. பாக்ஸ் ஆபிஸில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டிருப்பதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT