Published : 08 Jan 2025 07:42 PM
Last Updated : 08 Jan 2025 07:42 PM
சென்னை: ‘நானும் ரவுடிதான்’ படக் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கு விசாரணையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஒத்திவைக்க் கோரியதை அடுத்து வழக்கை ஜன.22-ம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண நிகழ்வை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஆவண படமாக தயாரித்தது. நடிகர் தனுஷின் உண்டர்பார் நிறுவனம் தயாரிப்பில், நயன்தாரா நடித்து, விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகள் அதில் பயன்படுத்தப்பட்டிருந்தன. தனது அனுமதியின்றி அந்தக் காட்சிகளை பயன்படுத்தியதாக கூறி, ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நடிகர் தனுஷின் உண்டர்பார் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தரப்பில் விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் ஜன.22-ம் தேதிக்கு தள்ளி வைத்து, இனி அவகாசம் கேட்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT