Published : 08 Jan 2025 02:23 PM
Last Updated : 08 Jan 2025 02:23 PM
இன்றைய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பின்னணிப் பாடகராக இருப்பவர் அந்தோணிதாசன். தனியிசைக் கலைஞராகவும் நடிகராகவும் தனது இசைக் குழுவை வழிநடத்துபவராகவும் வலம் வரும் ஆண்டனி தாசனை உலகத் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அழைக்கிறார்கள். அவரது பாடல்கள் இல்லாமல் பொங்கல் பண்டிகை இல்லை என்கிற நிலையை தனது கிராமியக் கலை நிகழ்ச்சிகள் வழியாக உருவாக்கியிருக்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தாலும் தஞ்சாவூர் மாநகரத்தை ஒட்டிய ரெட்டிப்பாளையம்தான் ஆண்டனிதாசன் வளர்ந்த பகுதி. அவர் தற்போது தன்னை வளர்த்த மண்ணுக்காக ‘தங்கமான தஞ்சாவூரு’ என்கிற தனியிசைப் பாடலை இசையமைத்து, அதன் காணொளி வடிவத்தையும் உருவாக்கியிருக்கிறார்.
தனது ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில், அந்தோணிதாசன் இசையமைத்து, பாடி இருக்கும் இப்பாடலை, தரணிக்கே சோறூட்டிய தஞ்சை மண்ணின் பெருமை பேசும் பாடலாக உருவாக்கி இருக்கிறார். ராக் ஸ்டார் அனிருத் இசையில், அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும், ‘விடாமுயற்சி’ படத்துக்காக அந்தோணிதாசன் பாடிய ‘சவடீகா’ (தாய்லாந்து மொழியில் வணக்கம் என்பது பொருள்) என்கிற பாடல் தான் 2025ம் ஆண்டின் முதல் ஹிட் மற்றும் வைப் சாங்! அந்த சந்தோஷத்தில் இருக்கும் அந்தோணிதாசனிடம், ‘தங்கமான தஞ்சாவூரு’ பாடல் பற்றிக் கேட்டபோது மகிழ்ச்சியுடன் பேசினார்:
“இந்தப் புத்தாண்டின் தொடக்கமே எனக்கு ரெட்டைச் சந்தோசத்தில் தொடங்கி இருக்கிறது. சவடீகா பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது முதல் சந்தோசம் என்றால், தங்கமான தஞ்சாவூரு ரெட்டைச் சந்தோஷம். நான் இதுவரை எத்தனையோ ஊர்களுக்கு ஆந்தம் பாடி இருக்கிறேன். ஆனால் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் என் தஞ்சை மண்ணுக்கென இதுவரை ஒரு ஆந்தம் இல்லையே என்ற ஏக்கம் ரொம்ப நாளாக என் மனதில் இருந்தது. அதனால் அந்தப் பொறுப்பை நானே எடுத்துக்கொண்டு தஞ்சைக்கென ஒரு ஆந்தம் செய்யலாம் என முடிவெடுத்தேன். என் ஏக்கத்தைத் தீர்த்துக்கொள்ளவே ‘தங்கமான தஞ்சாவூரு’ பாடலை உருவாக்கினேன். பாடல் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. பாடல் வரிகளை அன்புத் தம்பி பாடலாசிரியர், லாவரதன் எழுதி இருக்கிறார். அவரும் என்னைப் போலவே தஞ்சை மண்ணைச் சேர்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.
6 வருசத்துக்கு முன்னால சோனி மியூசிக் கம்பெனி கூட சேர்ந்து, ‘ஆராரோ’ன்னு ஒரு பாட்டு பண்ணேன். பாடலாசிரியர் மோகன்ராஜன் ரொம்ப அழகா எழுதியிருந்தார். அப்பா மகன் உறவு சம்பந்தப்பட்ட அழகான பாட்டு அது. அதுல எங்க ஊர் மக்கள் உறவினர்கள் நிறைய பேரை நடிக்க வச்சேன். அவங்கள்ல நிறைய பேரு இப்போ உயிரோடவே இல்ல. ஆனா அந்தப் படைப்புல அவங்க இருக்காங்க. அதே மாதிரி அந்தப் பகுதி நிலம் வயக்காடு எல்லாம் அப்போ இருந்த மாதிரி இப்ப இல்ல. இப்போ எல்லாம் வேலி போட்டு, பிளாட் போட்டு வீடு கட்ட ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் பத்து இருபது வருசம் கழிச்சி பாக்கிறப்போ, அந்த வயல்வெளியே இருக்காது. இந்த இடம் கொஞ்ச வருசங்களுக்கு முன்னால் எப்டி இருந்துச்சுன்னு அடுத்தடுத்து தலைமுறைகளுக்கு தெரிய வைக்கிற ஒரு பதிவா தான் இதை நான் நினைக்கிறேன். இப்போ இந்த தஞ்சாவூர் பாட்டுல பதிவு பண்ணி இருக்கிற இடங்கள் இன்னும் கொஞ்ச நாள்ல மாறிப்போகும். இல்லாமக் கூட போகலாம். என்னைப் பொறுத்தவரை என்னோட எல்லாப் படைப்புகளையும் வரலாற்றுப் பதிவா தான் நான் நினைக்கிறேன். இந்தப் பாடல் தஞ்சாவூரைப் பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவா இருக்கும்னு நான் நம்புறேன்.
‘தங்கமான தஞ்சாவூரு’ பாடல் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் (Folk Marley Records) யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது. இன்றைக்கு தஞ்சாவூரின் மற்றொரு அற்புதமான கலைஞர் நடிகர் விமல் பாடலை வெளியிடுகிறார். பாடலைக் கேட்ட, பார்த்த உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் தொடங்கி அனைவரும் பாராட்டுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. நான் வாழும் தஞ்சை மண்ணுக்கு, செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, இந்த அந்தோணிதாசன் செய்திருக்கும் பாடல் தான் இது. இந்தப் பாடலுக்குக் கிடைக்கும் பாராட்டுகளைப் பார்த்து தஞ்சை மண்ணுக்கு நான் பட்ட கடனை தீர்த்துவிட்டது போல மகிழ்கிறேன்.
இந்தப் பாடல் உருவாக்கத்தில் எனக்கு உதவி செய்த அத்தனை பேருக்கும், இந்தத் தருணத்தில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தஞ்சை மண்ணின் மக்கள் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் தங்கமான தஞ்சாவூரு பாடலைப் பார்த்து உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதைப்போலத் தொடர்ந்து எனக்கு ஆதரவளித்து வரும் அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைக் கூறிக்கொண்டு தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தரவேண்டும் என்றும் அன்போடு வேண்டுகிறேன்” என்று நெகிழ்ந்து கூறினார்.
பாடகராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராக, நடிகராக வேகமெடுத்துவரும் அந்தோணிதாசன், இந்த வருடத்தில் வரப்போகும் படங்களுக்காக காத்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையில், மாதவன் லக்ஷ்மன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நாதமுனி’, பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவன மக்கள் தொடர்பாளர் குணசீலன் ராமையா இயக்கி இருக்கும் ‘பிடிமண்’உள்ளிட்ட படங்களின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT