Published : 02 Jan 2025 10:05 AM
Last Updated : 02 Jan 2025 10:05 AM

2025-ல் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள்!

“நான் இன்னும் எனக்கான படத்தை உருவாக்கவில்லை. எனக்கு முழுமையாகத் திருப்தி தரும் ஒரு படத்தை இதுவரை இயக்கியதாகத் தெரியவில்லை” என்கிறார், பிரபல ஹாலிவுட் இயக்குநரான ரோமன் பொலான்ஸ்கி (Roman Polanski). மேக்பத், சைனா டவுன், த டெனன்ட் (பிரெஞ்ச்), த பியானிஸ்ட் என 23 படங்களை இயக்கியவர் இவர்.

‘த பியானிஸ்ட்’ படத்துக்காக, ஆஸ்கர் விருதைப் பெற்றவர். எந்த படைப்புமே முழு திருப்தியைத் தந்துவிடாது என்பதைத்தான் அவரும் சொல்கிறார். கடந்த 2024-ம் ஆண்டில் சில முன்னணி இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்களின் படங்கள் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி ஏமாற்றம் தந்ததை இதனுடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

அதனால் அந்த ஏமாற்றத்தை 2025-ம் ஆண்டு தவிடு பொடியாக்கும் என்று நம்புவோம். இந்த ஆண்டு முன்னணி ஹீரோக்களின் பெரும் பட்ஜெட் படங்கள் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

விடாமுயற்சி, குட் பேட் அக்லி: கடந்த வருடம் அஜித்குமார் நடித்து ஒரு படம் கூட வெளியாகாத நிலையில் இந்த வருடம் அதற்கும் சேர்த்து 2 படங்கள் வெளியாகின்றன. ‘விடா முயற்சி’யை மகிழ் திருமேனியும் ‘குட் பேட் அக்லி’யை ஆதிக் ரவிச்சந்திரனும் இயக்கியுள்ளனர். பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த ‘விடாமுயற்சி’ தள்ளிப் போயிருக்கிறது.

கேம் சேஞ்சர்: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ள படம். கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், சுனில், அஞ்சலி என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் 5 பாடல்களுக்கு மட்டும் ரூ.75 கோடி செலவழித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ‘விஷுவல் ட்ரீட்’டுக்கு நூறு சதவிகிதம் உத்தரவாதம் என்கிறது படக்குழு. வரும் 10-ம் தேதி வெளியாகிறது.

இந்தியன் 3: ஷங்கரின் ‘இந்தியன் 2’ ஏமாற்றத்தைத் தந்த பிறகு வருகிறது ‘இந்தியன் 3’. இதில் கமல்ஹாசனுக்கு இருக்கும் பிளாஷ்க் பேக் காட்சி ‘கூஸ்பம்ப்’ உணர்வைத் தரும் என்கிறார்கள், இன்டஸ்ட்ரியில்.

வணங்கான்: பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துத் தொடங்கப்பட்ட படம். அவர் திடீரென விலகிக் கொள்ள, அருண் விஜய் நடித்து, வரும் 10-ம் தேதி வெளியாகிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகுவரும் பாலா படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

கூலி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம். சத்யராஜ், ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் என ‘ஸ்டார் காஸ்ட்’டே மிரட்டுகிறது. வெளியான டீஸர் ஏகப்பட்ட எதிர்பார்ப்பைக் கிளப்பி இருப்பதால், லோகேஷின் திரைக்கதை ட்ரீட்மென்ட்டுக்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

தக் லைஃப்: ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னமும் கமல்ஹாசனும் இணையும் படம். கமல் மகனாக சிம்பு நடித்திருக்கிறார் என்கிறார்கள். த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளனர். ஜூன் 5-ல் வெளியாகும் இந்தப் படத்துக்கு இசை அமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

விஜய் 69: ‘தி கோட்’ படத்துக்குப் பிறகு அரசியலுக்கு வந்துவிட்ட விஜய்யின் கடைசிப் படம் என்கிறார்கள் இதை. ஹெச்.வினோத் இயக்குகிறார். படத்திலும் அரசியல் கருத்துகள் அமோகமாக இருக்கிறது என்கிறது கோலிவுட். நாயகி பூஜா ஹெக்டே, வில்லனாக இந்தி நடிகர் பாபி தியோல் என பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது, பூஜை வீடியோ.

ரெட்ரோ, சூர்யா 45: ‘கங்குவா’ ஏமாற்றத்தைத் தந்தாலும் இந்த வருடம் வெளியாக இருக்கும் கார்த்திக் சுப்புராஜின் ‘ரெட்ரோ’ அதிக நம்பிக்கையை கொடுத்திருக்கிறது, சூர்யாவுக்கு. படத்தின் டீஸருக்கு எக்கச்சக்க வரவேற்பு என்பதால் ‘ரெட்ரோ’வுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. அடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘சூர்யா 45’ம் இந்த வருட எதிர்பார்ப்பு லிஸ்ட்டில் இருக்கிறது.

வீர தீர சூரன், சீயான் 63: அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கும் படம். ஆக்‌ஷனுடன் வெளியான முன்னோட்ட வீடியோ எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மடோன் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விக்ரம். ‘சீயான் 63’ என தற்காலிகத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படம், இந்த வருட இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.

எஸ்கே 23: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம். ருக்மணி வசந்த், வித்யூத் ஜாம்வல், பிஜுமேனன் என பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லட்சுமி மூவிஸ் தயாரிக்கிறது. ‘அமரன்’ மெகா ஹிட்டுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.

குபேரா, இட்லிகடை: தனுஷின் பான் இந்தியா படம், ‘குபேரா’. சேகர் கம்முலா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா மற்றும் பலர் நடித்துள்ளனர். தனுஷ் இயக்கி நடிக்கும் அடுத்த படம் ‘இட்லி கடை’. இதில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே நாயகிகளாகவும் அருண் விஜய் வில்லனாகவும் நடிக்கின்றனர். ஏப்.10-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறது படக்குழு.

சிம்பு: ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்கும் சிம்பு, அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் பீரியட் கதையை கொண்டது என்கிறார்கள்.

வா வாத்தியாரே, சர்தார் 2: நலன் குமரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியாரே’, மித்ரன் இயக்கத்தில் நடித்து வரும் ‘சர்தார் 2’ படங்கள் இந்த வருட எதிர்பார்ப்பு லிஸ்ட்டில் இருக்கிறது.

டிரெய்ன், ஏஸ்: விஜய் சேதுபதி நடித்து கடந்த வருடம் வெளியான ‘மகாராஜா’ சூப்பர் ஹிட்டானதால் அவர் நடிப்பில் இந்த வருடம் வெளியாகும் ‘டிரெய்ன்’, ‘ஏஸ்’ படங்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

காதலிக்க நேரமில்லை, ஜீனி: ஜெயம் ரவி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ வித்தியாசமான காதல் கதையை கொண்ட படம் என்கிறார்கள். அவர் நடிப்பில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் படம், ‘ஜீனி’. இந்த வருடம் இந்த இரண்டு படங்களும் எதிர்பார்ப்பு பட்டியலில் இருக்கிறது.

இதெல்லாம் டாப் ஹீரோ படங்களுக்கான எதிர்பார்ப்பு என்றாலும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி ‘லப்பர் பந்து’ போல அமைதியாக வந்து கொண்டாடப்படும் படங்கள் ஒவ்வொரு வருடமும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த வருடமும் அப்படி சில படங்கள் வரலாம் என்கிறார்கள், கோலிவுட்காரர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x