Published : 01 Jan 2025 12:21 AM
Last Updated : 01 Jan 2025 12:21 AM
இந்தி சினிமா மட்டுமே இந்திய சினிமா என்ற நிலை கரோனாவுக்கு பிறகு மொத்தமாக மாறிவிட்டது. அதற்கு முன் தென்னிந்தியாவில் இருந்து ‘பாகுபலி’ போன்ற படங்கள் தங்கள் இருப்பைக் காட்டிவிட்டுப் போனாலும், கடந்த சில வருடங்களாகத் தென்னிந்திய சினிமாவின் தாக்கம் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. அதன்படி 2024-ம் ஆண்டு பான் இந்தியா முறையில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த தென்னிந்திய திரைப்படங்கள் இவை.
பிரேமலு, மகாராஜா: மலையாளத்தில் உருவான ‘பிரேமலு’, இந்த வருடத்தின் முதல் சூப்பர் ஹிட்டை தென்னிந்திய சினிமாவுக்கு வழங்கிய திரைப்படம். நஸ்லன், மமிதா பைஜு நடித்த இந்தப் படத்தை கிரிஷ் இயக்கி இருந்தார். இன்றைய மென்பொருள் யுகத்துக் காதலை நகைச்சுவையாகவும் நையாண்டியாகவும் சொன்ன இந்தப் படம், மற்ற மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. தமிழில் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’, ஒரு படத்துக்கு திரைக்கதைதான் ராஜா என்பதைக் கம்பீரமாக நிரூபித்த படம். தெரிந்த கதைதான் என்றாலும் ‘நான் லீனியர்’ ட்ரீட்மென்ட்டில் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டது. தமிழில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய ‘மகாராஜா’ மற்ற மொழி பார்வையாளர்களையும் ஈர்த்தது.
மஞ்சும்மள் பாய்ஸ், தி கோட்: சர்வைவல் த்ரில்லர் படமாக உருவான மலையாள ‘மஞ்சும்மள் பாய்ஸ்’, சந்தேகமே இல்லாமல் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்று. குணா குகையும் அதில் இடம்பெற்ற பாடலும் இந்தப் படத்துக்குத் தமிழிலும் வசூலைக் கொட்டிக் கொடுத்தது. தெலுங்கிலும் அப்படியே. ரூ.20 கோடியில் உருவான இந்தப் படத்தின் மொத்த வசூல், ரூ.250 கோடியை தாண்டியதாகச் சொல்கிறார்கள்.
பொருளாதாரக் குற்றப்பின்னணியில் தெலுங்கில் உருவாகி வெளியான ‘லக்கி பாஸ்கர்’, தென்னிந்திய சினிமாவுக்கு அடுத்த ஜாக்பாட்டை தந்த திரைப்படம். 1992-ம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவான இதில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தனர். வெங்கி அட்லுரி இயக்கியிருந்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கோட்’, ரூ.465 கோடியை வசூலித்ததாகச் சொல்கிறார்கள். இதில் மூன்று தோற்றத்தில் வரும் விஜய், நெகட்டிவ் கேரக்டரிலும் நடித்திருந்தார்.
ஆடுஜீவிதம், அமரன்: பிளஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்த சர்வைவல் த்ரில்லர் படமான ‘ஆடுஜீவிதம்’ பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்தது. ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் நடிப்பில் மெகா பட்ஜெட்டில் உருவான ‘ஃபியூச்சரிஸ்டிக்’ படமான ‘கல்கி 2898 ஏடி’, டெக்னிக்கலாக மிரட்டியது. இது, இந்தியா முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது என்கிறார்கள்.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த ‘அமரன்’, தமிழில் இந்த வருடம் அதிகம் பேசப்பட்ட படம். வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்ட இந்தக் கதையை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இந்தப் படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
புஷ்பா 2, ‘தேவாரா 1: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2’ இந்த வருடம் இந்திய சினிமாவின் அதிகப்பட்ச வசூலை அள்ளி இருக் கிறது. உலகம் முழுவதும் 1700 கோடி ரூபாயைத் தாண்டி செல்லும் அதன் வசூல் வேகம் இன்னும் நிற்காமல் ஓடிக் கொண்டிருப்பது ஆச்சரியம்!
பான் இந்தியா முறையில் வெளியான ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் நடித்த ‘தேவாரா 1’ ரூ. 400 கோடியும் தெலுங்கில் உருவான சூப்பர் ஹீரோ படமான ‘ஹனு-மான்’ ரூ.300 கோடிக்கு மேலும் வசூல் ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. ரஜினியின் வேட்டையன் ரூ.240 கோடியும், கமலின் இந்தியன் 2, தனுஷின் ராயன், சுந்தர். சி-யின் அரண்மனை 4, மகேஷ்பாபுவின் குண்டூர்காரம், ஃபஹத் ஃபாசில் நடித்த ஆவேஷம் ஆகிய படங்கள் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT