Last Updated : 31 Dec, 2024 10:12 AM

2  

Published : 31 Dec 2024 10:12 AM
Last Updated : 31 Dec 2024 10:12 AM

2024-ல் 241 படங்கள் ரிலீஸ், 7% மட்டுமே வெற்றி: தமிழ் சினிமாவில் 93% திரைப்படங்கள் நஷ்டம்!

ஒவ்வொரு வருடமும் தமிழில் உருவாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம். இந்த வருடத்தின் கடைசி வாரமான கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படங்களின் எண்ணிக்கையையும் சேர்த்து 2024-ம் ஆண்டு, 241 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் மெகா பட்ஜெட், மீடியம் மற்றும் சிறு பட்ஜெட் படங்களும் அடங்கும். கடந்த 2023-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இது குறைவு. 2023-ல் 256 திரைப்படங்கள் வெளியாகி இருந்தன.

2024-ல் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் தி கோட், இந்தியன் 2, வேட்டையன், கங்குவா ஆகிய 4 படங்கள் தயாரிக்கப்பட்டன. இதில், ‘தி கோட்’ மட்டுமே பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

ரூ.50 கோடியில் இருந்து ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட, கேப்டன் மில்லர், அயலான், லால் சலாம், மெர்ரி கிறிஸ்துமஸ், ரத்னம், ராயன், தங்கலான், அமரன், விடுதலை 2 ஆகிய 9 படங்களில், ‘ராயன்’ மற்றும் ‘அமரன்’ மட்டுமே பெரும் வெற்றியை பெற்றன.

ரூ.25 கோடியில் இருந்து ரூ.50 கோடி பட்ஜெட்டில், சைரன், அரண்மனை 4, மகாராஜா, மெய்யழகன், பிரதர் ஆகிய 5 திரைப்படங்கள் வெளியாயின. இதில் மகாராஜா, அரண்மனை 4 படங்கள் மட்டுமே மெகா வெற்றியை பெற்றன. மெய்யழகன் சுமாரான வெற்றியை பெற்றுள்ளது.

ரூ.15 கோடியில் இருந்து ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவான படங்களின் எண்ணிக்கை 5. மிஷன் சாப்டர் 1, கருடன், சிங்கப்பூர் சலூன், ஜோஷ்வா, மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்கள் வெளியான நிலையில் கருடன் மட்டுமே சூப்பர் ஹிட்டானது.

ரூ.8 கோடியில் இருந்து ரூ.15 கோடி பட்ஜெட்டில், வடக்குப்பட்டி ராமசாமி, ரோமியோ, ஸ்டார், இங்க நான்தான் கிங்கு, பிடி சார், அந்தகன், டிமான்டி காலனி 2, ஹிட்லர், வாழை, கடைசி உலகப் போர், வெப்பன், ஜாலியோ ஜிம்கானா, பிளடி பெக்கர், நிறங்கள் மூன்று, சொர்க்கவாசல், மிஸ் யூ ஆகிய 16 படங்கள் வெளியாயின. இதில் டிமான்டி காலனி 2, வாழை, ரோமியோ, ஸ்டார், பிடி சார், அந்தகன் ஆகிய படங்கள் லாபம் கொடுத்தன.

ரூ.5 கோடியில் இருந்து ரூ.8 கோடி பட்ஜெட்டில் 16 திரைப்படங்கள் வெளியாயின. ரூ.3 கோடியில் இருந்து ரூ.5 கோடி வரையிலான பட்ஜெட்டில் 45 படங்கள், ரூ.3 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் 141 திரைப் படங்கள் வெளியாகியுள்ளன. இதில் வெற்றி பெற்ற திரைப்படங்கள், பிளாக், லப்பர் பந்து, லவ்வர், பேச்சி மட்டுமே. அதாவது 2024-ல் வெளியான 214 படங்களில் 17 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

நந்தன், திரு மாணிக்கம் ஓரளவு ஓகே என்கிறார்கள். திரு மாணிக்கம் படத்துக்குத் திரையரங்க வசூல் இல்லை என்றாலும் சாட்டிலைட் உள்ளிட்ட மற்ற பிசினஸ் லாபம் கொடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள். ரூ.3 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான 141 திரைப்படங்களில் ஒரு படம் கூட வெற்றி பெறவில்லை என்பது வருத்தம் தரும் செய்தி. இதில், குரங்கு பெடல், ஜமா, நண்பன் ஒருவன் வந்தபிறகு, ராக்கெட் டிரைவர், ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் ஆகிய திரைப்படங்கள் கவனிக்கப்பட்டாலும் பெரிய வெற்றியை பெறவில்லை. சதவிகித அடிப்படையில் 93% படங்கள் நஷ்டத்தைச் சந்தித்திருக்கின்றன.

மக்கள் ஆதரவு வேண்டும்: ஜி.தனஞ்செயன் - சிறு பட்ஜெட் படங்கள்தான் அதிகமாக உருவாகின்றன என்றாலும் பல படங்கள் நன்றாக இருந்தும் வெற்றிபெறாதது ஏன்? என்று தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஜி.தனஞ்செயனிடம் கேட்டபோது, “மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பது குறைந்துவிட்டது. நிறைய நல்ல படங்கள் வந்தாலும் அவர்கள் தியேட்டர்களுக்கு வர மறுக்கிறார்கள். குறிப்பாக சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களைப் பார்ப்பதற்குத் தயங்குகிறார்கள். படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்று தெரிந்தால் மட்டுமே வருகிறார்கள். திரையரங்கில் ஒரு படம் வெற்றி பெறவில்லை என்றால் சாட்டிலைட், ஓடிடி தளங்களிலும் விற்க முடியாத நிலை இருக்கிறது. சிறந்த கதைகளைக் கொண்ட படங்களுக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். அனைத்து தரப்பு படங்களையும் அவர்கள் பார்த்தால் மட்டுமே சினிமா தொழில் வளரும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x