Published : 29 Dec 2024 04:32 AM
Last Updated : 29 Dec 2024 04:32 AM
கேரளத்தை ஒட்டியிருக்கும் மலைக் கிராமத்தில் அம்மா, தங்கையுடன் வசிக்கும் தருமன் (குணாநிதி), அடமானத்தில் இருக்கும் நிலத்தை மீட்க ரப்பர் தோட்டத்துக்கு நண்பர்களுடன் வேலைக்குச் செல்கிறார். கூடவே தனது செல்ல நாயான காளியையும் அழைத்துச் செல்கிறார். ரப்பர் தோட்ட முதலாளியின் (செம்பன் வினோத்) மகளைத் தெருநாய் ஒன்று கடித்துவிட, ஆத்திரத்தில் அவர், அந்த ஊரில் திரியும் நாய்களை எல்லாம் கொன்று குவிக்க, தன் ஆட்களை ஏவுகிறார். நாய்களை வேட்டையாடும் கூட்டத்திடம் காளி சிக்கிக்கொள்ள, அதை மீட்கும் போராட்டத்தில் தருமனும் அவன் நண்பர்களும் என்னவானார்கள் என்பது கதை.
சொந்தக் காரணத்துக்காக நாய்களைக் கொல்பவனுக்கும், நாயை நேசிப்பவனுக்குமான போராட்டமாக விரிகிறது திரைக்கதை. முதல் பாதியில் காடு - மலையை வாழ்வாதாரமாகக் கொண்ட பழங்குடி மக்களின் வாழ்க்கை, அதில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான மோதல் ஆகியவற்றை இயல்பாகச் சித்தரிக்கிறது படம். வாழைத் தோட்டத்தை நாடி வரும் யானையை ஆபத்தான முறையில் விரட்ட முயலும் அணுகுமுறையின் விளைவை அழுத்தமான காட்சியாகப் பதிவு செய்கிறது படம். அதேபோல், நாய்கள் மீதான மனித அணுகுமுறையில் தேவைப்படும் மாற்றங்களைத் திரைக்கதையின் ‘மைய முரண்’ வழியாக அழுத்தமாகவும் கோருகிறது.
நாயகனான தருமனிடம் ‘காளி’ வந்து சேரும் கதையை ஈர்ப்பாகவும் அதன் மீதான தருமனின் அன்பை இயல்பாகவும் சித்தரித்திருக்கிறார் இயக்குநர். காணாமல் போன காளியைத் தருமன் தேடியலைந்து கண்டுபிடித்து, அதை மீட்கப் போராடும் காட்சியில் ஒளிந்திருக்கும் எதிர்பாராத திருப்பம், இரண்டாம் பாதியின் ஓட்டத்தை நான்கு கால் பாய்ச்சலுக்கு நகர்த்துகிறது.சிறந்த மலையாள நடிகர்களில் ஒருவரான செம்பன் வினோத்துக்கான திரை வெளி மிகக் குறைவு. அதற்கு மாறாக மற்றொரு மலையாள நடிகரான ரேகா, தருமனின் அம்மா கதாபாத்திரத்தில் அட்டகாசம் செய்திருக்கிறார். கதாநாயகி இல்லாத இந்தப் படத்தில் அந்தக் குறையே தெரியாமல் செய்திருக்கும் காளி நாய்க்குப் பயிற்சி அளித்தவரைப் பாராட்டினால் தகும். தருமனாக வரும் குணாநிதி, உணர்வுகளை வெளிப்படுத்தத் தோதான காட்சிகளில் தனதுதிறனைக் காட்டியிருக்கிறார். ஆக் ஷன் காட்சிகளில் வேகம்போதாது. இவருடைய நண்பர்களாக வரும் இதயகுமார், மாஸ்டர் அஜய் இருவரும் அந்த மண்ணின் மைந்தர்களாகவே மாறியிருக்கிறார்கள்.
கதையில் இழையோடும் உணர்வுகளின் நிழலைப் பாடல்களாகவும் பின்னணி இசையாகவும் நேர்த்தியாகப் பிரதிபலித்திருக்கிறார் அஜீஸ். பாண்டிக்குமாரின் ஒளிப்பதிவு, வனம், மலை அங்குள்ள வாழ்க்கையை உயிர்ப்புடன் நம்முன் வைக்கிறது. உயிரின் மதிப்பை எடைபோடும் தராசில்மனிதனையும் அவன் நேசிக்கும் விலங்குகளையும்சமமாக வைக்கும் இப்படம், குறைகளை மீறி தன் பேசுபொருளால் ஈர்க்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT