Published : 28 Dec 2024 07:36 AM
Last Updated : 28 Dec 2024 07:36 AM

‘தி ஸ்மைல் மேன்’ - திரை விமர்சனம்

ஒரு விபத்துக்குப் பிறகு மறதி நோயின் தாக்கத்தால் அவதிப்படுகிறார் சிதம்பரம் (சரத்குமார்). சிறப்புப் புலனாய்வுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான அவருடைய நினைவுகள் அனைத்தும் வெகு விரைவில் மறந்து போய்விடும் என்கிறார் மருத்துவர். இப்படிப்பட்டச் சிக்கலான நிலையில், ஒரு ‘சீரியல் கில்லர்’ வழக்கைக் கையிலெடுக்க வேண்டிய கட்டாயம் காரணமாக மீண்டும் பணியில் இணைகிறார். அவராலும் அவருடைய குழுவினராலும் அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர முடிந்ததா என்பது கதை.

முதன்மைக் கதாபாத்திர அறிமுகம், அவருக்கான பிரச்சினை, அவர் மீண்டும் பணியில் இணைய வேண்டிய கட்டாயம் ஆகியவற்றை அறிமுகம் செய்யும் தொடக்கக் காட்சிகள் எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன. ஆனால், மக்களும் காவல் துறையும் முடிந்துவிட்டதாக நினைக்கும் ஒரு வழக்கைத் கிளறத் தொடங்கும் காட்சிகள் நத்தை வேகத்தில் நகர்கின்றன. சிதம்பரத்தின் புலனாய்வுக் குழுவில் இருப்பவர்கள் உருப்படியாக ஏதாவது கண்டுபிடிக்க மாட்டார்களா என்று இடைவேளை வரை புலம்ப வைக்கிறார்கள்.

முதல் பாதியின் இந்தச் சிக்கலைப் போக்கும் விதமாக இரண்டாம் பாதித் திரைக்கதையிலும் காட்சிகளிலும் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார் திரைக்கதை - வசனத்தை எழுதியிருக்கும் ஆனந்த். குறிப்பாக சைக்கோ கொலைகாரன் யார் என்பதை வெளிப்படுத்தும் இடம், அவன் எதற்காகக் கொலைகளைச் செய்கிறான் என்கிற காரணம் ஆகியவற்றை வலுவாக அமைத்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகரின் பங்களிப்பும் வெல்டன்!.

மற்றொரு மூத்த புலனாய்வு அதிகாரியான வெங்கடேஷ் கதாபாத்திரம் செய்யும் என்கவுன்ட்டரின் பின்னணி ஏற்றுக்கொள்ள முடியாத அபத்தம். சிதம்பரம் நெடுமாறனாக வரும் சரத்குமார் ‘போர்த் தொழிலை’ நினைவுபடுத்தாமல், இது வேறொரு களம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார். கிளைமாக்ஸில் வரும் ஆக்‌ஷன் காட்சியில் அதகளம் செய்துவிடுகிறார். செவிலியராக வரும் இனியா, அவருடைய மகளாக வரும் சிறுமி, ஜார்ஜ் மரியான் ஆகியோர் நம்பகமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். சிஜா ரோஸ் வீணடிக்கப்பட்டிருக்கிறார்.

கதையில் இடம்பெற்றுள்ள கொலைகள் எப்படி நடந்தன என்பதைக் காட்டி, ரசிகர்களைத் தேவையில்லாமல் மாசுபடுத்தாமல் விட்ட காரணத்துக்காகவே படத்தை இணைந்து இயக்கியிருக்கும் ஷ்யாம் - பிரவீன் இருவரையும் பாராட்டலாம். படத்தில் வரும் சிபிசிஐடி அலுவலகம், சிதம்பரத்தின் வீடு, கொலை நடக்கும் இடங்கள் ஆகியவற்றில் இருளும் மர்மமும் இருக்கும்படி காட்சிகளைப் பதிவு செய்து பயமுறுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன். கவாஸ்கர் அவினாஸின் பின்னணி இசை கூடுதல் மர்மத்தை உணரவைக்கிறது.

முதல் பாதிப் படத்தின் மெல்லோட்டத்தைப் பொறுத்துக்கொண்டால், இரண்டாம் பாதியில் ஸ்மைல் மேனின் தாக்கத்தை அனுபவிக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x