Last Updated : 22 Dec, 2024 08:34 PM

 

Published : 22 Dec 2024 08:34 PM
Last Updated : 22 Dec 2024 08:34 PM

‘தனிப்பட்ட முறையில் எதையும் செய்ததாக நினைவில்லை’ - இயக்குநர் பாலா உருக்கம்

எந்த ஒரு அன்பர்களுக்கும் தனிப்பட்ட முறையில் எதையும் செய்ததாக நினைவில்லை என்று இயக்குநர் பாலா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இயக்குநர் பாலாவின் 25-ம் ஆண்டு திரைப்பயணம் மற்றும் ‘வணங்கான்’ இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதற்கு அரசியல் கட்சித் தலைவர், நடிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நேரடியாக விழாவில் கலந்துக் கொண்டு பாலாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பாலா.

அதில் “25-ம் ஆண்டு திரைப்பயண விழா மற்றும் ‘வணங்கான்’ இசை வெளியீட்டு விழா நானே எதிர்பாரா அளவிற்கு என்னை இன்பக்கடலில் மூழ்கடித்து விட்டது. எத்தனை எத்தனை அன்பு உள்ளங்கள், அத்தனை பேரும் வந்திருந்து வாழ்த்திச் சென்றதில் என் உள்ளம் மகிழ்ந்து நிறைந்தேன். நேரில் வர இயலாத சூழலில் பலரும் தொலைபேசி வாயிலாக அழைத்தும் வாழ்த்து மழை பொழிந்தனர்.

நான் எந்த ஒரு அன்பர்களுக்கும் தனிப்பட்ட முறையில் எதையும் செய்ததாக நினைவில்லை. ஆனால், இந்த அத்தனை பேரும் என் மீதான அன்பின் மிகுதியால் இப்படி வாழ்த்துகளை வாரிக் குவித்துவிட்டனர். இடைவிடாத மக்கள் பணியிலும் எனக்காக நேரம் ஒதுக்கி வாழ்த்துச் செய்தி அனுப்பிய ஒவ்வொரு தலைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

குறிப்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடியார், தொலைபேசி மூலம் பேசி அன்பு பாராட்டிய விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நிகழ்ச்சிக்கு நேரிலேயே வந்து வாழ்த்திய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தொலைபேசி வாயிலாக அன்புமழை பொழிந்த மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழக சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, தனியரசு முதலியோருக்கும் என் அன்பின் பணிவான நன்றி.

வர இயலாத சூழலைச் சொல்லி வருந்தி, என்னை பற்றியே என்ணி, என் மீது அக்கறை கொண்டு கடிதம் எழுதிய என் முன்னத்தி ஏர் இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்கும் என் நெகிழ்வான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சிக்காக உழைத்த கலைஞர்கள், தொழிலாளர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் தனித்தனியாகக் குறிப்பிட்டு நன்றி சொன்னால் அது மிக மிக நீண்ட கடிதமாகிவிடும் என்பதால்…. அனைவருக்கும் என்றென்றும் நன்றி!” என்று தெரிவித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வணங்கான்’. ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x