Published : 20 Dec 2024 02:56 PM
Last Updated : 20 Dec 2024 02:56 PM
முதல் பாகத்தின் இறுதியில் கைது செய்யப்படும் தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியாரின் வாக்குமூலங்களும், காவல்துறை ரியாக்சன்களும்தான் ‘விடுதலை பாகம்-2’ படத்தின் ஒன்லைன்.
பன்னாட்டு நிறுவனத்துக்கு மலை கிராமம் ஒன்றில் கனிம சுரங்கம் அமைக்க அரசு கொடுக்கும் அனுமதியை எதிர்த்து அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் கடைநிலை காவலரான குமரேசனால் கைது செய்யப்படுவதோடு, முதல் பாகம் முடிந்திருந்திருக்கும். அதைத்தொடர்ந்து, நடந்த சம்பவங்களை விளக்கி தனது தாய்க்கு எழுதிய கடிதத்தை குமரேசன் படிப்பது போல் தொடங்குகிறது விடுதலை படத்தின் இரண்டாம் பாகம்.
முதல் பாகத்தில், மலை கிராம மக்களின் வாழ்வியலையும் தேடுதல் வேட்டை என்ற பெயரில், காவல்துறை நடத்தும் அத்துமீறல்களையும் சமரசமற்று பதிவு செய்திருந்த இயக்குநர் வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் களப்போராளிகளின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வியல் வலிகளை உருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார். தலைமறைவு, கைது, கண்ணீர், கொடூர மரணங்கள் என பிணைந்திருக்கும் இயக்கவாதிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை டிஜிட்டல் யுகத்தில் ஆவணப்படுத்தியதோடு, ஓர் இளம் தலைமுறைக்கு அரசியல் பாடம் கற்பித்திருக்கிறார் இயக்குநர்.
விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில், பண்ணை அடிமை முறை, உழைக்கும் சமூகத்து பெண்களை தங்களது உடைமையாக கருதும் பண்ணைகளின் வக்கிரம், கூலி உயர்வு கேட்டதால் நிகழ்த்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான மரணங்கள் என இயக்குநர் வெற்றிமாறன், பலதரப்பட்ட சம்பவங்களை பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக, பெருமாள் வாத்தியார் யார்? அவர் எப்படி இந்த தமிழர் மக்கள் படையை கட்டமைத்தார்? அவருக்கான அடிப்படைத் தத்துவக் கோட்பாட்டுகள் என்ன? அவரை உருவாக்கியது யார்? ஆயுதப் போராட்டத்தை அவர் கையில் எடுத்ததற்கான காரணம் என்ன? என்பதுதான் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை.
‘துணைவன்’ சிறுகதையின், மையப் புள்ளியை மட்டும் எடுத்துக் கொண்டு, அதில் தனது கற்பனையைக் கலந்து வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கியிருந்தாலும், இரண்டாம் பாகத்தில் பேசப்பட்டுள்ள பல சம்பவங்கள், தமிழ் நிலத்தின் கடந்தகால அரசியல் வரலாற்றை நிழலாடச் செய்தால் அது தற்செயலே. இந்த நிலத்தில் சிவப்பு மற்றும் கருப்பு நிற அரசியல் தோன்றுவதற்கான அவசியத்தையும், அதன் ஆரம்பத்தையும் ரத்தம் தெறிக்க தெறிக்கப் பேசியுள்ள இந்தப்படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, சுப்ரமணிய சிவா, சேத்தன், இயக்குநர் தமிழ், பாவெல், பாலாஜி சக்திவேல், வங்கப் போராளியாக வந்து செல்லும் அனுராக் காஷ்யப் என படத்தில் வரும் ஒவ்வொருவரின் பங்களிப்பும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. தோழர் கே.கே.கதாபாத்திரத்தில் வரும் கிஷோரின் இயல்பான நடிப்பு படத்துக்கு ஆகச்சிறந்த பங்களிப்பைத் தந்திருக்கிறது. முதுமையும், அனுபவமும் கொண்ட அரசியல்வாதியாக வாழ்ந்திருக்கிறார்.
இப்படத்தில் வரும் காதல் காட்சிகளில் வெற்றிமாறன் வாகை சூடியிருக்கிறார். அழுக்கும், ரத்தமும் படிந்த இயக்கவாதிகளின் போலித்தனமில்லாத காதலை விஜய் சேதுபதியும்-மஞ்சு வாரியரும் பரிமாறிக் கொள்ளும் விதம் சிறப்பு. படத்தில் வரும் காட்சிகள் தோறும் மின்னியிருக்கும் மஞ்சு வாரியாரின் கண் ‘மை’க்குள் கொள்கைவாதியான பெருமாள் வாத்தியாரை சிக்க வைத்திருக்கும் இடம் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக, மஞ்சு வாரியாரின் தலைமுடி நறுக்கப்பட்ட வருத்தம், ட்ரெய்லர் பார்த்த பலருக்கும் இருப்பதை உணர்ந்த வெற்றிமாறன், அருமையான விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார். இனி தலைமுடியை வெட்டிக்கொள்ளும் கலாச்சாரம் அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சாதி, வர்க்கம், உழைப்புக்கேற்ற ஊதியம்,வளக் கொள்ளை, மனித உரிமை மீறல்கள், அரசு நடவடிக்கை, காவல்துறை அராஜகம் என இரண்டாம் பாகத்தில் வரும் சம்பவங்கள் அனைத்துமே, இன்றும்கூட நாம் பத்திரிகை, ஊடகங்களில் கடந்து செல்லும் செய்திகள்தான். ஆனால், இந்தப் படம், காலில் செருப்பு அணிவது தொடங்கி, உழைப்புக்கேற்ற கூலி, வார விடுமுறை, ஊதிய உயர்வு, தீபாவளி மற்றும் பொங்கல் போனல் வரை இன்று பலர் அனுபவிக்கும் உரிமைகளுக்குப் பின்னால், காணா பிணங்களாகவும், துண்டு துண்டாக இரக்கமின்றி கொல்லப்பட்ட பல இயக்கவாதிகளின் சதைகளும் ரத்தமும் மறைந்திருப்பதை உரக்கப் பேசியிருக்கிறது.
விஜய் சேதுபதி, பாடசாலை வாத்தியார், சட்டத்தை மதிக்கும் மனிதர், கம்யூனிச இயக்கவாதி, சங்கம் அமைக்கும் தொழிற்சங்கவாதி, ஆயுதப் போராட்டக்குழுத் தலைவர், காதலன், கணவரென பல பரிமாணங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார். அவருக்கு இணையராக வரும் மஞ்சு வாரியர் வசீகரித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் உழைப்பு இரண்டாம் பாகத்தில் வியக்க வைத்திருக்கிறது. படத்தில் இளவரசு, ராஜீவ் மேனன், சுப்ரமணிய சிவா மற்றும் காவல்துறை உயரதிகாரியோடு உரையாடும் காட்சியில் இருந்து, படத்தின் பல இடங்களில் கேமரா மூவ்மென்ட்ஸ்களில் ரசிக்க வைத்திருக்கிறார்.
கென் வரும் சண்டைக் காட்சியை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் வெகுசிறப்பு. அதேபோல், இறுதிக் காட்சியின் தேடுதல் வேட்டை, விஜய் சேதுபதி நடந்த கதைகளை விவரிக்கும் காட்சிகளென, வேல்ராஜ் தனது கேமிரா லென்சுடன் நம் கண்களைப் பொருத்தி பரவசப்படுத்தியிருக்கிறார். பின்னணி இசையில் இளையராஜா மிரட்டுகிறார். காதல் காட்சிகளில் கிடாரில் மிருதுவாகவும், வன்முறைக் காட்சிகளில் ட்ராம்போனில் பதற்றத்துடனும் நம் செவிகளுக்குள் புகுந்து கொள்கிறது அவரது இசை.
வெற்றிமாறன் தனக்கு கிடைத்த இரண்டரை மணி நேரத்துக்குள் இந்த சமூகத்தில் நடந்த, நடக்கின்ற, சமூக அநீதிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லிவிட எத்தனிக்கிறார். இது படத்தின் வேகத்தைக் குறைப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி விடுகிறது. குறிப்பாக, முதல் பாதியில், ஆங்காங்கே பிரச்சார நெடி அடிக்கிறது. அதை தவிர்த்திருக்கலாம். ஆனால், அதேநேரம், “நிலம், இனம், மொழின்னு மக்கள ஒன்னு சேர்க்குற வேலைய நாங்க செய்ய ஆரம்பிச்சப்போ, நீங்க கட்டமைச்ச சாதி, மதம், பிரிவினை வாதத்தால அரசியல் பண்ண முடியாம போச்சு”, “வன்முறை எங்க மொழியில்ல, ஆனா எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும்”, “தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றத்துக்கு உதவாது” உள்ளிட்ட அவரது அழம் செறிந்த வசனங்கள், ஆணிவேர் வரை சென்று அடித்தூறை ஆட்டம் காணச் செய்திருக்கிறது.
அதேபோல், இரண்டாம் பாகத்தில், நடந்த சம்பவங்களை விளக்கி சூரி ஒரு கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார். அதன் மேல் விஜய் சேதுபதியின் கதை சொல்லப்படுகிறது. இடைப்பட்ட நேரத்தில், கைது செய்யப்பட்ட விஜய் சேதுபதியை பத்திரமாக மாற்று இடத்துக்கு கொண்டுச் செல்லும் காட்சிகளும், உரையாடல்களும் நிகழ்கிறது. இதனால், ஒரு வசனம் முடிந்து மற்றொரு வசனம் வருவதற்குள் ஓவர்லேப்ல டயலாக்குகள் வந்துவிடுவதால், நிறைய வசனங்களை முழுமையாக கேட்க முடியவில்லை. இப்படத்தின் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், அது தேவையின்றி பொருத்தப்பட்ட இடைச்செருகல் போன்ற உணர்வை மட்டுமே கொடுக்கிறது. படத்தில் வரும் வன்முறைக் காட்சிகளில் அதிகமான ரத்தம் தெறித்திருக்கிறது. ஆயுதப் போராட்டமும், வன்முறையும் விடுதலைக்கு வழிவகுக்காது, என்பதை பெருங்கதையாடல் மூலம் விளக்கி, ஜனநாயக நாட்டில் குடிமக்களின் வாக்குரிமை ஆயுதங்களைவிட ஆபத்தானது என்பதை பேசும் இடங்களில் பளிச்சிட்டிருக்கிகிறது, வெற்றிமாறனின் அரசியல்.
5 பேரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஓர் உயிரை எடுக்கத்துணியும் அரசு நிறுவனங்களின் கழிவிரக்க சிந்தனையை, தனது கூரான வசனத்தால் கிழித்தெறியும் வெற்றிமாறன். படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் மற்றும் காட்சிகளினுடே அதை விவரித்திருக்கும் விதத்தில் வெகுவாக ஈர்த்திருக்கிறார். வளர்ச்சி என்ற பெயரில் அரசு கொண்டு வரும் எந்த ஒரு திட்டத்தாலும், ஒரு நபரோ, ஒரு குடும்பமோ, ஒரு தெருவோ, ஒரு ஊரோ பாதிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவரின் பக்கம் நின்றுதான் அதை அணுக வேண்டும் என்று அரசுக்கு பாடம் புகட்டியிருப்பது சிறப்பு.
வணிக வீதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொது இடங்கள், பூங்காக்கள், அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் கம்யூனிஸ்ட் இயக்க கொடிகளுடன் உண்டியல் ஏந்தி வருபவர்களை பார்த்திருப்போம். அவர்கள் துண்டு பிரசுரங்களைக் கொடுத்து எதற்காக நிதி வசூலிக்கிறோம் என்பதை விளக்கி நிதி வசூலிப்பார்கள். அந்த பிரசுரங்களில் அரசப் பயங்கரவாதம், ஏகாதிப்பத்தியம், எதேச்சதிகாரம், வர்க்கம், முதலாளித்துவம், சர்வாதிகாரம், அடக்குமுறை, ஓடுக்குமுறை, ஜனநாயகம், சோஷலிசம், புரட்சியென நம் அன்றாட வாழ்க்கையில் அடிக்கொரு முறை பேசாத வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். இவை எல்லாம் என்ன? எதை அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்? என்பதற்கான தேடலின் தொடக்கம் தான் இந்த ‘விடுதலை பாகம்-2’!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT