Published : 27 Jul 2018 04:30 PM
Last Updated : 27 Jul 2018 04:30 PM
பரம்பரை சொத்தை மீட்பதையே லட்சியமாகக் கொண்ட ஒரு டான் காதலில் விழுந்தால் அதுவே ‘ஜுங்கா’.
கோவையில் பஸ் கண்டக்டராகப் பணிபுரியும் ஜுங்கா (விஜய் சேதுபதி) மடோனாவைக் காதலிக்கிறார். ஒரு பிரச்சினையில் மூஞ்சியில் குத்து வாங்கிய தாக்கியவர்களைப் புரட்டி எடுக்கும் அவர், தன் தாய் (சரண்யா பொன்வண்ணன்) மூலம் தான் டான் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்துகொள்கிறார். தாத்தா, அப்பா இழந்த சினிமா பாரடைஸ் தியேட்டரை சொந்த முயற்சியால் மீட்கும் லட்சியத்துடன் சென்னை செல்கிறார். அங்கு சினிமா பாரடைஸ் தியேட்டர் முதலாளி செட்டியாரை (சுரேஷ் மேனனை) சந்தித்து ரூ.1 கோடி பணம் கொடுத்து தியேட்டரை தன் பெயருக்கு எழுதித் தரக் கேட்கிறார். ஆனால், அவர் மறுக்கிறார். இதனால் வெகுண்டெழும் விஜய் சேதுபதி சுரேஷ் மேனன் முன்பு சவால் விடுகிறார். அந்த சவால் என்ன, தியேட்டர் யாருக்கு, விஜய் சேதுபதியின் காதல் என்ன ஆனது போன்ற கேள்விகளுக்கு கொஞ்சம் சுற்றிவளைத்துப் பதில் சொல்கிறது ‘ஜுங்கா’.
'ரௌத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' படங்களை இயக்கிய கோகுல், 'ஜுங்கா'வில் மாஃபியா நகைச்சுவையைத் தூவி இருக்கிறார். ஆனால், அது படம் முழுக்க எடுபடவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.
பஸ் கண்டக்டர், டானுக்கான தோற்றம், தாத்தா பெயர் லிங்கா, அப்பா பெயர் ரங்கா, டான் பாடும் பாடல் என ரஜினி ரெஃபரன்ஸ் படத்தில் அதிகம். விஜய் சேதுபதி படம் முழுக்க வழக்கமான அட்அதகளம் செய்திருக்கிறார். முகத்தில் குத்து வாங்கும்போதே அடடா... இதிலும் அடிக்கத் தெரியாத சேதுவா என்று அயர்ந்து போகும் சூழலில் திருப்பி அடித்து நம்மை நிமிர வைக்கிறார். டிக்கெட் எடுக்காதவர்களை மைண்ட் மேப்பில் கண்டறிந்து டிக்கெட் எடுக்க வைப்பது, அடியாள் தேடலில் சில ஆயிரங்கள் செலவு செய்த கோபத்தில் ரவுடிகளை மொத்தி எடுப்பது, சென்னையில் டான் ஆக ஃபார்ம் ஆவது, பெரிய டான்களை ஜஸ்ட் லைக் தட் டீல் செய்வது, காதலில் விழுவது, பாசமுள்ள மகனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வது என நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை. யோகி பாபுவுடன் சேர்ந்து நகைச்சுவையிலும் தனித்தடம் பதிக்கிறார்.
சயிஷா படம் முழுக்க அழகோவியமாக மட்டுமே வருகிறார். நன்றாக நடனம் ஆடுகிறார். நடிப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை. கிடைத்த கேப்பில் மிக நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார் ராதாரவி. அதுவும் ரவுடிகளுக்கு நேர்ந்த கதியை தன் பாணியில் அவர் சொல்லும் விதம் செம்ம.
மடிப்பு கலையாத கோட் சூட்டில் கம்பீரமாக வரும் சுரேஷ் மேனனுக்குப் படத்தில் பெரிதாக எந்த வேலையும் இல்லை. மடோனா செபாஸ்டியன் ஒரு பாடலுக்குப் பயன்பட்டிருக்கிறார். சுந்தரத் தெலுங்கில் பேசும் அவர் கவுரவத் தோற்றத்திற்கான பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்.
டான் அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன் அநாயசமாக நடித்து பிரமாதப்படுத்துகிறார் என்றால், டான் பாட்டியாக நடித்திருக்கும் விஜயா பாட்டி அப்ளாஸ்களை அள்ளிக்கொள்கிறார். பம்முவது, பாய்வது என இருவித பரிமாணங்களை அவர் வெளிப்படுத்தும் தோரணையே அலாதி அழகு.
யோகி பாபுவைக் கண்டாலே தியேட்டர் கைதட்டுகிறது. அவர் பேசும் கவுண்ட்டர் வசனங்களுக்கு விசில் பறக்கிறது. நகைச்சுவைப் பாத்திரத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்வதோடு பொறுப்பான குணச்சித்திரக் கதாபாத்திரத்தை கண்முன் நிறுத்தி அழுத்தமாக மனதில் இடம் பிடிக்கிறார்.
டட்லியின் ஒளிப்பதிவும், சித்தார்த் விபினின் இசையும் படத்திற்குப் பலம். பாடல்கள் பொருத்தமில்லாத இடங்களில் துருத்திக்கொண்டு வேகத்தடையை ஏற்படுத்துகின்றன.
படத்தின் ஆரம்பத்தில் செய்யப்படும் ஸ்ஃபூப் வகை கலாய்ப்புகள் ரசிக்க வைக்கின்றன. மணிமாறன், துரைசிங்கம், என்கவுன்ட்டர், சிக்கனம் என்ற பெயரில் கஞ்சத்தனம் செய்யும் டான், 500 ரூபாய்க்கு கொலை செய்வதாகத் திட்டமிடும் டான் என படம் முழுக்க சுவாரஸ்யங்கள் நீள்கின்றன. ஒரு ஜீப்பை எடுத்துக்கொண்டு தப்பைத் தட்டிக்கேட்க புறப்படும் டான் குழு, வரும் வழியில் ஷேர் ஜீப்பாக மாறி காசு வசூல் செய்வதும், டிக்கெட் காசு தராமல் போகும் பயணிகளைக் கண்டறிந்து கறார் காட்டுவதும், லட்சக்கணக்கில் செலவு செய்ததை உணர்ந்த பிறகு விஜய் சேதுபதி புலம்பும் காட்சியும் செம்ம.
டான் யூனியன் மீட்டிங்கில் பிஸ்கெட், போவண்டா இருப்பது, டானுக்கான விதிமுறைகளை நிர்ணயிப்பது என ப்ளாக் ஹியூமரிலும் பின்னி எடுக்கிறார்கள்.
கதாபாத்திரத் தேர்வில் கவனிக்க வைத்த இயக்குநர் கோகுல், அவர்களின் பாத்திர வார்ப்பில் கோட்டை விட்டிருக்கிறார். எதைச் சொன்னாலும் நம்பிவிடும் கிளிப்பிள்ளையாக கார்ப்பரேட் தொழிலதிபர் இருப்பதும், முன்பின் வந்திராத வெளிநாட்டில் இருந்துகொண்டு பிரான்ஸ் போலீஸ், தீவிரவாதக் கும்பல் எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு விஜய் சேதுபதி தப்பிப்பதும் நம்பும்படியாக இல்லை. எப்படி இது சாத்தியம் என்று இரண்டாம் பாதி முழுக்க கேள்விகள் நீள்கின்றன.அவற்றுக்குப் பதில்கள் கிடைக்கவில்லை. ஆனால், சிரிக்க வைக்க வேண்டும் என்ற இயக்குநரின் குறிக்கோள் மட்டும் நிறைவேறி இருக்கிறது. அந்த வகையில் ‘ஜுங்கா’ டைமிங் படம்.
பாலாஜிக்கு மறுபடியும் வெளிய ஒரு பிக்பாஸ் வெயிட்டிங் - நித்யா @ தேஜு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT