Published : 18 Dec 2024 09:39 PM
Last Updated : 18 Dec 2024 09:39 PM
சென்னை: “2000-ம் ஆண்டு இயக்குநர் பாலாவிடம் இருந்து எனக்கு அந்த தொலைபேசி அழைப்பு வரவில்லை என்றால், இந்த வாழ்க்கை எனக்கு கிடைத்திருக்காது. ‘நந்தா’ படம் பார்த்துவிட்டு தான் கவுதம் வாசுதேவ் மேனன் ‘காக்க காக்க’ படத்தில் நடிக்க அழைத்தார். அதன்பிறகு இயக்குநர் முருகதாஸ் அழைத்தார். இவை எல்லாவற்றிற்கும் காரணம் இயக்குநர் பாலா தான்” என நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுடன், 25 ஆண்டுகளை கடந்த பாலாவின் திரைப்பயணத்தையும் இணைத்து ‘பாலா 25’ என்ற பெயரில் கொண்டாடும் நிகழ்வு சென்னை நந்தம்பாக்கம் வர்த்த மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, விக்ரமன், மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் சூர்யா, “இயக்குநர் பாலாவின் ‘சேது’ திரைப்படம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நடிகரால் இப்படியெல்லாம் நடிக்க முடியுமா? ஒரு இயக்குநரால் இப்படி ஒரு படத்தை இயக்க முடியுமா என்று தோன்றியது. பல நாட்கள் ‘சேது’ படத்தின் தாக்கம் எனக்குள் இருந்தது. அடுத்த படம் உன்னை வைத்து இயக்குகிறேன் என பாலா சொன்ன ஒரு வார்த்தை எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. 2000-ம் ஆண்டு எனக்கு அந்த தொலைபேசி அழைப்பு வரவில்லை என்றால் எனக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்காது.
‘நந்தா’ படம் பார்த்துவிட்டு தான் கவுதம் வாசுதேவ் மேனன் ‘காக்க காக்க’ படத்தில் நடிக்க அழைத்தார். அதன்பிறகு இயக்குநர் முருகதாஸ் அழைத்தார். இவை எல்லாவற்றிற்கும் காரணம் இயக்குநர் பாலா தான். உறவுகளுக்கு தனது படங்களில் பாலா மதிப்பு கொடுப்பார். பாலா அண்ணன் என்கிற ஒரு வார்த்தை வெறும் வார்த்தையல்ல. அது ஒரு உறவு. நிரந்தரமான உறவு. இந்த வாழ்க்கை கொடுத்ததற்கு என்னுடைய அன்பும், மரியாதையும். ‘வணங்கான்’ முக்கியமான படமாக இருக்கும்” என்றார் சூர்யா.
தொடர்ந்து இயக்குநர் பாலா பேசுகையில், “நான் சூர்யா முன்னாள் சிகரெட் பிடிக்க மாட்டேன். தம்பி வருத்தப்படுவான். என் உடம்பு மேல என்னை விட அவனுக்கு அக்கறை அதிகம்” என்றார். சூர்யா கூறுகையில், “எனக்கு முதன் முதலில் சிகரெட் பிடிக்க சொல்லிக் கொடுத்தது பாலா தான். ‘நந்தா’ படத்தின் முதல் காட்சியில் எனக்கு சிகரெட் பிடிக்க தெரியவில்லை. பிறகு பல முறை முயற்சி செய்து கற்றுக்கொண்டேன். இன்றைக்கு ரோலக்ஸ் கதாபாத்திரம் வரை அது பயன்படுகிறது” என்றார்.
பாலா இயக்கியுள்ள ‘வணங்கான்’ படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானது சூர்யா தான். ஆனால், சில நாட்கள் படப்பிடிப்புக்குப் பின் சூர்யா - பாலா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்திலிருந்து சூர்யா வெளியேறிய நிலையில், தற்போதைய சூர்யா பேச்சு கவனம் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT