Published : 12 Dec 2024 10:05 PM
Last Updated : 12 Dec 2024 10:05 PM
சில சினிமாக்கள்தான், படம் வெளியாவதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் மிகப் பிரமாண்டமான எதிர்பார்ப்பை உருவாக்கும். அதற்குப் பல காரணங்கள் இருப்பினும் பகுத்தறிய முடியாத காரணங்களும் அதன் பின்னால் தொழிற்படுகின்றன. ஏற்கெனவே சூப்பர் ஸ்டாராகியிருந்த ரஜினியை ஒரு கடவுள் உருவாக மாற்றிய ‘தளபதி’ படத்துக்கும் அப்படியான எதிர்பார்ப்பு படம் வருவதற்கு முன்பே உருவாகியிருந்தது.
மகாபாரதக் கதையைச் சமகாலக் கதையாக மாற்றியுள்ளார் மணிரத்னம் என்ற செய்தி முன்பே வெளியானது. ரஜினி கர்ணன் என்றும், மம்மூட்டி துரியோதனன் என்றும், அரவிந்தசுவாமி அர்ஜுனன் என்றும் பாத்திரங்கள் ஏற்கனவே ரசிகர்கள் மனதில் உருவாக்கப்பட்டுவிட்டன. ரஜினி முதல்முதலாக இப்படத்திற்காக ஒரு கோடி ரூபாயைச் சம்பளமாகப் பெற்றார் என்றும் தகவல்கள் வெளியாயின. இப்படத்தின் பூஜை அன்று ரஜினி, இளையராஜா, மம்மூட்டி மூவருக்கும் வீரவாள் ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது. பனியன்கள், தொப்பிகள், கீ செயின்கள் இப்படத்தின் பெயரில் வெளியானது. தளபதி பெயர், சம்பிரதாய எழுத்துருக்களைப் பயன்படுத்தாமல் நவீன வடிவத்தில் எழுதப்பட்டுப் பெரும் வரவேற்பையும் பெற்றது.
ஏ.ஆர். ரஹ்மானுக்கு முன்பாக உலகம் அதிக அளவில் கேட்ட தமிழ் பாடல் ‘ராக்கம்மா கையத் தட்டு’வாகத்தான் இருக்க வேண்டும். இந்தப் படத்தில் இளையராஜா ஒரு புதிய துள்ளலைச் சாத்தியப்படுத்தியிருந்தார். பி.பி.சி. நிறுவனத்தினர் அக்காலத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில், டாப் 10 வரிசையில் உலகெங்கும் கேட்கப்படும் பாடல் என்ற அந்தஸ்தை ராக்கம்மா கையத்தட்டு பெற்றது. மித்தாலி என்ற பாடகி பாடிய ‘யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே’ பாடலும் படம் வருவதற்கு முன்பே புகழ்பெற்றது. ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலும் அது உருவாக்கிய காட்சிகளும், உணர்வலைகளும் இளையராஜாவின் பாடல்களில் அழியாப் புகழ் கொண்டவை.
கர்ணன் பாத்திரம், சிவாஜி வாயிலாக அகலாத நினைவாக ஏற்கனவே தமிழகத்தில் சினிமா ரசிகர்கள் மனதில் பெற்றிருந்தது. இது ரஜினி ஏற்கும் கதாபாத்திரத்துக்குக் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ரஜினி, அரசியலுக்கு வருவார் என்ற ஆரூடங்களும் தளபதியைச் சுற்றிய காலகட்டத்தில்தான்தான் உருவாகத் தொடங்கியது. அப்போது மிகப் பெரிய நாயக வெற்றிடம் சமூகத்திலும் உருவாகியிருந்தது. எம்.ஜி.ஆரின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடம் அது. நேற்றைய மனிதன், இன்றைய தளபதி, நாளைய மன்னன் என்று சுவரொட்டிகள் ரஜினியின் அரசியல் தலைமையை எதிர்பார்த்து ரசிகர்களால் ஒட்டப்பட்டன.
இத்தனை எதிர்பார்ப்புகளோடு 1991ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான தளபதியின் முதல் காட்சி அதிகாலை 3 மணிக்குத் திரையிடப்பட்டது. அடுத்தடுத்துக் கிட்டத்தட்டப் பத்து, பதினைந்து நாட்கள் தமிழகம் முழுவதும் காலை 5 மணிக்கே முதல் காட்சியைத் தொடங்கிய சினிமாவும் தளபதியாகத்தான் இருக்க வேண்டும். காலையில் சிறப்பு வகுப்பு என்று பள்ளிக்குக் கிளம்பிப் போவதுபோலக் கிளம்பி, படம் பார்த்துவிட்டு ஒன்பது மணிக்கே பள்ளிக்கு மாணவர்கள் வர முடிந்தது.
தமிழ் சினிமாவில் நாயகன், சத்யா, உதயம் போன்ற படங்கள், குற்றம் மற்றும் வன்முறையைக் களனாகக் கொண்ட சினிமாவை அன்றைய சமூக, யதார்த்தச் சூழலோடு சேர்த்துச் சித்தரித்து மறுவரையறை செய்திருந்தன. மகாபாரதத்தை நவீன இந்தியாவில் எந்த நகரத்திலும் நடக்கும் தாதாக்களின் மோதல் கதையாக மணிரத்னம் தளபதியில் மாற்றினார். ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள திப்புசுல்தானின் சமாதி அருகில் உள்ள தொன்மையான குளம், மகாபலிபுரம் கல்தூண்கள், நர்மதை ஆற்றின் பிரம்மாண்ட பாலம், நாயகன் சூர்யாவைத் தொடரும் சூரியன் என இந்தப் படத்தின் காவியச் சாயலுக்கு அவர் மெனக்கெட்டிருப்பார். தாய்மை, காதல், நட்பு இவற்றுக்கு இடையே அல்லாடும் நாயகனை, கர்ணன் என்னும் காவியப் பாத்திரத்தின் சாயலில் புத்திசாலித்தனமாகப் பரிமாறவும் செய்தார்.
இளையராஜா தனது உச்சபட்ச படைப்புத்திறனை வெளிப்படுத்திய படங்களில் ஒன்று தளபதி. சூர்யா, குழந்தையாக ரயில் பெட்டியில் விடப்படும்போதே இளையராஜாவின் புல்லாங்குழல் மூச்சுவிடத் தொடங்கிவிடும். நீல நிறப் பின்னணியில் ஒடும் ரயில் காட்சியில் ‘சின்னத்தாய் அவள் தந்த ராசாவே’ என்ற பாடலுக்கு முன்னால் முனகிப் பிளிறும் புல்லாங்குழலைத் திரையரங்க இருட்டுக்குள் கேட்ட தருணத்தை எவரும் மறக்கவே முடியாது.
தளபதி வெளிவந்த அதே தீபாவளி அன்றுதான் கமலஹாசனின் குணாவும் வெளிவந்தது. குணா படம் அக்காலகட்டத்தில் பெரிய தோல்வியை அடைந்தது. தளபதியும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றுதான் விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது. தளபதி படத்தில் ரஜினி போலீஸ்காரர்களைத் திரும்பத் தாக்காமல் சித்திரவதைக்குள்ளாவதையும், காதலியை இன்னொருவரிடம் இழப்பதையும் ரசிகர்கள் விரும்பவில்லை என்று காரணம் கூறப்படுகிறது.
என்றாலும் தளபதி முக்கியமான ஒரு நிகழ்வு. சிறந்த இந்திய வெகுஜனச் சினிமா, மகிழ்ச்சி, துக்கம், கேளிக்கை, துய்ப்பு, எல்லாமும் சேர்ந்த திருவிழாத் தன்மை கொண்டது. இதன் பிரமாண்ட எடுத்துக்காட்டாகத் தளபதியை நிச்சயம் சொல்ல முடியும். சண்டைக் காட்சிகள் யதார்த்த வன்முறைக்கு அருகில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தின் பெயராலேயே இதன் ஸ்டன்ட் இயக்குனர் பின்பு ‘தளபதி’ தினேஷாக அறியப்பட்டார்.
தமிழ் சினிமாவில் வேகபாவத்தின் அடையாளமாக அறியப்பட்டிருந்த ரஜினி நடுப்பருவத்தை அடைந்திருந்த கட்டத்தில் அவரது ஆற்றல் குறையவே இல்லை என்று நிறுவின படம் தளபதி. தினேஷ் வடிவமைத்த சண்டைக் காட்சிகளுக்குத் திரையில் வலுவான உருவம் தந்ததில் ரஜினியின் படிமத்திற்கும் நடிப்புக்கும் முக்கிய இடம் உண்டு.
பிறப்பால் புறக்கணிக்கப்பட்ட, பிறப்பின் அடையாளம் காரணமாகவே குற்றவாளியாக வாழ நேர்ந்த ஒருவனின் துயரத்தையும், ஆற்றாமையையும் ரஜினி என்ற உச்ச நட்சத்திரம் அழகாகப் பிரதிபலித்தார். வெகு நாட்களுக்குப் பிறகு ‘நடிப்பதற்கு’ வாய்ப்பு கிடைத்ததும் இப்படத்தில்தான். புறக்கணிப்பின் வலியை, கழிவிரக்கத்தை, நாயகனுக்கேயுரிய கம்பீரத்தோடு அவர் மிதமாக வெளிப்படுத்தியிருப்பார்.
காதலியின் தந்தையுடன் மோதும் இடம், காவல் நிலையத்தில் அடிபடுவது, தம்பியிடம் பேசுவது ஆகிய காட்சிகளில், வாய்ப்பிருந்தால் பிரமாதமாகச் சோபிக்கக்கூடிய நடிகன் தான் என்று நிறுவியிருப்பார். அர்ஜுனின் தாய்தான் தன்னுடைய அம்மா என்ற உண்மை தெரிந்த பிறகு, கோவிலில் அம்மாவின் கூந்தலிலிருந்து உதிர்ந்த மல்லிகையைப் பார்த்தபடி உருகும் ரஜினியை அதற்குப் பிறகு நாம் பார்க்கவே முடியவில்லை.
| ‘இந்து டாக்கீஸ்’ சிறப்புப் பக்கத்தில் 2013-ல் எஸ்.ஆர்.எஸ் எழுதிய இந்தக் கட்டுரை, ‘தளபதி’ ரீரிலீஸை ஒட்டி இங்கே மறுபகிர்வாக வெளியிடப்படுகிறது |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT